உங்க வயசு எத்தனை?
நம்பவே முடியலை. உங்களுக்கு இத்தனை வயசா?
(ரொம்ப கம்மியா சொல்றீங்க? என்ன அதிகமா சொல்றீங்க? என்று இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம்.)
எனக்கும் என் நண்பருக்கும் இன்று ஓர் விவாதம் நடைபெற்றது. அவர் என்னை விட ஓர் வயது மூத்தவர். ஆனால் யாரும் நம்ப மாட்டார். ஏனெனில் நம் உடல் வாகு அப்படி. சரி விசயத்துக்கு வருவோம். வயது என்பது உடல் வளர்ச்சியைப் பொறுத்ததா? இல்லை, உள்ள வளர்ச்சியைப் பொறுத்ததா என்பது தான் கேள்வி.
இங்கு ஒருவரிடம் வயதைக் கேட்டால், நீங்களே கண்டு பிடியுங்கள் என்பர். அதிகமாகச் சொன்னால் முகம் சுண்டிப் போய்விடும். குறைத்துச் சொன்னால் ஆகாயச் சூரியனே அஸ்தமம் இல்லாமல் அகத்தை அலங்கரிக்கும். தொடக்கத்தில் நானும் இப்படித் தான் வயதை யாரேனும் கூட்டிச் சொன்னால் உள்ளுக்குள் ஓர் அமிலச் சுரப்பியே அருவியாக ஓடும். என்னைப் பார்த்தால் அவ்வளவு வயசானவராகவாத் தெரிகிறது என்று கேட்கத் தோன்றும். ஆனால்,
'' வயது உடல் வாகைப் பொருத்து அல்ல நீங்கள்
வாழும் வாழ்க்கையைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது''
என்று படித்ததும் தெளிவு பெற்றேன்.
உடல் பருமனானவரை வயதானவர் என்றும், மெலிந்த உடல் உடையவரை இளமையானவர் என்றும் கருதுவது தவறு. நாம் நமது வாழ்க்கையில் பிறருடன் பழகும் முறையில் முதிர்ச்சி அடைந்தவர்களாக இருக்கிறோம் என்பதை அவர்கள் இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள் .என்னை இப்போது யாராவது வயதைக் கூட்டிச் சொன்னால் கவலையேப் படுவதில்லை. ஏனெனில் நான் பழகும் விதத்தில் முதிர்ச்சி பெற்றவராயிருக்கிறேன் என்று பெருமை கொள்கிறேன். உங்கள் வயதையும் யாராவது கூட்டிச் சொன்னால் கவலை வேண்டாம். ஏனெனில் நாம் உள்ள முதிர்ச்சி பெற்றவர்கள்.
வயது என்பது உடல் வளர்ச்சியைப் பொறுத்து அல்ல
உள்ள வளர்ச்சியைப் பொறுத்தே என்பது எனது கருத்து.
ஆமா உங்க வயசு என்ன?