Sunday, 3 April 2022
துன்பம் .
துக்கம் என்பது பால் எக்மென் என்னும் அறிவியல் அறிஞர் கூறும் 6 அடிப்படை உணர்வுகளில் ஒன்று. துன்பம் இன்பம் கோபம் ஆச்சரியம் பயம் வெறுப்பு என்பன அவ்வுணர்வுகள். இதில் துன்பம் மனிதனை மிகவும் வாட்டக் கூடியது. இந்த துன்பத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் பல வழிகளில் தங்களுடைய உணர்வுகளை பிறருக்கு எடுத்துரைக்கின்றார்கள். அமைதியாக யாரிடமும் பேசாமல் இருப்பது. தனிமையாக இருப்பது, சோம்பலுடன் எப்போதும் ஓய்வு எடுத்த நிலையில் இருப்பது அழுவது போன்றவற்றின் மூலம் நம்முடைய துன்பத்தை பிறருக்கு எடுத்துரைக்கின்றோம். துக்கம் வருத்தம் சோகம் என பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் துன்பம் தரும் உணர்வு என்னவோ ஒன்றுதான். அல்லல் வேதனை இடர் இடும்பை இன்னல் துயர் பீடை என தமிழ் மொழியில் இன்னும் பல பெயர்கள் உண்டு. துன்பம் கவலை இல்லாத மனிதன் இல்லை எல்லோருக்கும் அவரவர்கள் நிலைமை தரம் தகுதி பொறுத்து கவலைகளும் துன்பங்களும் ஏற்படுகின்றன. சிறு குழந்தைகளுக்கு அம்மா அப்பா தான் கேட்டதை வாங்கிதரவில்லை என்ற கவலை. மாணவர்களுக்கு மதிப்பெண் பரிட்சை பற்றி கவலை. இளம் வயதினர்க்கு மேற்படிப்பு, வேலை வாய்ப்பு திருமணம் பற்றிய கவலை. கணவன் மனைவி பெற்றோர் பெரியோர் என இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. கவலை துன்பம் இல்லாத மனிதன் இல்லை . இவை இல்லாத மனிதன் மனிதனே இல்லை என்னும் அளவிற்கு நமக்கு துன்பங்கள் வாழ்வில் ஏற்படுகின்றன.
இந்த துன்பத்தை நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பதை பொறுத்து அல்ல அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்தே அதன் பாதிப்பு இருக்கிறது. இது நிரந்தரம் இல்லை இதை விட்டு நான் கடந்து விடுவேன் என்று துன்பத்தை எதிர்கொள்பவர்கள் நினைப்பவர்கள் மட்டுமே அதிலிருந்து மீண்டு வருவர். மூன்று வகையான துன்பங்களால் நாம் பாதிக்கப்படுகிறோம்.
1. நம் சக்திக்கு மீறீய துன்பம் அதாவது இயற்கை பேரிடர்களினால் வரும் துன்பங்கள்.
2. விபத்து மற்றும் நோயினால் ஏற்படும் துன்பங்கள்.
3. நம் உடலாலும் மனத்தாலும் ஏற்படும் துன்பங்கள்.
இதில் முதல் இரண்டு துன்பங்களும் எப்போது எப்படி நேரும் என்று நாம் அறியமுடியாது. ஆனால் மூன்றாவது துன்பம் நாமே ஏற்படுத்தி கொள்வது. அதனை தவிர்க்க நம்மால் முடியும். அடுத்தவரை பற்றி தீயது எண்ணாமலும் செய்யாமலும் இருக்கும் போது தேவையற்ற வீண் கவலைகள் நம்மிடமிருந்து அகன்று போகின்றன. நல்லவற்றை மட்டும் நினைக்கும் போது தீயவைகள் தானாக வெளியேறுகின்றன.
தவக்காலத்தின் இந்நாட்களில் இயேசுவின் துன்பத்தையும் பாடுகளையும் சிந்திக்கும் நாம் அத்துன்பம் நமக்கு கொடுக்கும் வலிமையை பெற்றுக் கொண்டு வளமாக வாழத்தானே தவிர, வருந்தி அழ அல்ல. இயேசுவிற்கும் அன்னை மரியாளுக்கும் வராத துன்பங்களா நம்மை வந்தடைய போகின்றன என்று நினைத்து துணிந்து வாழ ஆரம்பித்தால் போதும் நம் வாழ்வு சிறப்பாக இருக்கும். துன்பங்கள் நம் வாழ்வை செதுக்குவதற்காகத் தானே தவிர சிதைப்பதற்கு அல்ல. துன்பத்திலும் துணிவாக போராடுபவர்களே சாதனையாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர். எதிர் நீச்சல் போடுபவனே உயிர் வாழ்கிறான். எதிர் காற்றிலும் புயலிலும் தாக்கு பிடிக்கும் மரமே நீடிய காலத்திற்கும் நிலைத்து நிற்கிறது.
உலகத்தில் உள்ள அனைத்தும் இரண்டு இரண்டாகத் தான் இருக்கின்றன. முன் பக்கம் பின்பக்கம், நல்லது கெட்டது, இன்பம் துன்பம், பாவம் புண்ணியம் , நேர்மறை எதிர்மறை, பூ தலை என அனைத்திற்கும் இரண்டு பாகங்கள் உள்ளன. எனவே எதிர்வரும் துன்பத்தை கண்டு கலங்காது, இதற்கு அடுத்து ஒரு நன்மை நம்மை நாடி வர காத்திருக்கிறது என்ற நம்பிக்கையில் செயல்படுவோம். ஒரு பக்கம் இன்பம் மறு பக்கம் துன்பம் நிறைந்தது தான் வாழ்க்கை. இதில் ஒரு பக்கம் இல்லை என்றால் கூட வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. நாம் நாமாக இருக்காத வரை துன்பங்கள் நம்மை துரத்திக் கொண்டு தான் இருக்கும். இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்து விடுமோ என்ற கவலை சிலருக்கு. துன்பத்தையும் கவலைகளையும் தோள் மேல் தொடர்ந்து சுமப்பதை விடுத்து அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை கண்டறிந்து வாழ முயற்சிப்போம். சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள் என்ற இயேசுவிடம் நம் சுமைகளை இறக்கி வைத்து விட்டு சுகமாக வாழ முயற்சிப்போம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...