நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறேன் ஆனால் அதற்கான பலன்களை என்னால் அனுபவிக்க முடியவில்லையே ; சிலர் எ ந்த கஷ்டமும் படுவதில்லை, ஆனால் சந்தோஷமாக இருக்கிறார்களே! என்றஎண்ணம் பலருக்கும் உண்டு. அவரவர் எண்ணம் போலே அவர் தம் வாழ்வு. வாழ்க்கையை மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம். இளம் வயதில் அதிக உழைப்பு- குறைந்த பலன். நடுத்தரவயதில் சமமான உழைப்பு- சமமான பலன். வயோதிகத்தில் குறைந்த உழைப்பு - அதிக பலன் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வாழ்க்கையில் அனைத்துமே சமமாகத்தான் நமக்குக் கிடைக்கின்றது. கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் போதே நமது வாழ்க்கை முடிந்துவிட்டால் ?? என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?? அப்படியானால் அதிக பலனைப் பெறுவதற்கான பொறுமை இல்லாத உங்களை உலகம் திரும்பப் பெற்றுக் கொண்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.!!!!!
வாழ்க்கை ஒரே இன்பமாக இருந்தால் திகட்டிவிடும். எனவே தான் சில பல கடினமான அனுபவங்கள் வாழ்க்கைக் கரும்பைப் போல இனிமையானது. நுனிக்கரும்பின் சுவையை விட அடிக்கரும்பின் சுவை அபரிமிதமானது. சுவையான, தித்திப்பான, பகுதிகளுக்கிடையே கடினமான, சுவை குறைந்த ஒரு சிறு பகுதி ( கணு ) . இதனைக்கடித்து, மென்றுத் துப்பினால் தான் சுவையான மற்றொரு பகுதியை நாம் பெற முடியும். துன்பங்கள் வாழ்வின் இன்பத்தை நமக்கு உணர்த்துகின்றன. தொடர்ந்து இனிப்பையே உண்பவர் நாளடைவில் இனிப்பைத்தவிர வேறு சுவை கிட்டாதா!! என்று ஏங்குபவர் போல நமது நிலை மாறிவிடக் கூடாது. எனவே தான் நமது வாழ்க்கையில் இன்பம், துன்பம், கவலை, மகிழ்ச்சி, நஷ்டம், இலாபம், உறவு, பிரிவு, என்று பலவகையான சுவைகளைப் பெற்றிருக்கிறோம்.
ஓர் சுவையில் ஊறி மயங்கிவிடாது, எச்சுவையையும் ருசித்துப் பார்ப்போம் என்றேத் துணிவோம். நம் வாழ்க்கைக் கட்டிக் கரும்பாய், காட்டுத்தேனாய் இனிக்கட்டும். ( எனக்கு இனிப்பு பிரியம். நீங்கள் வேண்டுமானால் சற்று மாற்றி யோசித்து மிளகாய் போல காரமாய் என்று மாற்றிக்கொள்ளுங்கள்) எல்லா சுவைகளையும் பெற்று நலமோடும் வளமோடும் வாழ்வோம்
'''''
என்றும் புன்னகை செய் மனமே..............