Wednesday, 10 November 2021

வருகை என்னும் வரம்

 


தானியேல் 12: 1-3,
எபிரேயர் 10: 11-14,18,
மாற்கு13: 24-32


இறக்கும் போது நமக்கு வேண்டாதவரையும் பார்க்க விரும்புகிறோம். இருக்கும் போது நமக்கு வேண்டியவரையும் பார்க்க மறுக்கிறோம். இதுதான் நம்முடைய வாழ்வின் நிலை. இது இப்படி இருக்க, யாருடைய வருகை நமக்கு வரமா இருக்கின்றது என்பதனை பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
பேரரசர் அக்பர், பீர்பாலிடம் ஒருநாள், "கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாக சொல்கின்றார்களே ஏன் தன்னுடைய தூதுவர்களை அனுப்பக் கூடாது" என்று கேட்டார். இது மிகவும் ஆழமான கேள்வி இதற்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. நேரம் வரும் போது சொல்கிறேன் என்று சொல்லி விட்டார் பீர்பால்.
சில மாதங்கள் கழித்து அரண்மனையில் உள்ள அனைவரும் படகில் உல்லாச பயணம் மேற்கொண்டனர். அக்பர், அவரது குடும்பத்தார் மற்றும் பீர்பாலும் உடன் இருந்தனர். திடீரென்று அக்பரின் பேரன் தண்ணீரில் விழுந்து விட அக்பர் உடனே நீரில் குதித்து தன்னுடைய பேரனைக் காப்பாற்றினார். இதனைப் பார்த்த பீர்பால், அரசே பணியாளர்களும் காவலர்களும் உங்களைச்சூழ்ந்து நிற்க அவர்களுக்கு ஆணையிட்டு குழந்தையைக் காப்பாற்ற சொல்லாமல் நீங்களே நீரில் விழுந்து ஏன் காப்பாற்றினீர்கள் என்று கேட்டார். அதற்கு அக்பர் இது என்னுடைய பேரன் அவனைக் காப்பாற்ற வீரர்களுக்கு ஆணையிடுவதை விட நானே குதித்து காப்பாற்றுவது தான் நல்லது என தோன்றியது. அதனால் தான் நான் காப்பாற்றினேன் என்றார்.
உடனே பீர்பால் மனித பிறவிகளாகிய நமக்கே இப்படி தோன்றுகிறது என்றால் கடவுள் இந்த உலக மக்கள் அனைவரையும் படைத்தவர், தனது மக்களை மீட்க அவரே நேரடியாக வருவது தானே முறை? என்று கேட்டார். தக்க சூழ்நிலையில் தன்னுடைய சந்தேகம் தெளிவானது பற்றியும் பீர்பாலின் அறிவுக் கூர்மை கண்டும் மகிழ்ந்தார் அரசர் அக்பர்.

ஆம் அன்புக்குரியவர்களே, உலகைப் படைத்த கடவுள் அதனை மீட்க தானே மனு உரு எடுத்து மீண்டும் வர இருக்கின்றார். அவரது இரண்டாம் வருகையைப் பற்றிய செய்திகளே நமக்கு இன்று வாசகப் பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. வருகை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகளைத் தருகின்றது.
கொரோனாவின் வருகையால் பள்ளிகள் மூடப்பட்டன.
தடுப்பு மருந்துகளின் வருகையால் இயல்பு நிலை திரும்ப தொடங்கியது.
எப்போது பள்ளிகள் திறக்கும் ? மாணவர்கள் எப்போது வருவர் என்று எதிர்பார்த்து இருந்தனர் பள்ளி நல விரும்பிகள்.
மழையின் வருகையால் தொடங்கப்பட்டு சில நாளிலேயே அதுவும் நின்று போனது.
நண்பர்களின் வருகை மகிழ்வைத் தருகிறது.
எதிரிகளின் வருகை மன வருத்தத்தைத் தருகின்றது.
சிலரின் வருகை இன்பம்
சிலரின் வருகை துன்பம்
இப்படியாக ஒவ்வொருவரின் வருகையும் ஒவ்வொரு விதமான உணர்வுகளையும் எண்ணங்களையும் நமக்குத் தருகின்றது. இந்த மழைக் காலத்தில் ஒரு சில தலைவர்களின் வருகையும் பார்வையிடுதலும் மகிழ்வையும் ஆறுதலையும் அளிக்க, மற்றும் சிலரின் வருகையும் செயலும் முகம் சுளிக்க வைக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் மெசியாவின் இரண்டாம் வருகையின் போது நடக்க இருக்கும் இன்ப துன்பங்களை தெளிவாக எடுத்துரைக்கின்றார் இறைவாக்கினர் தானியேல். விடுவிக்கப்படுவர், ஒளி வீசித் திகழ்வர்:
துன்பத்தில் இருந்து விடுவிக்கப்படுவர். பெயர் எழுதப்பட்டோர் மீட்கப்படுவர். இறந்தவர் முடிவில்லா வாழ்வு பெறுவர். ஞானிகள் விண்மீன்களைப் போல் ஒளி வீசுவர். சிலர் வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் ஆளாவர். ஆக இரண்டாம் வருகை எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. ஒரு சிலருக்கு இன்பம், மற்றும் சிலருக்கு துன்பம். இதில் நாம் யாராக இருக்கப் போகின்றோம் என்பதனை முடிவு செய்வது நமது வாழ்வும் செயலும் தான்.

அதற்கு உதவியாக நமக்கு அறிவுரை கூறுவது போல அமைந்துள்ளது இன்றைய திருப்பாடல் வரிகள் . ஆண்டவரை நம்முடைய உரிமைச்சொத்தாக நாம் எண்ணும் பொழுது நமக்கு நிறைவான மகிழ்ச்சி கிடைக்கின்றது. அவரும் நம்மை துன்பம் அணுகாமல் எப்பொழுதும் மகிழ்வுடன் பார்த்துக் கொள்வார்.

ஆண்டவரை உரிமைச்சொத்தாக கொண்டு தனது வாழ்வை இன்பமாக மாற்றி பிறரும் அது போல வாழ்ந்து காட்ட வழி செய்தவர் இயேசு. செடி கொடிகளின் வளர்ச்சியைப் போன்றே மனித வாழ்வின் வளர்ச்சியும் இருக்கும் என்று அறிவுறுத்துகிறார். வசந்த காலத்தில் பூக்கள் பூப்பதும் இலைகள் தளிர்ப்பதும் எப்படி இயல்போ அது போல, இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்ந்து போவதும் இயல்பு. அந்த அந்த காலத்தின் இயல்பு அறிந்து நாம் நம்முடைய வாழ்க்கை நிலையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
அவரது வருகை எப்போது வேண்டுமானாலும் வரலாம் அது எப்போது என்று அவருக்கே தெரியாது. எனவே வாழுகின்ற வாழ்க்கையை அன்றே இனிமையாக வாழ முயற்சிப்போம்.

ஆக இரண்டாம் வருகை எப்படிப்பட்டது அதை எதிர்கொள்ள எத்தகைய மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும் அதற்கு நமக்கு முன்னுதாரணம் யார் என்பதை பற்றி ஒவ்வொரு வாசகங்களும் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன. நன்மை செய்பவர்களுக்கும் நன்மை செய்ய காரணமாக இருப்பவர்களுக்கும் அவர் வருகை வரமாக அமைகின்றது. மகிழ்வைத் தருகின்றது. பிறருக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் கேடு செய்பவர்களுக்கும் அது துன்பமாக அமைகின்றது.

ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாம் , நமது வருகையால் நம்மை சுற்றி இருப்பவர்களை மகிழ்விப்போம். நம்மைப் படைத்த கடவுள் நம்மேல் கொண்ட அன்பால் நம்மை மீட்க அவரே வரும் பொழுது நாமும் நமது வாழ்வை மாற்றி அமைப்போம். எங்கு எப்படி எப்போது வருவார் என்று தெரியாது. எனவே எல்லா நாளும் எல்லா நேரத்திலும் நமது வாழ்வை மகிழ்வோடு வாழ்வோம். ஆண்டவர் என்னும் மகிழ்வை நமது உரிமைச் சொத்தாக்கிக் கொள்ள முயல்வோம். நமது வாழ்வால் நம் உடன்இருப்பை வரமாக்கி, ஆண்டவரின் வருகையை வரமாக்க முயல்வோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.

Wednesday, 3 November 2021

யார் அந்தப் பெண்?

 

பொதுக்காலம் 32ம் ஞாயிறு

யார் அந்தப் பெண்?

1 அரசர்கள் 17:10-16,
எபிரேயர் 9:24-28 ,
மாற்கு 12: 38-44

நான்கு பேர் அறிந்து உதவி செய்தால் அது விளம்பரம்.
நான்கு பேர் அறியாது செய்தால் அதற்கு பேர் உதவி.
உதவி பெறுபவர் யார் என்று அறியாது செய்தால் அது தானம், காணிக்கை....

நம்முடைய செயலை வைத்து நாம் யார் என்று நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நம்முடைய உருவம், செல்வம், தகுதி , திறமை வைத்து அல்ல.

இப்பொழுதெல்லாம் நம்முடைய அடையாளங்கள் உருவத்தை வைத்தும் செல்வ வளத்தைப் பொறுத்து மட்டுமே அமைகின்றன. யாரையாவது நாம் இன்னொருவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றால் , அதோ அந்த மாடி வீட்டில் வசிப்பவர், கோவிலுக்கு காரில் வருபவர், முதல் பெஞ்சில் உட்காருபவர் என்று தான் அந்த நபரை அடையாளப்படுத்துகின்றோம். மாறாக யாரும் அவர் செய்த நற்காரியங்களை வைத்து அறிமுகப்படுத்துவது இல்லை, அடையாளப்படுத்துவது இல்லை. ஏன் அப்படி செய்யும் அளவுக்கு நாம் நற்காரியம் எதுவும் செய்து விடவில்லையா?. இப்பொழுதெல்லாம் நற்காரியங்கள் நான்கு சுவத்துக்குள் மட்டுமல்ல நானிலம் முழுவதற்கும் அறிவிக்கப்படுகின்றன. ஒரு கை செய்வது மறு கைக்கு தெரியக்கூடாது என்று சொன்ன காலம் போய், ஒரு கையால் கொடுப்பதை மறு கையால் செல்ஃபி எடுத்து உலகிற்கு சொல்லும் காலம் வந்து விட்டது. அதுவும் அருகில் வாழ்வோரை விட அயல் நாட்டில் வாழ்வோருக்கு அறிவிக்கவும், அதிக லைக்குகள் வாங்கவுமே செய்யப்படுகின்றன.

இப்படி நாம் இருக்க இன்றைய வாசகங்களில் நாம் கண்ட இரு பெண்கள் தங்களுடைய செயலால் தங்களை யார் என்று நிருபித்து இருக்கின்றார்கள். கைப்பேசியில் புகைப்படம் எடுக்கவில்லை, வலைதளத்தில் காணிக்கை போடும் குறும்படம் காட்டவில்லை. இணையதளம் இல்லாமலே இன்று வரை நம்மால் பேசப்படுகின்றார்கள். பெண்கள் என்றாலே அழகு, உருவம் வைத்து அடையாளப்படுத்தும் உலகில் தங்களது செயல்களால் யார் அந்த பெண்கள் என்று பிறரை திரும்பி பார்க்க வைத்து இருக்கின்றனர் நம் மங்கையர்கள். இவர்களது வாழ்வும் செயலும் இறைவாக்கினர் எலியாவையும் இறைமகன் இயேசுவையும் நெகிழச்செய்தது. நம்முடைய வாழ்வும் செயலும் இயேசுவை நெகிழச்செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இவர்களின் வாழ்க்கை வழி அறிந்து கொள்ள முயல்வோம்.

பழைய ஏற்பாட்டு கைம்பெண்:

* படைத்த இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை
* இறையடியார்களை மதிக்கும் குணம்.
* எளிமை வாழ்வு. பகிரும் குணம்

* இவருக்கு பெயர் கொடுக்கப்படவில்லை. சாரிபாத்து ஊரைச்சேர்ந்தவர் என்று மட்டுமே அடையாளப்படுத்தப்படுகின்றார். கணவர் இருந்திருந்தால் இன்னாரின் மனைவி என்று கூறப்பட்டிருப்பார். கணவனை இழந்ததால் கைம்பெண் ஆக்கப்பட்டவர். தன்னிடம் இருக்கும் சிறிதளவு உணவை சமைக்க தேவையான சுள்ளிகளைப் பொறுக்க வீட்டை விட்டு வெளியே வருகின்றார். தன் மகனை அனுப்பாமல் தானே அந்த வேலைகளை செய்கின்றார். எளிய மகன் அதனால் அதிக பசியுற்று துன்புறக் கூடாது என்று எண்ணிணாரோ என்னவோ?? ஏழ்மையிலும் பக்தி நிறைந்த மன நிலையில் இருக்கின்றார். படைத்த இறைவன் உணவளிப்பார் என்ற நம்பிக்கை, அவர் தந்த வாழ்வு அவர் கட்டளைப்படி நடக்கட்டும் என்ற மன நிலை.

*இறைவாக்கினர் எலியாவை உடனே கண்டு கொள்கின்றார். தாகமாய் இருக்கிறது தண்ணீர் கொடு என்று எலியா கேட்டவுடன் தண்ணீர் கொடுக்க விரைந்தவர். அப்படியே சிறிது அப்பமும் கொடு என்றவுடன் தயங்குகின்றார். தண்ணீர் தாராளமாய் கொடுக்குமளவுக்கு இருக்கும் அவரிடம் அப்பம் இல்லை. கைம்பெண்ணான தன்னிடம் ஒரு இறைவாக்கினர் தண்ணீர் கேட்டதை பெறும் பேறாக எண்ணி இருந்திருப்பார். அப்பம் கேட்டும் கொடுக்க இல்லையே என்ற வருத்தம் அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுகின்றது. வாழும் கடவுள் மேல் ஆணை என்று சொல்கின்றாள். கேட்டு மறுக்கப்படும் வலி என்ன என்பதை நன்கு அறிந்தவ(ள்)ர். எலியாவின் பசி உணர்வையும், தான் இல்லை என்று கூறும் உணர்வையும் எளிதில் கண்டு கொள்கின்றா(ள்)ர்.

தன்னிடம் எதுவும் இல்லாதபோதும் எலியா சொன்ன அந்த வார்த்தையின் மேல் நம்பிக்கை கொள்கின்றார். சாவதற்கு முன் நல்லது செய்ய வாய்ப்பு கிடைத்தது போல எண்ணி மகிழ்கின்றார். உணவின்றி செத்தாலும் பரவாயில்லை. இறைவாக்கினர்க்கு உணவிட்டு மாண்டு விட எண்ணுகின்றார். அவர் சொன்னபடியே அவர்க்கு அப்பம் சுட்டு கொடுக்கின்றார். அவரது நம்பிக்கையின் படியே பானையிலுள்ள மாவும் தீரவில்லை கலயத்தில் உள்ள எண்ணையும் தீரவில்லை. இன்றே இறந்து விடுவோம் என்று எண்ணியவர்க்கு, பல ஆண்டுகாலம் வாழ உணவு கிடைக்கின்றது.
தான் செய்த செயலை எல்லோரிடமும் சென்று கூறி தம்பட்டம் அடித்திருக்க மாட்டார். மாறாக தன்னைப் போல் துன்புறும் மக்களுக்கு கட்டாயம் அந்த உணவை பகிர்ந்திருப்பார். உதவி செய்யும் குணம் உடையவர்களால் பிறருக்கு உதவாமல் இருக்க முடியாது. பெற்ற உதவியை பிறருக்கு பகிர்ந்து அளித்திருப்பார்.
நாமும் நம்மைப் படைத்த இறைவன் நம்மைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் வாழ முயல்வோம். இறைவாக்கினர்கள் இறைவனின் அடியார்கள் என்பதை உணர்ந்து வாழ்வோம். இருப்பதே போதும் என்ற மன நிலையில் எளிய வாழ்வு வாழ முற்படுவோம்.
இப்படி வாழ்ந்ததாலேயே சாரிபாத்து கைம்பெண் இன்றளவும் பேசப்படுகின்றார். எலியா உணவு கேட்டதும் எரிந்து விழுந்து விரட்டி அடித்து இருந்தால் இன்று இவர் இப்படி விவிலியத்தில் இடம் பெற்றிருக்க மாட்டார். கைம்மாறு கருதாது செய்யும் உதவிக்கு காலம் நல்ல பதில் சொல்லும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்த சாரிபாத் நகர் கைம்பெண்.

புதிய ஏற்பாட்டு கைம்பெண்.

* நிறைவான மனது.
* கோவில் கடமை
* நம்பிக்கையான செயல்

நிறைவான மனதுடன் வாழ்கின்றார் இந்த கைம்பெண். தனக்கு அது இல்லை இது இல்லை என்று அளவுக்கு அதிகமாக ஆசைப்படும் மனிதர்கள் மத்தியில் இவர் இது போதும் என்ற மன நிலையில் வாழ்கின்றார். அதனால் தன்னுடைய அடுத்த வேளை உணவிற்கான பணமான அந்த திராக்மாவை காணிக்கையாக அளிக்கின்றார். அதில் அவருக்கு எந்த விதமான மன வருத்தமும் இருந்திருக்காது. ஏனெனில் அவர் யாருடைய கட்டாயத்தினாலும் அதை காணிக்கையாக்கவில்லை. மாறாக தானாக மனமுவந்து அதை அளிக்கின்றார். பிறர் பார்க்க வேண்டும் என்று நினைத்து செய்யவில்லை. யாருக்கும் தெரியாமல் அதை காணிக்கையாக்குகின்றார். ஏழ்மையிலும் நிறைவான மனது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நான் அவனைப் போல் இல்லை இவனைப் போல் இல்லை என்று நினைத்து வெம்பி அழும் மனிதர்கள் நடுவில் இருந்த அந்த காசுகளையும் காணிக்கையாக்குகின்றார்.

* தான் எப்படி இருந்தாலும் தன்னுடைய ஆலய கடமைகளை சரியாக செய்கின்றார். கோவிலுக்கு வருகின்றார். தன்னுடைய காணிக்கையை செலுத்துகின்றார். ஆலயத்திற்கு செல்லாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் தேடிக் கொள்ளும் மக்கள் மத்தியில் கடமை தவறாமல் செல்கின்றார்.
என்ன உடை உடுத்துவது, என்ன நகை அணிவது எந்த வாகனத்தில் போவது யார் அருகில் அமர்வது என்ற எந்த கேள்வியும் இவரிடத்தில் இல்லை. ஆலயத்திற்கு செல்கிறேன் ஆண்டவனை பார்க்கிறேன். என்னிடத்தில் உள்ளதை காணிக்கையாக்குகிறேன் என்ற ஒரே நோக்கத்தோடு செல்கின்றார். ஆண்டவனின் கடமைகளை நாம் சரிவர செய்யும் போது அவர் நமக்கு உண்டான கடமைகளை மறக்காமல் செய்வார் என்பதை ஆழமாக நம்பியிருப்பார்.


* தன்னுடைய எதிர்காலம் என்ன ஆகும்? அதற்கு எப்படி பணம் சம்பாதிப்பது? யார் நமக்கு உதவுவார்? என்ற எந்தவிதமான கவலையோ பயமோ அவருக்கு இல்லை. தன்னிடம் இருந்தது அனைத்தையுமே காணிக்கையாக்குகின்றார். 100 % கடவுளையும் அவருடைய வார்த்தையையும் மட்டுமே நம்பி செயல்படுகின்றார். கப்பல் மாலுமியின் மகள் கொந்தளிக்கும் கடலை கொள்ளை அழகோடு ரசிப்பது போல. கடல் கொந்தளித்தால் என்ன கப்பல் ஓட்டுவது என் அப்பா என்ற நம்பிக்கையில் பயணம் செய்கின்றாள். அதே நம்பிக்கை இந்தக் கைம்பெண்ணிற்கும். நாளைய நாளைக் குறித்து கவலை இல்லை இன்றைய பொழுது நான் இறைவனோடு என்ற நம்பிக்கையில் வளர முயற்சிப்போம்.


பழைய ஏற்பாட்டுக் கைம்பெண்ணும் புதிய ஏற்பாட்டுக் கைம்பெண்ணும் நமக்கு விடுக்கும் செய்தி. எந்நிலையிலும் இறைவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் தளர்ந்து விடாதீர்கள். இருப்பதே போதும் என்ற மன நிலையில் வளருங்கள். எதிர்பார்ப்பின்றி உதவுங்கள் ..

ஆம் அன்பு உள்ளங்களே இவர்களது வாழ்வும் செயலும் போன்று நமது வாழ்வு மாற அருள் வேண்டுவோம். யார் இந்த பெண்/ ஆண் என்று நம்முடைய வாழ்வையும் செயலையும் வைத்து அவர்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்வோம். இப்படி வாழ்ந்தால் நம்முடைய் மாவுப் பானை என்னும் நம்பிக்கை அள்ள அள்ள குறையாமல் பெருகும். நற்செயல் என்னும் எண்ணெய் கலயம் நிரம்பி வழியும். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.


Wednesday, 17 March 2021

பலன் தரும் கோதுமை மணி

 தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு


எரேமியா 31; 31-34

எபிரேயர் 5;7-9

யோவான் 12: 20-33


"சுடச்சுட பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு" என்ற திருக்குறள் வரிகளுடன் இன்றைய ஞாயிற்றுக்கிழமை சிந்தனைக்குள் நாம் நுழைவோம். நெருப்பில் சுடப்படும் தங்கமானது மெருகேறுவது போல நோன்பிருந்து தவம் மேற்கொள்ளும் துறவிகள் துன்பத்தால் மேன்மைப்படுத்தப்படுவர் என்பது இக்குறளின் பொருள். தவக்காலத்தின் நிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் . நமக்கும் பல்வேறு துன்பங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கும் இவ்வேளையில் துன்புற்று, மண்ணில் மடிந்து பலன் தரும் கோதுமை போல நமது வாழ்வு இருக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.


துன்பம் எல்லோருக்கும் வரும் . அது அவரவர் ஏற்றுக்கொள்ளும் திறனைப் பொருத்து அதன் தன்மைக் கணக்கிடப்படும். துன்பம் என்பது நாம் சுவைத்து மகிழும் கரும்பைப் போல என்று நான் புத்தகத்தில் வாசித்த நியாபகம். கரும்பின் சுவை நிறைந்த பகுதியின் முன்னும் பின்னும் ஒரு சிறு கடினமான கணுப்பகுதி இருக்கும் . அதைக் கடந்த பின்னரே கரும்பின் சுவையான பகுதியை நம்மால் ருசிக்க முடியும். அது போல தான் வாழ்க்கையும். துன்பமான ஒரு சூழல் இருக்கிறது என்றால், மகிழ்வான ஒரு சூழல் அதன் பின் நமக்காகக் காத்திருக்கிறது என்று அர்த்தம். கரும்பின் கணுப்பகுதிக்கு அஞ்சி கரும்பையே சுவைக்காமல் விட்டால் அதை விட முட்டாள் தனமான காரியம் வேறு இல்லை என்று தான் சொல்ல முடியும். அதைப் போல துன்பம் கண்டு வாழ்க்கையே இப்படி தான் என்று சோர்ந்து, வாழாமல் விட்டால் அதுவும் முட்டாள் தனமே.


இன்றைய நற்செய்தியில் இயேசு கோதுமை மணி போல மண்ணில் மடிந்து வாழச் சொல்கின்றார். அதற்கு முதலில் நாம் நம்மை இழக்க தயாராக இருக்க வேண்டும். இயேசு வாழ மட்டும் அறிவுறுத்தவில்லை தாம் முதலில் வாழ்ந்து காட்டி அது போல வாழுமாறு அறிவுறுத்துகிறார். சொல்பவரல்ல, செய்பவர் நம் இயேசு. அவரைப் போல வாழ அவர் தம் சீடர்களாகிய நாமும் பயிற்சிக்கவேண்டும். அதற்காக சில உத்திகளை நமக்குக் கொடுக்கின்றார்.


1. இயேசுவைக் காண விரும்பு. 2. அவரிடம் அழைத்துச்செல். 3. பின்பற்று 4. குரலைக் கேள்.


1. இயேசுவைக் காண விரும்பு:

எவ்வாறு கிரேக்கர்கள் இயேசுவைக் காண விரும்பி பிலிப்பிடம் வந்தார்களோ அது போல நாமும் இயேசுவை விரும்பிக் காண செல்ல வேண்டும். அவர் இருக்கும் இடம் அறிந்து அவரைப் பின் தொடர வேண்டும். நம்முடைய மேலான விருப்பத்தை பிறரிடம் எடுத்து சொல்ல வேண்டும். அப்போது தான் அது நிறைவேறும். பிரபஞ்ச சக்தி பற்றி படிப்பவர்கள் எழுதுபவர்கள் அடிக்கடி கூறுவது இதுவே. நாம் எதை அடைய நினைக்கின்றோமோ அதை பிரபஞ்சத்திடம் வெளிப்படுத்த வேண்டும். தனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லும் குழந்தை வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறது. எது கிடைத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் குழந்தை, ஒரு சில நேரத்தில் விரும்பியது கிடைக்காது வருத்தமடைகின்றது. அது போல நாமும் நமக்கு இது வேண்டும் என்பதை உரிமையுடன் நம் தந்தையிடம் கேட்க வேண்டும். ஆக இயேசுவை நாம் காண விரும்ப வேண்டும். கடவுள் உருவத்தில் என்று எதிர்பார்ப்பதை விட கண்ணுக்கு தெரியும் மனிதர் உருவத்தில் கடவுளைக் காண முயற்சிக்க வேண்டும். மனிதர்கள், நிகழ்வுகள், சூழல்கள் அனைத்திலும் இயேசுவைக் காண்பவர்களாக தேடுபவர்களாக நாம் இருக்க வேண்டும். காண விரும்புவோம் இயேசுவை குடும்பத்தில் குழுவில் நண்பர்களில் நன்னெறியில்....


2. அவரிடம் அழைத்துச்செல்:

நாம் இயேசுவைக் கண்டு வாழ்ந்து கொண்டு இருந்தாலும் பிறரையும் இயேசுவிடம் அழைத்துச்செல்பவர்களாக வாழ வேண்டும். பிலிப்பு தன்னை நோக்கி வந்த கிரேக்கர்கள், முன் பின் அறிமுகமில்லாதவர்களாக இருந்த போதிலும் அவர்களின் ஆசையை நிறைவேற்றுகின்றார். தன்னால் இயேசுவிடம் அவர்களை அழைத்துச்செல்ல முடியுமா என்று எண்ணி தயங்கி விடவில்லை மாறாக அந்திரேயாவின் உதவியை நாடி கிரேக்கர்களின் ஆசையை நிறைவேற்றுகின்றார். கடவுள் தான் எல்லா நேரமும் நம்முடைய ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கடவுள் வடிவில் இருக்கும் மனிதர்களால் கூட நமது ஆசைகள் நிறைவேறலாம். ஆனால் நாமும் ஒரு நாள் பிற மனிதர்களுக்கு கடவுளாக மாறும் சூழ்நிலை வரக்கூடும். அதையும் ஏற்கும் உள்ளம் வேண்டும். ஆக நாம் இயேசுவிடம் பிறரை அழைத்துச்செல்பவர்களாக இருக்க வேண்டும். தானம் கொடுப்பவர்களுக்கு தெரியாது கடவுளுக்கு தான் கொடுக்கிறோம் என்று . ஆனால் பெறுபவர்களுக்கு தெரியும் கொடுப்பது கடவுள் தான் என்று. நாம் கடவுளாக பார்க்கப்படும் தருணம் வரும். கடவுளை நோக்கி பிறரை அழைத்துச்செல்லும் தருணமும் வரும் . எதிர்பார்த்துக் காத்திருப்போம்.


3. பின்பற்று:

இயேசுவைப் பின்பற்றியவர்கள் பலர். அதில் சிலர் மட்டுமே கடைசி வரை அருகிருந்தனர். அதற்கான பேற்றையும் பெற்றனர். அவரைப் பின்பற்றி அவருக்கு தொண்டு செய்பவர்கள், அவரைப் பின்பற்றினர். அவரைப் போல பாடுகள் பட்டு வேத சாட்சியாக இறக்கவும் செய்தனர். இயேசு சொன்ன கோதுமை மணி போல மண்ணில் மடிந்து பலன் கொடுத்தவர்கள் அவர்கள். துன்பம் என்னும் நெருப்பினால் புடமிடப்பட்டு தூய்மையான தங்கமாக மின்னியவர்கள். கரும்பின் கணுப்பகுதியை கடித்து எறிந்து முழு கரும்பையும் ருசி பார்த்தவர்கள். நம் இயேசு சொகுசான வாழ்க்கை வாழ, " என்னை பின்பற்று" என்று கூறவில்லை. துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கை இது என்னைப் போல் வாழ்ந்து கடவுளின் பெயரை மாட்சிப்படுத்துங்கள் என்கின்றார். அவரைப் போல வாழ்வோம் அவரைப் பின்பற்றுவோம்.


4.குரலைக் கேள்:

இன்றைய வாசகத்தில் கடவுளின் குரல் ஒன்று வானத்தில் இருந்து கேட்ட போது அங்கு கூடியிருந்த மக்கள் அக்குரலைக் கேட்கின்றனர். அது வானதூதரின் குரலாக இருக்குமோ என்று எண்ணுகின்றனர். அதற்கு இயேசு இக்குரல் எனக்காக அல்ல உங்களுக்காக ஒலிக்கப்பட்டது. இயேசுவின் மகிமையைக் காதுகளால் கேட்டு அன்றைய நாளில் சிலர் மனமாற்றம் அடைந்து இருக்கலாம். நமக்கும் பல நேரங்களில் இயேசுவின் குரல், இயேசுவைப் பற்றிய குரல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அதை கேட்காதவாறு நமது காதுகள் வேறு பல சத்தங்களினால் அடைக்கப்பட்டுள்ளன. தொலைபேசி, தொலைக்காட்சி, என தொடர்பு சாதனங்களின் சத்தங்களினால் நாம் நம்முடைய குரலையே கேட்காது மறந்து போய் இருக்கின்றோம். பின் எப்படி இயேசுவின் குரலையும், இயேசுவைப் பற்றிய குரலையும் நம்மால் கேட்க முடியும். ஹார்ட் என்ற ஆங்கில வார்த்தைக்குள் ஹியர் என்ற வார்த்தை மறைந்து இருப்பதற்கு காரணம் என்ன? உன் இதயம் சொல்வதைக் கேள். பிறர் இதயம் கூற விரும்புவதையும் கேள் என்று அர்த்தம். இதயம் கொடுத்து பிறரின் குரலைக் கேட்போம். செவி கொடுப்போம் நமது குரலும் செவி சாய்க்கப்படும்.


ஆம் அன்பானவர்களே கோதுமை மணி போல மடிந்து பலன் கொடுக்க முதலில் இயேசுவைக் காண விரும்புவோம் ஆலயத்தில், ஆன்மீகத்தில் அருகிருப்பவர்களின் உடனிருப்பில்.

பிறரையும் இயேசுவிடத்தில் அழைத்துச்செல்வோம் நண்பனாக உறவினராக, அயலாராக அண்டைவீட்டாராக....

பின்பற்றுவோம் அவரின் விழுமியங்களை வீரியமுள்ள வார்த்தைகளை, விதை போன்ற வாழ்வை....

குரலைக்கேட்போம். மகிழ்வில் மன்னிப்பில் மன்றாட்டில்.....

இறைமகன் இயேசுவின் அருளும் ஆசீரும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருந்து நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பதாக ஆமென்,.


Friday, 12 March 2021

உண்மை ஒளி

 மறையுரை சிந்தனை சகோ. மெரினா. ம.ஊ.ச. 


தவக்காலம் நான்காம் வாரம்

உண்மை ஒளி

2 குறிப்பேடு 36; 14-16,19-23

எபேசியர் 2; 4-10

யோவான் 3; 14-21 <

p>தவக்காலத்தின் நான்காம் வாரத்தில் இருக்கக் கூடிய நம்மை இறைவன் உண்மை ஒளியை நோக்கி வர அழைக்கின்றார். இயேசுவின் பாடுகளோடு பயணித்து நம்மை நாமே செதுக்கிக் கொண்டிருக்கும் வேளையில் யார் ஒளி? அது உண்மை ஒளியா என ஆராய்ந்து பார்த்து வாழ அழைக்கின்றார். தேர்தல் நேரத்து பரபரப்புகள் , பரப்புரைகள், அவசர செய்திகளின் அதிர்வலைகள், இலவசங்களின் இடர்ப்பாடுகள், விலையேற்றத்தின் வீரியங்கள் என பல்வேறு இருள்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை ஒளியை நோக்கி முன்னேறி வரச்சொல்கின்றார். உண்மை ஒளியை நாம் கண்டறிய முதலில் நம்மில் இருக்கும் இருள்களை விரட்டியடிக்க வேண்டும்.

இருள் என்ற ஒன்று முதலில் இல்லை . மாறாக ஒளியானது பல்வேறு பொருள்களால் மறைக்கப்பட்டிருப்பதாலே இருள் என்ற ஒன்று ஏற்படுகின்றது. சூரியன் இரவில் காணாமல் போவதில்லை. அது மறைக்கப்பட்டிருப்பது போல. நாமும் பல தேவையற்ற குணங்களால் பண்புகளால் நம்மிடம் உள்ள ஒளியை மறைத்து வைத்திருக்கிறோம். அதனை நீக்கிவிட்டால் நாமும் நமது ஒளியைக் காணலாம்.

ஜென் கதை ஒன்று; துறவி ஒருவர் தனது மாணவர்களிடம் எது உண்மையான ஒளி என்று எப்போது அறிந்து கொள்ளலாம்? என்று கேட்டார். சீடர் ஒருவர் தூரத்தில் இருப்பது ஆலமரமா? அரசமரமா என்று கண்களுக்கு நல்ல வெளிச்சமாய் தெரிவது உண்மை ஒளி என்றார். மற்றொருவர், எதிரில் வருவது குதிரையா கழுதையா என்று கண்டுபிடிக்கும்படி தெளிவாய் இருக்கும் வெளிச்சம் உண்மை ஒளி என்றார். ஆனால் குருவோ ஆறறிவற்ற பொருளான மரம், விலங்குகளை அடையாளம் காண்பதற்கு உதவும் வெளிச்சம் உண்மை ஒளி அல்ல, மாறாக ஆறறிவுடைய மனிதன் என் சகோதரன் என்று அறியும் படி நம் மனக்கண்களுக்கு கிடைக்கும் வெளிச்சமே உண்மை ஒளி என்றார். பல நேரங்களில் நாம் எங்கோ யாருக்கோ நடக்கும் துன்பங்களுக்காக நம்மை அறியாமல் கண்ணீர் விடுகின்றோம் இரக்கம் கொள்கின்றோம். ஆனால் அருகில் இருக்கும் நம் சக நண்பர்களின் துன்பங்களை கண்டு கொள்ளாமல் விடுகின்றோம். நம் அருகில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகளை புரிந்து உதவும் நேரத்தில் உண்மை ஒளி நம் உள்ளத்தில் உதயமாகி விட்டது என்று அர்த்தம்.


உண்மை ஒளியை நாம் உணர இன்றைய வாசகங்கள் வழி இறைவன் நமக்கு சில அறிவுரைகளைக் கொடுக்கின்றார். 1. ஆலயம் செல். 2. நற்செயல் புரி. 3. ஒளியை நோக்கி வா.

1. ஆலயம் செல்:

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் செய்த பாவச்செயலும் அதனால் கடவுளின் சினத்திற்கு அவர்கள் ஆளானதும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு தான் பாவம் செய்தாலும், கடவுள் அவர்கள் மேல் இரக்கம் கொண்டு தூதர்களை அனுப்புகின்றார். ஆனால் மக்கள் அதனை புரிந்து கொள்ளாமல் மேலும் மேலும் பாவம் செய்கின்றனர். 70 ஆண்டுகளுக்கு பின், கடவுளின் ஆலயம் நம்மிடத்தில் இல்லை என்பதை உணர்ந்து அதனை கட்ட அரசன் ஆணை பிறப்பிக்கின்றான். "ஆண்டவரின் மக்கள் அவரின் ஆலயம் செல்லட்டும்" என்ற ஆணையைப் பிறப்பிக்கின்றான். ஆக மக்களின் துன்பத்திற்கு காரணம் அவர்கள் ஆண்டவரை நாடாமல் இருப்பதே என்பதை அரசன் அறிந்து அதனை செயல்படுத்த வழிவகை செய்கின்றான்.

நாமும் பல நேரங்களில் சோதனைகளுக்கு ஆளாகின்றோம். துன்புறுகின்றோம். ஆனால் அத்துன்பத்திற்கு நம்முடைய சூழலையும் நேரத்தையும் உடன் வாழும் சக மனிதர்களையும் காரணம் காட்டி விடுகின்றோம். துன்புற்ற நேரத்தில் ஆலயத்திற்கு சென்றாலும் நம்முடைய மன்றாட்டுகள் புலம்பல்களாகவும் அழுகைகளாகவும் தான் இருக்கின்றனவே தவிர, அவை எதனால் என்று எண்ண மறந்துவிடுகின்றோம். இந்த தவக்காலத்தில் ஒறுத்தல்களையும், செப தவங்களையும் மேற்கொள்ளும் நாம், ஆலயம் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அடிக்கடி செல்லும் இடமே நமது இல்லம். எப்போதாவது சென்றால் அது விருந்தினர் இல்லம். நாம் கடவுளின் பிள்ளைகள் எனில் அவர் வாழும் இல்லம் நமது இல்லம். அனுதினமும் ஆலயம் சென்று நாம் ஆண்டவரின் பிள்ளைகள் என்ற உரிமையை தக்க வைத்துக் கொள்வோம். உண்மை ஒளி நம்மில் தானாக சுடர்விடும்.


2. நற்செயல்கள் புரி:

கடவுள் அன்பும் அருளும் மிக்கவர். அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அந்த அன்புக்கும் அருளுக்கும் உரிமையுடையவர்கள். அன்பு அருள் இவ்விரண்டையும் நாம் மென்மேலும் வளர்த்துக் கொள்ள நமக்கு மிக உதவியாக இருப்பவை நாம் செய்யும் நற்காரியங்கள். சிலர் தங்களுடைய நற்செயல்கள் பிறரால் பாராட்டப்படவில்லை ரசிக்கப்படவில்லை என்று எண்ணி அதனை தொடர்ந்து செய்யாமல் விட்டுவிடுகின்றனர். சூரியன் உதிப்பதையும், மறைவதையும் உலகில் வாழும் எல்லோரும் எல்லா நேரமும் ரசிப்பதில்லை அதற்காக சூரியன் தன் வேலையை செய்யாமல் இல்லை. நாம் செய்கின்ற நற்செயல்களை ரசிப்பவர்களும் அதை விமர்சிப்பவர்களும் இருக்கும் உலகில் நாம் வாழ்கின்றோம். விமர்சனங்களுக்கு பயந்து வாழ்ந்தால் நல் விளைவுகளை அறுவடை செய்ய முடியாது. நாம் நற்செயல்கள் புரிவதற்கென்றே இயேசு கிறிஸ்து வழியாக படைக்கப்பட்டிருக்கின்றோம். அதை உணர்ந்து வாழ்ந்தால் உண்மை உளி நம் வாழ்வை மகிழ்விக்கும்.


3. ஒளியை நோக்கி வா:

சிறு பிள்ளைகள் நடை பயிலும் நேரத்தில் தாய், தந்தையர் அக்குழந்தைகளை தரையில் இறக்கி விடுவர். பின் தன்னை நோக்கி வருமாறு கைகளை நீட்டுவர். குழந்தைகள் அம்மா அப்பாவின் முகம் அறிந்து அவர்களை நோக்கி நடையெடுக்கும். தான் நடக்கிறேன் என்பதை விட தன் அம்மா அப்பாவை நோக்கி செல்கின்றோம் என்ற மகிழ்வே அவர்களுக்கு உற்சாகம். அப்படியே நடை பழகிவிடுவார்கள். பிள்ளைகள் பெற்றோர்கள் மேல் வைக்கும் நம்பிக்கையினால் அவர்கள் வாழ்வு மேம்படுகின்றது. நாமும் பல நேரங்களில் நம் இறைவனால் கீழே இறக்கி விடப்படுகின்றோம். சிலர் அதை, நமது வாழ்வு என்னும் நடைபழக என்று எடுத்துக் கொண்டு ஒளியாம் இறைவனை நோக்கி நம்பிக்கையோடு செல்கின்றனர். சிலர் இறைவனால் தாங்கள் கைவிடப்பட்டதாக எண்ணிக் கொண்டு அழுது அழுது கண்களால் ஒளியை மறைத்துக் கொள்கின்றனர்.


உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியை நோக்கி வருகின்றனர். தீங்கு செய்பவர்கள் ஒளியை வெறுக்கின்றனர் என்று நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக்கேட்டோம். நமது ஒளி இயேசு அவர் நமக்காக சிலுவையில் உயர்த்தப்பட்டார். அவரில் நம்பிக்கை கொண்டதால் நாம் நிலைவாழ்வு பெறுகிறோம். கடவுளின் அன்பை முழுமையாக பெறுகின்றோம். நமது தீமை விளைவிக்கக் கூடிய செயல்பாடுகளை மாற்றி இயேசுவின் பாதையில் பயணம் செய்யும் போது, உண்மை ஒளியின் ஒளிக்கீற்றுகளாகின்றோம். ஆலயம் சென்று, நற்செயல்கள் புரிந்து ஒளியை நோக்கி வரும் போது, நாமும் அந்த ஒளியின் சிறு பிம்பங்களாகின்றோம். அப்போது கடவுளாம் ஆண்டவர் நம்மோடும் இருந்து நம்மையும் வழி நடத்துவார்.


உண்மைக்கேற்ப வாழ்வோம் உண்மை ஒளியின் பிம்பங்களாவோம் இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருந்து வழி நடத்துவதாக ஆமென்

Friday, 19 February 2021

வானவில் மாற்றம்🌈🌈🌈


ஒரு நாள் அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு அறிவிப்பானது பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. அனைவரும் மிக ஆவலாக என்ன எழுதி இருக்கிறது என்று பார்க்க சென்றனர். அதில் " உங்களின் வளர்ச்சிக்கு இதுவரை தடையாக இருந்தவர் நேற்று காலமானார். அவரின் உடல் அடுத்த அறையில் வைக்கப்பட்டுள்ளது. தவறாமல் அவரின் இறுதி சடங்கில் பங்கேற்கவும்" என்று எழுதப்பட்டு இருந்தது. வாசித்த அத்தனை பேரும் தங்களுடைய வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்திருப்பார்கள் என்று காண மிக ஆவலாய் அடுத்த அறைக்கு சென்றனர். அங்கு ஒரு சவப்பெட்டி இருந்தது. அதன் அருகில் சென்று உற்று பார்த்தவர்கள் அனைவரும் மிக வருத்தத்துடன் திரும்பி வந்தனர்.


சவப்பெட்டியினுள் ஒரு கண்ணாடியும் அதன் அருகில் "உங்களின் வளர்ச்சிக்கு காரணரும் நீங்களே, தடையும் நீங்களே!" நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும். தடையை மாற்றி வளர்ச்சியடையுங்கள் என்று எழுதப்பட்ட வாசக அட்டையும் வைக்கப்பட்டு இருந்தன. கண்ணாடியில் தங்களது முகத்தையும் வாசகத்தையும் கண்ட அவர்கள் அன்று முதல் அனைவரும் தங்கள் பணிக்கு தடை தரும் செயல்களை விட்டு விட்டு, வளர்ச்சி தரும் மாற்றத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.


நாமும் மாற்றத்தின் காலமாம் தவக்காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். தடைகள் பலவற்றை தகர்த்து வளர்ச்சி மாற்றத்தை, மனமாற்றத்தை நோக்கி பயணிக்க இறைவன் இன்றைய நாளில் நமக்கு அழைப்புவிடுக்கின்றார். காலம் நிறைவேறிவிட்டது இறையரசு நெருங்கி வந்து விட்டது, மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் இன்று நமக்கு அறிவுறுத்துகிறார். காலையில் பள்ளி பேருந்து வந்துவிட்டது என்றால் நம்முடைய வழக்கமான செயல்பாடு எவ்வாறு மிக துரிதமாக இருக்குமோ அதுபோல் இருக்க வேண்டும் இனி நம்முடைய வாழ்வு. அதற்கான ஒரு அறிவிப்பு தான் இந்த தவக்காலம். பிற நாட்களைப் போல் இருக்கக்கூடாது. வழக்கமான செயல்களை விட மிக சிறப்பான செயல்களை நாம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இதுவரை நாம் எப்படி இருந்தோமோ அதுவும் நம்மால் தான் . இனிமேல் எப்படி இருக்க போகிறோமோ அதற்கும் நாம் தாம் முழு பொறுப்பு அதை நல்ல விதத்தில் மாற்றி அமைத்து கொள்ள நமக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது.


இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் நோவா காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு பின் மண்ணுலக மக்களுடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கை பற்றி கூறுகின்றார். அது உடன்படிக்கையின் வில். எவ்வாறு வானவில் நம் கண்களுக்கு அரைவட்ட வடிவில் இரு துருவங்களை இணைப்பது போல் தென்படுகிறதோ அது போல இறைவனை நம்மோடு இணைக்கிறது இந்த உடன்படிக்கையின் வில்.

சூரியனின் ஒளியால் மழைத்துளி பெறும் மாற்றம் ஒளிப்பிழம்பாக வானவில்.

இறைவனின் அருள் ஒளியால் நாம் பெரும் மாற்றம் செயல் வடிவமாக நம் வாழ்வில்.

வானவில் மழை வந்து சென்ற பிறகே வரும். பார்க்கும் நமக்கு மகிழ்வைத் தரும். பல்வேறு வண்ணங்களால் நம் மனதை கொள்ளை கொள்ளும். சிறிது நேரமே என்றாலும் நம் உள்ளங்களை அள்ளி சென்று விடும். நமது வாழ்வும் வானவில் போன்று மாற்றம் பெற்று நம்மோடு உடன் பயணிப்பவர்களுக்கும், வாழ்பவர்களுக்கும் மகிழ்வை தரக் கூடியதாக அமைய வேண்டும்.


நற்செய்தி வாசகத்தில் இயேசு பாலைநிலத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்ட நிகழ்வை வாசிக்கக் கேட்டோம். இயேசு சோதிக்கப்பட்ட நிலையிலும் வானதூதர்களால் பணிவிடை பெறப்பட்டார். சோதனை காலத்திலும் துன்புற்ற நேரத்திலும் இறைப்பராமரிப்பை உணர்கிறார். நமது வாழ்விலும் இத்தகைய இறைப்பராமரிப்பை நாம் உணர வேண்டும். நாம் வாழுகின்ற உலகம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டதாக இருக்கின்றது. அரசியல் மாற்றம், பொருளாதார மாற்றம், வரி மாற்றம் வட்டி மாற்றம் என்று எல்லாமே மாறிக் கொண்டே இருக்கின்றது. எத்தனை மாற்றங்கள் வந்து சென்றாலும் நாம் மாறாவிட்டால் எதையும் மாற்றவும் முடியாது, ஏற்கவும் முடியாது. நம்மைச்சுற்றி இருக்கும் மாற்றங்கள் சில நம்மை வருத்தப்பட வைக்கலாம் ஆனால் அது நாம் அனுமதித்தால் மட்டுமே நடக்கும். வெளிப்புறத்தில் நடக்கும் வித்தியாசமான மாற்றங்களை விட நமக்குள் நாமே செய்யும் மனமாற்றங்கள் தான் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன. இயேசுவின் துன்பத்திலும் வானதூதர்களின் பணிவிடை ஆறுதல் தருகின்றது. நமது துன்பத்திலும் இறைவனின் உடனிருப்பு நமக்கு ஆற்றலை தரும்.


நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது மாற்றத்திலும் துன்பத்திலும் இறைவனின் உடனிருப்பை ஆழமாக உணர்வது தான். மாற்றத்தின் காலமாம் இந்த தவக்காலம் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நல்லதொரு வளர்ச்சி மாற்றத்தை தர இறைவனின் ஆசீர் வண்டுவோம். சாதாரண மழைத்துளி சூரியனின் ஒளியால் வானவில்லாக மாறி காட்சி அளிப்பது போன்று, நமது வாழ்வும் இறைவனின் அருள் ஒளியால் மாற்றம் பெற அருள் வேண்டுவோம். மாற்றம் நல்லதொரு வளர்ச்சி மாற்றமாக இத்தவக்காலத்தில் மலரட்டும் இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்


Friday, 5 February 2021

எல்லோருக்கும் எல்லாமாய்

 எல்லோருக்கும் எல்லாமாய் இருப்பது எல்லாராலும் முடியாது. ஆனால் இறைமகன் இயேசுவால் முடியும். அவர் வழி வாழ்ந்த பவுலடியாராலும் அவ்வாறு வாழ முடிந்திருக்கின்றது. பொதுக்காலத்தின் 5ம் ஞாயிற்றில் இருக்கக் கூடிய நம்மை இன்று எல்லோருக்கும் எல்லாமாய் வாழ இறைவன் அழைக்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் யோபு இறைவாக்கினர் துன்பத்தின் உச்சகட்டத்தில் தன் வாழ்வை எண்ணி வருந்திக் கூறுவதாக வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம்.

நிழலுக்கு ஏங்கும் அடிமை போல, கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போல இருக்கின்றேன் என்று தனது நிலைமையை தன் நண்பர்களுக்கு எடுத்துரைப்பது போல அமைந்துள்ளது இன்றைய முதல் வாசகம். தன் வாழ்வு இப்படியே முடிந்து விடுமோ ? தனது வாழ்வில் இனி நல்லவை எதுவும் திரும்ப வராதோ? என்று எண்ணி வருந்துகின்றார். நாமும் பல நேரங்களில் துன்பம் வந்து விடுமோ என்று அஞ்சுகின்றோம். நன்மை வராமல் போய்விடுமோ என்று வருந்துகிறோம். எல்லோருக்கும் எல்லாமாய் இருக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதை ஏனோ தவற விட்டு விடுகின்றோம்.

இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் நற்செய்தியை பிற மக்களுக்கு அறிவிப்பதற்காக தான் எல்லோருக்கும் எல்லாமாய் மாறினதாக எடுத்துரைக்கின்றார். நற்செய்தியை அறிவிக்காவிடில் தனக்கு கேடு என்று எண்ணி அதன்படி செயல்படுகின்றார். தனது வாழ்வில் எவ்வளவு துன்புற்றாலும் அதை அனைத்தையும் கிறிஸ்துவின் மகிமைக்கென எடுத்துக் கொள்கின்றார். துன்பத்திலும் இன்பத்தைக் கண்டு கொள்ள முயல்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு பேதுருவின் மாமியார் காய்ச்சலைப் போக்கிய நிகழ்வு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இயேசுவின் மூன்று விதமான செயல்களை நமது சிந்தனைக்கு என்று எடுத்துக் கொள்வோம். அருகிருத்தல், செபித்தல், பணி செய்தல்.

அருகிருத்தல்:
இயேசு பேதுருவின் மாமியார் காய்ச்சலால் துன்புறுகின்றார் என்று தெரிந்தவுடன் அவரருகில் செல்கின்றார். அவரது கையைப் பிடித்து தூக்கிவிடுகின்றார். நோயாளியைத் தேடிச்செல்கின்றார். அவரது அருகில் செல்கின்றார். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகின்றார்கள் என்றால் வீட்டின் உரிமையாளர்களுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. அவர்கள் காலில் சக்கரம் இல்லாத குறையாக சுற்றிக் கொண்டு இருப்பார்கள். அதுவே அந்நேரத்தில் அவர்களுக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் அந்த வீட்டின் சூழலே மாறிவிடும். வழக்கமான கலகலப்பு, மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும். வந்த விருந்தினருக்கும் ஏன் வந்தோம் என்ற மனநிலை, வீட்டு உரிமையாளருக்கும் இந்நேரத்தில் வந்திருக்கின்றார்களே என்ற கவலை, அவ்வீட்டின் இயல்பு நிலையையே மாற்றிவிடும். அவ்வாறு நிகழாதவாறு இயேசு அந்த பெண்ணின் உடல் நிலையை சரி செய்கின்றார். நோயளிகளின் அருகில்மட்டுமல்ல சாதாரணமாகவே யார் அருகிலும் செல்லக் கூடாது என்று சமூக இடைவேளி கடைபிடிக்கும் காலத்தில் நாம் இருக்கின்றோம். ஆனால் இந்த இடைவெளி மனித உறவுகளிலும் உள்ளங்களிலும் விழுந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு நமது சமூகம் மாறிக் கொண்டு இருக்கின்றது.
அப்படிப்பட்ட நேரத்தில் இயேசு உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் செல்ல அவர்களின் கைகளைப் பிடிக்க நமக்கு வலியுறுத்துகிறார். கைகளைப் பிடிப்பது என்பது உங்களுக்காக நான் இருக்கின்றேன் என்பதன் அடையாளம். தூக்கிவிடுதல் அவர்களின் இயலாமையிலிருந்தும், பலவீனத்திலிருந்தும் தூக்கி விடுதலாகும். அப்படி நாம் செய்யும் போது நாமும் இயேசு போல எல்லோருக்கும் எல்லாமாய் மாறுகின்றோம்.

செபித்தல்;
எவ்வளவு பெரிய புதுமைகளை செய்திருந்தாலும், அற்புதங்களை நிகழ்த்தி இருந்தாலும் இயேசு தனிமையில் இறைவனோடு செபிப்பதை ஒரு போதும் மறந்ததே கிடையாது. அவரது அற்புதங்கள் புதுமைகளுக்கான வலிமையை அந்த செப நேரத்தில் பெற்றுக் கொள்கின்றார். அதுவும் அதிகாலையில் எழுந்து தனிமையான ஒரு இடத்திற்கு சென்று செபிக்கின்றார். தனது வாழ்விற்கான வலிமை செபம் என்பதை அறிந்து இருந்தார் இயேசு. இறைமகனுக்கே செபம் அவரது வாழ்விற்கு அவசியம் என்றால் நாம் எம்மாத்திரம். செபம் வெற்றி தரும் என்பதை உணர்ந்து, செபிக்கப்பழகுவோம். நாம் தனிமையில் இறைவனிடம் எடுத்துரைக்கும் செபங்கள், மன்றாட்டுக்கள், நிச்சயம் பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் செபிக்கப்பழகுவோம்.

பணி செய்தல்:
இயேசு தனக்கு பழக்கமான மனிதர்களிடம் மட்டும் வேலை செய்ய விரும்பவில்லை. தான் புதுமை செய்த இடத்தில் அவரை அதிகம் தேடுகின்றார்கள் என்று தெரிந்தவுடன் வேறு இடத்திற்கு நகரத் தொடங்குகின்றார். அறிமுகமான, அவர் மேல் பாசம் கொண்ட மக்களை விட முகம் தெரியாத புது நபர்களுடன் தன் பணியைத் தொடங்க தயாராக இருக்கின்றார். நீர் தேங்கும் குட்டை குளம் போல் இல்லாமல், அருவி ஆறு போல விரைந்து ஒடுகின்றார். தனது பணி ஒரு சில மக்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து மக்களுக்கு தேவை என்பதை தனது சொல்லாலும் செயலாலும் அடிக்கடி நிரூபிக்கின்றார். தனது அன்பு ஒருவரிடத்திலும் ஒரு ஊரிலும் மட்டும் அடங்கி விடக் கூடியது அல்ல. அது உலக எல்லை வரை விரிவடைந்து கொண்டே இருக்கக் கூடியது என்பதை வெளிப்படுத்துகின்றார். நாமும் நம்முடைய அன்பை ஒரு சிலர்களிடம் மட்டும் காட்டி அதனை அத்தோடு நிறுத்தி விடாமல் இயேசுவின் இரக்கத்தின் அன்பை போன்று பலருக்கும் கிடைக்கும்படி அன்பு செய்து வாழ்வோம்.

இவ்வாறு இயேசு போன்று அருகிருந்து, செபித்து பணி செய்து வாழும் போது, நாமும் எல்லோருக்கும் எல்லாமாய் மாறுவோம். துன்பங்களை எதிர்கொள்ளும் சக்தி பெறுவோம். செபத்தினால் வலிமை பெறுவோம். பிறரையும் வலுப்படுத்துவோம். பணி செய்து பலன் பெறுவோம். எல்லோருக்கும் எல்லாமாய் இருக்க, இறைமகன் இயேசுவின் கண்மணிகளாய் வாழ்ந்து சிறக்க, இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...