அறுசுவை வாழ்வு

அறுசுவை வாழ்வு இனிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, புளிப்பு இணைந்த அறுசுவை உணவு உடலிற்கு நல்லது. இவை கலந்த உணர்வு வாழ்விற்கு நல்லது. சுவைத்து வாழ வேண்டிய வாழ்க்கையை வெறுத்து சலித்து வாழ்வது நல்லதல்ல. இங்கிலாந்து நாட்டில் டெய்சி என்ற இளம் பெண்.மிகத்துடிப்பானவள். செய்யும் செயல்களை மிக விரும்பி செய்பவள்.அன்றன்றைய வாழ்வை சுவைத்து அனுபவித்து வாழ்பவள். காண்போர் கண் குளிரும் வண்ணம் மகிழ்ந்து பேசுபவள்.திடிரென்று ஒரு நாள் நோய்வாய்ப்பட்டாள்.மூளையில் கேன்சர் கட்டி.இறப்பின் நாள் முன்குறிக்கப்பட்டது. குடும்பத்தாரின் துன்பத்திற்கு அளவில்லை.ஓரிரு வார மாதங்களில் படுத்த படுக்கையானாள். தன்னை நாடி வந்து நலம் விசாரிக்கும் அனைவரிடத்திலும் புன்னகையையே பரிசாகத் தந்தாள். இப்படிப்பட்ட ஒரு பெண்ணையா இறைவன் இப்படி சோதிக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்பு அனைவரின் உள்ளங்களிலும், உதடுகளிலும். எதனைப் பற்றியும் கவலைப்படாத டெய்சி தனது இறுதிச்சடங்கு எப்படி நடைபெற வேண்டும் என்று குடும்பத்தாரை அழைத்துப் பேச எண்ணினாள். இறுதியாக தன்னைப் பெட்டிக்குள் வைக்கும் முன் தனது கைகளில் சாப்பிட பயன்படும் முள்கரண்டி ஒன்றினை வைத்து அடக்கம் பண்ணச்சொன்னாள். ஏனென்று கேட்பவர்களிடத்தில் நீங்கள் சொல்லுங்கள், '' உணவு விடுதியில் உணவு உண்பவரின் தட்டுக்களை எடுக்க வரும் பணியாளர் சொல்வார் 'உங்களுடைய முள்கரண்டியை நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் ருசித்து உண்ண உணவிருக்கிறது ' என்ற. அதுபோல் தான் நமது வாழ்விலும் ருசிக்க வேண்டிய தருணங்கள் ஏராளமாய் உள்ளன. கண் மூடி தூங்கி விழிக்கும் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்குச்சொல்வது இதுதான் 'இன்று நீ ருசித்து வாழ வேண்டிய வாழ்வு இன்னும் உள்ளது.இறைவன் தந்த எனது வாழ்வை ருசித்துவிட்டேன். இறைவனோடு வாழ்வை ருசிக்கச்சொல்கிறேன் '' என்றாராம். அறுசுவைகளின் அளவை இறைவன் நமது வாழ்வில் அளந்து வைத்துள்ளார் , அவரவர் சுவை (ருசி ) நரம்புகளுக்கேற்றார் போல. எனவே எச்சுவையையும் சுவைக்கும் குபேரன்/ள்களாக நமது வாழ்வு அமையட்டும்:-)

Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.