Friday, 29 April 2022

உலக தொழிலாளர்கள் தினம்

 இன்னைக்கு என்ன ஸ்பெசல்? வணக்கம் அன்பு உள்ளங்களே மே 1 உலக தொழிலாளர்கள் தினம். கடின உழைப்பு கட்டாயம் பலன் தரும். அதற்கான காத்திருப்பு  ஒரு நாள் வெற்றிதரும் நு சொல்வாங்க. அது மாதிரி கடினமா உழைக்கிற எல்லா தொழிலாளர்களுக்கான நாள் தான் இந்த உழைப்பாளர் தினம் அல்லது தொழிலாளர் தினம். இந்த நாள் கொண்டாடுறதுக்கான காரணம் வரலாறு என்னன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க. 

18 ம் நூற்றாண்டோட கடைசியிலயும் 19 ம் நூற்றாண்டோட தொடக்கத்திலயும் வேகமா வளர்ச்சி அடைந்த நாடுகள்ல  தொழிலாளர்கள் 18 மணி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டாங்க. இதை எதிர்த்து பல போராட்டங்களும் குரல்களும் கொடுக்க ஆரம்பிச்சி இங்கிலாந்துல சாசன இயக்கம் நு ஒன்னு 6 கோரிக்கைகளோட உருவாச்சி அதுல மிக முக்கியமான ஒன்னு 8 மணி நேர வேலை. 

இதைத்தொடர்ந்து உலகம் முழுசும் பல போராட்டங்களும் ஊர்வலங்களும் ஏற்பட ஆரம்பிச்சது.   

1830 ல பிரான்சில நெசவுத்தொழில் செஞ்சிட்டு இருந்த தொழிலாளிங்க 15 மணி நேரம் கட்டாயம் உழைக்க வேண்டியது இருந்தது. இது தொடர்பா 1834 ல ஜனநாயகம் மரணம் கிற கோசத்தை வச்சி கிளர்ச்சி நடந்து தோல்வியில முடிஞ்சது. 

ஆஸ்திரேலியால 1856ல மெல்பர்ன் கட்டிட தொழிலாளர்கள் 8 மணி நேர வேலையை கோரிக்கையா முன்வச்சி வேலை நிறுத்தத்துல ஈடுபட்டு வெற்றி பெற்றாங்க. 

ரஷ்யால சார் மன்னரோட ஆட்சியில ரஷ்ய தொழிலாளிகள் அதிகமான வேலைப்பளுனால கஷ்டப்பட்டபோ 1896 ல லெனின் தலைமையில் இதுக்கான பல போராட்டங்கள் நடந்துச்சு. இது தான் ரஷ்ய புரட்சிக்கு காரணமா அமைஞ்சது. 

அமெரிக்கால 1832 ல பொஸ்டன் கப்பல் ல வேலை செஞ்ச தச்சுத்தொழிலாளர்கள் 10 மணி நேர வேலைய கோரிக்கையா முன் வச்சாங்க. இதே மாதிரி பென்சில்வேனியால நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள், இரயில்வே தொழிலாளர்கள் நு எல்லாரும் குறைவான வேலை நேரத்த வலியுறுத்தி 1877 வேலை நிறுத்தத்துல ஈடுபட்டாங்க. இதனால அமெரிக்கா தொழிலாளர் கூட்டமைப்பு நு ஒரு இயக்கம் உருவாக்கப்பட்டுச்சு. 1886 மே 1 நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு வலியுறுத்தி மே தினம் பிறக்க காரணமா இருந்தது. இந்த வேலை நிறுத்தத்துல தொழில் நகரங்களான சிகாகோ நியுயார்க், பிலடெல்பியா, மில்விக்கி சின்சினாட்டி பால்டிமோர் நு அமெரிக்கா முழுசும்  மொத்தம் 1200 நிறுவனங்கள்ள இருந்து ஏறக்குறைய 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்றாங்க.


இந்தியால முதல் முறையா சென்னையில தான் தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டுச்சு. 1923 ல் பொதுவுடைமைவாதியும் தலை சிறந்த சீர்திருத்த வாதியுமான ம. சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்றம் பக்கத்துல உள்ள மெரினா கடற்கரையில முதல் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடி செங்கொடி ஏற்றினார்.. 

இந்த மே தினத்தை சிறப்பிக்கிற விதமா பல சிலைகள் நினைவுச்சின்னங்கள் உலகம் முழுசும் இருக்கு. நம்ம சென்னையில மெரினா கடற்கரையில அண்ணா சதுக்கம் எதிர்ல, 1959 ல   தொழிலாளர் வெற்றி சின்னம் எழுப்பப்பட்ட்ச்சு. 1990 ல நேப்பியர் பூங்கா மே தினப் பூங்கானு பெயர் மாற்றப்ப்ட்டுச்சு. இதுபோல  அமெரிக்க ஐக்கிய நாடுகள்ள, பியர்லஸ் கர்ல் ஸ்டசு, ஸ்பிரிட் ஆப் சொலிடரிடி ஸ்டசு, ஹைமார்கெட் டிரஜெடி ஸ்டசு உருவாச்சு. 

இந்த தினம் கொண்டாடப்படுறதுகான காரணம் ஓய்வில்லாமல் உழைச்சிட்டு இருக்கிற தொழிலாளர்களுக்கு அவங்க உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கணும் கிறது, தான்.  தொழிலாளர்கள் எல்லாரும் தங்களோட உழைப்பை சுரண்டுற முதலாளிகளுக்கு  எதிரா  ஒண்ணு கூடணும்னு நினைச்சு இந்த தினத்துக்கு அடிக்கல் நாட்டியவர் கார்ல் மார்க்ஸ். உழைப்பு இல்லாம எந்த உயிரும் இல்லை சின்ன எறும்பு கூட அது தேவைக்கு உழைக்குது. ஆனா ஆறறிவு உள்ள மனுசன் தான் ஐந்தறீவு ஜீவனை விட மோசமா நடத்தப்படுறான் இதை தடுக்கணும் அவங்களுக்கான  உரிமையையும் ஊதியத்தையும் அவங்க பெறணும்னு உருவாக்கப்பட்டது இந்த நாள். 

தற்போது இந்த தினம் கிட்டதட்ட 80 நாடுகள்ல கொண்டாடப்படுது. உழைப்பு கிறது எல்லாருக்கும் பொதுவானது. கந்தல் ஆடை கதர் சட்டை எது உடுத்தி வேலை செஞ்சாலும் வேலை வேலை தான் . அதிக சம்பளம் வாங்குறவன் குறைந்த சம்பளம் வாங்குறவன் கிற வித்தியாசத்தி வச்சி ஒருத்தரை நாம எடை போடக்கூடாது. அப்படிப்பட்ட மனநிலைய கட்டாயம் நாம் மாத்தணும். திருட்டு பொய் சட்டத்திற்கு புறம்பான செயல் இது இல்லாம செய்யப்படுற எல்லா வேலையும் சிறப்பான வேலை தான். 

அதனால் உலக தொழிலாளர்கள் தினம் கொண்டாடுற இந்த நாள்ல கஷ்டப்பட்டு வேலை செய்யுற ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் உடல் உள்ள நலன் கிடைக்கவும் அவங்க உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவும் வாழ்த்துவோம். 

இயக்கம் இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை . இதயம் இயங்கும் கடிகாரம் முதல் இந்த பூமி வரை எல்லாமே இயக்கத்தினால தான் இயல்பா இருக்கு. 

தொழிலாளர்கள் கிற சக்கரத்தால தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக்கிட்டு இருக்கு. அவங்களோட வியர்வை துளிகள் புனிதமானது சொன்னால் கூட  மிகையாகாது.  உழைப்பை போற்றுவோம் உழைப்பாளர்களை பாதுகாப்போம். வாழ்த்துவோம் வாழவைப்போம். 

கடினமா உழைச்சு நாட்டையும் வீட்டையும் உயர்த்த துடிக்கிற  ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் இனிய உழைப்பளர்கள் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வழியா உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.  

Monday, 25 April 2022

நன்றி வழிபாடு.

  எல்லாம் படைத்து அதில் என்னையும் வைத்து காலமெல்லாம் காக்கும் கருணை தெய்வமே உம்மை வணங்கி வாழ்த்தி இச்செப வேளையை துவங்குகிறோம். 

தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். 

அன்னையாய் அருகிருந்து ஆசானாய் வழிநடத்தி அற்புதங்கள் புரியும் இறைவா உமக்கு நன்றி. இவ்வுலகைப் படைக்க காத்திருந்த அந்த முதல் நாளில் இருளாய் இருந்தது. உலகம் இருளாய் இருப்பது நல்லத்தல்ல என்று எண்ணி ஒளியை உண்டாக்கினீர். ஒளி உண்டானதால் உயிரினங்கள் வளரத் தொடங்கின. புல் பூண்டுகள் முளைக்கத் தொடங்கின. வெறுமையில் இருந்த இவ்வுலகம் நிறைவை அடையத் தொடங்கியது. அது போல இந்நாளின் நிறைவை அடைய நன்றி என்னும் உணர்வில் திளைக்க நாம் கூடியுள்ளோம். நம் கைகளில் தாங்கியுள்ள இந்த ஒளி நம் வாழ்வென்னும் பொன்னாளை ஒளிர்விக்க அருள் வேண்டுவோம். ஒளி கொண்டு நம் வாழ்வை மெருகேற்ற, வளமான வாழ்வாக நம் வாழ்வு அமைய அருள்வேண்டி பவனி செல்வோம். 

மகிழ்வையும் செழிப்பையும் குறிக்கும் சந்தன குங்கும திலகமிட்டு, தனது வாழ்வின் அடுத்த ஆண்டில் புதிய பணியினை மேற்கொள்ளக் காத்திருக்கும் சகோதரி அவர்களின் வாழ்வு ஒளி மயமாக மகிழ்வாக செழிப்பாக அமைய வாழ்த்தி மகிழ்வோம்.


பச்சை கம்பளம் கொண்டு பாரினை போர்த்தி, ஒளி விளக்கு கொண்டு உயர் வானத்தை வெளிச்சமாக்கிய இறைவா உமக்கு நன்றி. 

அனுபவங்கள் வழி அன்றாட வாழ்வின் எதார்த்தங்களை அன்பாய் ஊட்டியதற்காய் நன்றி. 

உடன் பயணித்த உறவுகள் வழி உண்மைகளை எடுத்துரைத்தற்கு நன்றி. 

இப்படி நன்றி நன்றி நன்றி என்று கூற அடுக்கடுக்கான காரணகளும் காரியங்களும் பல உள்ளன. அவை அனைத்தையும் சொல்லி முடிக்க எம் ஆயுட்காலம் போதாது இறைவா. எனவே இந்நேரத்தில் நன்றி என்று கூறி நீர் செய்த அனைத்தையும் நினைத்துப் பார்க்கிறோம். உம் வழியாக பெற்ற அனைத்திற்கும் நன்றி கூறி உம் ஆசீர் வேண்டுகின்றோம். இப்பாடல் வழி

நன்றி பாடல்.....


செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான். முடிவே இல்லாத பாதையில் பயணிக்கின்றோம். முடிவில் இறைவா நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில். ஆம் அன்பு உள்ளங்களே வாழ்க்கை என்னும் நமது பயணத்தில் நாம் சந்திப்பவர்கள், நம் உடன் பயணிப்பவர்கள் அதிகம். பார்க்கும் இடங்கள், நம்மைக் கடந்து போகும் உணர்வுகள், நபர்கள், நினைவுகள் எல்லாமே நிலையற்றவைகள். நம் பயணத்தை இனிமையாக்க நமக்கு உடன் கொடுக்கப்பட்டவர்கள். நம் களைப்பை ஆற்ற நாம் எடுத்துக் கொள்ளும் குளிரூட்டிகள். நம்மை மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்க கொடுக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள். அவ்வகையில் சகோதரி தனது வாழ்க்கையின் பயணத்தில் சந்தித்த ஒரு நிறுத்தம் தான் இந்த இல்லம். தன்னுடைய சுறுசுறுப்பான செயலாலும் சொல்லாலும் வாழ்வாலும் பணியாலும் பணித்தள மக்களைக் கவர்ந்தவர், புன்னகையால் புத்துணர்ச்சி அளித்தவர். நட்புறவில் நன்மைகள் பலவற்றை செய்தவர். உதவிக்கரம் கொடுத்து உண்மையான உறவுகளை உரிமையாக்கிக் கொண்டவர். பொறுமை என்னும் பண்பு கொண்டு பொற்குடமாய் சிறந்தவர். எளிமை தாழ்ச்சி கீழ்ப்படிதல் மகிழ்ச்சி கொண்டு தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பவர்கள். ஓராண்டு காலம் இவ்வில்லத்தில் நிறைவாக பணி செய்து தன் மேற்கல்வியை தொடர இருக்கும் சகோதரியின் மன நிறைவோடு நாமும் இணைந்து திருப்பாடல் வழி இறைவனுக்கு நன்றி கூறுவோம். 

திருப்பாடல் 136.......


வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஏதோ ஒன்றை கற்பித்து விட்டு தான் செல்கின்றார்கள். கற்றலும் கற்பித்தலும் தானே வாழ்க்கை. 

எண்னுடையதெல்லாம் என்னுடையதல்ல. உன்னுடையதெல்லாம் என்னுடையதே , என்னுடையதெல்லாம் உன்னுடையதே இறைவா என்று திறந்த மனப்பான்மையுடன் இறைத்திருமுன் அமர்ந்திருக்கும் சகோதரி அவர்களுக்கு இறையாசீர் சிறப்பாக கிடைக்க செபிப்போம். 

நன்றி வாழ்த்து.....


கொடுத்த கொடைகளை இறைப்பதம் அர்ப்பணித்து அதற்காய் நன்றி கூறியும், மேலும் பல நலன்களால் தன்னை நிரப்ப வேண்டும் என்று காத்திருக்கும் நம் சகோதரியோடு நாமும் இணைந்து எல்லா வரங்களாலும் நலன் களாலும் இறைவன் அவர்களை நிரப்ப இறைமகன் இயேசு கற்பித்த செபத்தை ஒருமித்து செபிப்போம். 

விண்ணுலகில் இருக்கின்ற......       

  மகிழ்வான தருணங்கள், மறக்க முடியாத நிகழ்வுகள்,

அன்பான உறவுகள், ஆழமான வார்த்தைகள், 

இன்பமான இடங்கள், ஈடில்லா குணங்கள், 

உன்னதமான உள்ளங்கள், ஊக்கம் தரும் ஊரார்கள். 

என பெற்ற அனைத்து நன்மைகளுக்கும் நன்றி கூறி, செய்த நன்மைக்கு நன்றி எதிர்பார்க்காது, பெற்ற நன்மைக்கு நன்றி கூறி மகிழும் நம் சகோதரியோடு நாமும் இணைந்து மகிழ்வோம். 

பாடல் நெஞ்சே நீ ஆண்டவரை......

அன்பு ஒன்று தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான் என்பர் கவிஞர். ஆம் இயேசுவின் அன்பர்களாகிய நாம் அன்பு செலுத்துவதில் வல்லவர்கள், இயேசுவிடமிருந்து அன்பை பெற்று அதை உலகோர்க்கு அள்ளித்தருவதில் நமக்கு முன்மாதிரிகையாக திகழ்பவர் அன்னை மரியாள் எனவே அன்னையை போற்றி அவரின் அருள் வேண்டி பாடுவோம். 

 மாதா பாடல்

 என்னவனே இறைவா என் வாழ்க்கை பயணத்தில் எனக்கென நீ குறிக்கும் திசையே நான் விரும்பி ஏற்று பயணிக்கும் பாதையாக அமையட்டும் என்று இறைப்பதம் தன்னை அர்ப்பணித்து மக்ழிவுடன் தன் பயணத்தை தொடங்க இருக்கும் சகோதரியை இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து எல்லா நலங்களாலும் வரங்களாலும் நிரப்பி வழிநடத்தி  வழ்நாளெல்லாம் காப்பாராக. ஆமென்.      

Sunday, 24 April 2022

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

 அருட்தந்தை ஆல்வின்


அம்மன் பேட்டையில் வந்துதித்த அற்புத சூரியனே

அன்பர் பணிசெய்ய அழைக்கப்பெற்ற ஆர்வளனே

உன்னை அழைத்ததும் நாமே 

உரிய பணிசெய்ய நுழைத்ததும் நாமே

என்ற ஆண்டவரின் அற்புத வாக்கை 

அனுதின வாழ்வாக்க அர்ப்பணித்தவனே


தந்தை சின்னப்பன் தாய் விக்டோரியாவின் மூன்றாவது முத்தானவனே

அந்தோணி டேவிட், லூயிஸ் விக்டரின் அருமை தம்பியே

அழைத்த இறைவனின் பாதையில் பயணிக்க இருக்கும்

அற்புத வேளையில்  ஆயிரம் நன்றிகள் கூறுகின்றோம்.

உன்னை எம் குடும்பத்தில் கொடையாக கொடுத்ததற்கு.


நல்ல தொடக்கம் பாதி  வெற்றி 

உனது தொடக்க கல்வியோ அம்மன் பேட்டை

புனித வளனார் நடுநிலைப்பள்ளி. 


உயரம் கூட கூட உவகை கூடும் 

உன் உவகையைக் கூட்டிய உயர்நிலைப் பள்ளி

வரதராஜன் பேட்டை புனித தொன்போஸ்கோ பள்ளி.


மேலானவர்கள் மேன்மையான செயலை செய்வார்கள்

உன்னை மேன்மைப்படுத்தி மெருகேற்றியது 

கும்பகோணம் சிறுமலர் மேல்நிலைபள்ளி.


கலைகளையும் கல்வி தரங்களையும் 

களப்படமற்ற நட்புகளையும் நீ கற்று - வசந்த

காலங்களை வாழ்வில் பெற்று தந்தது 

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி.


நம்மை நாம் யார் என உணர உதவும் ஆன்மிக வாழ்வில்

ஆழம் கண்டு அனுபவப்பட அதிகமாக உதவியது

கோவை நல்லாயன் குருமடம்.


இயற்கை, மனிதம் சமூகம் மூன்றையும் 

இணைத்து உலகப்பார்வையில்  தெளிவு பெற

இனிமையாய் தத்துவவியல் கற்பித்தது

பூனா பாப்பிரை குருமடம்.



இறைவனின் பண்புகளை இதமாய் புரிந்து

இன்பமாய் வாழ இறையியல் கற்பித்தது.

புனித யோவான் குருமடம் பாஸ்டன் அமெரிக்கா.


இப்படி அனுதினமும் நொடிப்பொழுதும் 

இறைவன் உன்னை மெருகேற்றி மேன்மைப்படுத்தினார். 

இனிதான  பண்புகளாலும் இலகுவான குணகளாலும் 

இன்புற வைத்து இறுதியாக இறைப்பணிக்கென அழைத்தார்.


22.05 2021அன்று எம் குடந்தை மண்ணின் அருட்தந்தையாக 

அமெரிக்க மண்ணில் அருட் பொழிவு பெற்றாய்.

சொந்தம் துறந்து பந்தம் மறந்து தாய் மண்ணையும் விட்டு

அயல் நாட்டில் அருட்பொழிவு பெற்றாலும் - எம்

அம்மன் பேட்டை மண் உனது அருளுக்கு அருள் சேர்க்க விரும்புகிறது.


மழலையாக மண்ணில் பிறந்தாய்

மாபரன் பணி செய்ய அழைக்கப்பெற்றாய்

கல்வி பல கற்றுன் கருத்தாய் உன்னை நீ வளர்த்தாய்

காருண்ய கடவுளின் கருணையை கடலளவு பெற்றாய். 

குருத்துவம் என்னும் திரு அருட்சாதனத்தை பெற்ற நீ

குன்றாது இவ்வருளில் நிலைத்து நின்று

குடும்பத்தார்க்கும் கூடி வாழும் உறவுக்கும் 

குறையாத இறை அருளை நாளும் பெற்றுத்தருவாய்.

விதையாக விழுந்து இன்று விழுது விட துணிந்திருக்கும் உன்

வித்தியாசமான விந்தையான விழுமிய வாழ்வு 

பல இளம் உள்ளங்களுக்கு விதையாக மாறட்டும். 


நன்றி உணர்வோடு திளைத்திருக்கும் இவ்வேளையில் 

நன்மைகள் செய்த இறைவனுக்கு நாங்களும் நன்றி நவில்கின்றோம்.

கலப்பையில் கை வைத்த பின் திரும்பி பார்ப்பவனல்ல நீ

கட்டு கட்டாய் அறுவடை செய்து திரும்புவன் நீ 


காலங்கள் தரும் அனுபவங்களையும் ஆச்சரியங்களையும்

அன்றாட வாழ்வின் அனுதின உணவாக கொண்டு

ஆச்சரியமூட்டும் செயல்களால் அழைத்தலை ஆழப்படுத்த வாழ்த்துகிறோம்.

 முதலாண்டு குருத்துவ அருட்பொழிவு நாள் வாழ்த்துக்கள். 

குருத்துவ நன்றி விழா திருப்பலி வாழ்த்துக்கள்.   




   

Saturday, 23 April 2022

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்.

 இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ? வணக்கம் அன்பு உள்ளங்களே ஏப்ரல் 24 . தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். 

பஞ்சாயத்து இதுல உள்ள முதல் பஞ்ச் கிறது ஐந்து என்ற எண்ணையும், யாத் கிறது மன்றம், பேரவை அல்லது கூட்டம் கிறதை குறிக்கிற ஒரு வழக்கு சொல்லையும் குறிக்குது. கிராமங்கள்ள மக்களுக்குள்ள ஏற்படுற பிரச்சனைகளே அவங்களே  கூடி தீர்த்துக்கிறதுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு தான் இந்த பஞ்சாயத்து ராஜ். இந்த வார்த்தை மகாத்மா காந்தி அவர்களால, பிரித்தானியா ஆட்சி காலத்துல உபயோகப்படுத்தப்பட்டது. கிராமங்களை அவர் அதிகமா விரும்புனதுனால பஞ்சாயத்து ராஜ் கிற இந்த  வார்த்தையே இந்த அமைப்புக்கான பெயரானது. தமிழ்ல இதை ஊராட்சினு சொல்றோம். மத்திய இந்தியாவில பஞ்சமண்டலங்கள், பீகார்ல கிராம ஜன பாதங்கள், இராஜஸ்தான்ல பஞ்ச குலங்கள்னு அழைக்கப்படுது.   கிராம மக்களுக்கு அதிகமான உதவிகளை செய்யணும் கிறது தான் மிக முக்கியமான காரணமா இருந்தது.   

உள்ளாட்சி அமைப்புகள் தங்களோட தேவைகளை வளர்ச்சியை திட்டமிட்டு நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த திட்டம் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களோட கனவு. அதனால திரு நரசிம்மராவ் அவர்களால 1992 ஏப்ரல் 24 ம் தேதி கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. 

இந்த பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் அடிப்படையில ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூன்று அடுக்குகள்ல இயங்குது. மாவட்ட அளவில, வட்டார அளவில, கிராம ஊராட்சி அளவில. 

பஞ்சாயத்து முறை இருந்ததை நமக்கு சோழர் கால உத்திரமேருர் கல்வெட்டுகள்  குடவோலை முறை முலமா கிராம சபை மற்றும் வாரியத் தலைவர்கள் தேர்ந்த்தெடுக்கப்பட்டதை எடுத்து சொல்லுது. 1882 ரிப்பன் பிரபு காலத்தில தல சுய ஆட்சி திட்டம் மூலமா பஞ்சாயத்து சட்டம் பத்தியும் அறிய முடியுது. 

பஞ்சாய்த்து ராஜ் திட்டம் மூலமா மக்களுக்கு தேவையான 29 நலத்திட்டங்களை செய்ய முடியும். மாவட்டம் ஒன்றியம் கிராமம் நு மூனு பிரிவா அதிகாரங்களை பிரிச்சு செய்யுற ஒரு மிகச்சிறந்த அமைப்பு. மூணுல ஒரு பங்கு பெண் உறுப்பினர்கள் இருக்கிறாங்க. வருசத்துக்கு 4 முறை கூடி தங்களோட திட்டங்களை செய்யுறாங்க. சாலை வசதி, குடி தண்ணீர், தெரு விளக்கு, சுகாதாரம் , கல்வி, நூலகம், துப்புரவு, பூங்கா, பாதாள சாக்கடை, சிறிய பாலம் கட்டுதல், வீட்டு மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல், கிராம நூல்கங்களை பராமரித்தல், தொகுப்பு வீடுகள் கட்டுதல், விளையாட்டு மைதானங்களை நிறுவுதல் பராமரித்தம்  போன்ற பணிகளை இந்த அமைப்பு மூலமா செய்யுறாங்க. வரவு செலவு, திட்டம் பற்றிய விவாதம், மத்திய மாநில அரசுகள் கிட்ட இருந்து நிதி பெற்று பணி செய்ய திட்டம் நு முறையான திட்டங்கள் தீட்டி மக்கள் சேவை செய்யுற மகத்தான திட்டம். இது. நம்ம கட்டுற வீட்டு வரி, கேளிக்கை வரி, குடி நீர் வரி, விளம்பர வரி, மூலமா மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செஞ்சி கொடுக்கிறாங்க. இந்த குழு சரியா இயங்குதான்னு கவனிக்க ஆய்வு செய்ய கண்காணிக்க, தவறு செய்யுற இதன் தலைவர்களை மாத்துற நீக்குற அதிகாரம் மாவட்ட ஆட்சியர் கு இருக்கு. 

மத்திய மாநில அரசுகள் தங்களோட அதிகாரத்தை குறைச்சு கிட்டு மக்கள் கிட்ட தங்களோட அதிகாரத்தை பிரிச்சு பரவல் ஆக்குறது மூலமா மக்களுக்கு தேவையான உதவிகளும் நலத்திட்டங்களும் சீக்கிரமா கிடைக்கப்படணும் கிறது தான் இந்த திட்டத்தோட நோக்கம். மக்கள் தங்களோட ஊர்கள்ல அவங்களுக்கு நல்லா அறிமுகமான, சமூக தொண்டு செய்யுற ஆசையுள்ள மக்களை தலைவர்களா தேர்ந்தெடுக்கிறாங்க. பஞ்சாயத்து வலுவா திடமா இருந்தா தான் இந்த நாட்டோட அரசு வலிமையா இருக்கும்.

இந்த பஞ்சாயத்து ராஜ் திட்டம் முதன் முறையா 1992 ல 73 வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் படி கொண்டு வரப்பட்டது . இதோட மூன்றடுக்கு அமைப்பு முறைய ஏத்துக்கிட்டது ராஜஸ்தான். தமிழ்நாடு இரண்டு அடுக்கு முறைய ஏத்துக்கிட்டது. பஞ்சாயத்து ராஜ் திட்டத்துக்காக முதன் முதல்ல தேர்தல் நடந்தது மத்திய பிரதேச மாநிலத்துல. 1952 ல பல்வந்த்ராய் மேத்தாகுழு, 1977 அசோக் மேத்தா கமிட்டி, 1985 ல ஜிகேவி ராவ் கமிட்டி 1986 ல எல் எம் சிங்க்வி கமிட்டி நு பல கமிட்டி ல இந்த திட்டம் பற்றி பேசப்பட்டாலும் 1992 ல இருந்து தான் முறையா தேர்தல் வச்சு நடக்க ஆரம்பிச்சது. 

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. கிராமம் உயர்ந்தால் நாடு முன்னேறும். நாட்டின் முதுகெலும்பு கிராமம். கிறதை உணர ஆரம்பிப்போம். கிராமங்களை ஒரே நாள்ல அழிச்சி நகரமாக மாற்றி விடலாம். ஆனால் நகரங்களை அழிச்சி பத்து வருசம் ஆனாலும் கிராமமாக மாற்ற முடியாது. அதனால கிராம மக்களுக்காக உருவாக்கப்பட்டு இயங்கிக்கிட்டு இருக்கிற இந்த அமைப்புக்காகவும் இந்த அமைப்பு மூலமா ஆர்வத்தோட பணி செஞ்சிகிட்டு இருக்குற எல்லா மக்களுக்கும் நம்மோட வாழ்த்துக்களையும் ஆதரவியும் கொடுப்போம். மக்கள் பணி செய்யுறவங்க மகத்தான இறைவன் பணி செய்யுறவங்கன்னு நினைச்சு அவங்களுக்கு நம்மோட உதவிகளையும் பரிந்துரைகளையும் கொடுப்போம். கண்ணுக்கு தெரியாத கிராமங்கள்ல இருந்துகிட்டு கடுமையா பணி செய்யுற எல்லா ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பணியாளர்கள் தொண்டர்கள் எல்லாத்துக்கும் இனிய ஊராட்சி ஒன்றிய தினம் பஞ்சாயத்து ராஜ் தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வழியா உங்களை மீண்டும் சந்திக்கிறேன் நன்றி வணக்கம். 

Friday, 22 April 2022

உலக புத்தக தினம்.

 இன்னைக்கு என்ன ஸ்பெசல்? வணக்கம் அன்பு உள்ளங்களே ஏப்ரல் 23 உலக புத்தக தினம். புத்தகங்கள் மனித வாழ்வை புரட்டி போடும் புத்துணர்ச்சி அலைகள். வலிமை வாய்ந்த ஆயுதங்கள்.  வாழ்க்கைக்கான வழிமுறைகள் சொல்லும் வழிகாட்டிகள் .இப்படி புத்தகங்களைப் பத்தி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஏன் இந்த உலக புத்தக தினம் என்ன காரணம் நு தெரிஞ்சிக்கலாம் வாங்க.
உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடா இந்த நாள் அமையணும்கிறதும், புத்தகம் வாசிக்கிற எல்லாரையும் பெருமைப்படுத்தணும்கிறதும் தான் இந்த நாளுக்கான நோக்கமே. அது மட்டுமில்லாம 1616 ஆம் ஆண்டு இந்த நாள் ல தான் புத்தகங்களை அதிகமா விரும்புன, வாசித்த புகழ்பெற்ற  எழுத்தாளர்களான    மிகுவேல்டி செர்வண்டேஸ் , வில்லியம் ஷேக்ஸ்பியர், விளாடிமிர் நபோகோவ் ஜோசப் பிலா, மனுவேல் மெஜியா வலேஜா போன்ற சில அறிஞர்களோட பிறந்த நாளும் இறந்த நாளும் வருது. அதனால இந்த நாள்ல  உலக புத்தக தினம் கொண்டாடுறதுக்கான எல்லா தகுதியும் இருக்கிறதா நினைச்சாங்க.  முதன் முதல்ல ஸ்பெயின் நாட்டுல இருக்கிற கட்டலோனிய மக்களுக்கு தான் இந்த நாளைக் கொண்டாடணும்கிற ஆசை தோன்றியது. ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் 23 ம் தேதிய  இவங்க புனித ஜார்ஜ் திருநாளா கொண்டாடி இருக்காங்க. அப்ப திருவிழா பரிசா புத்தகங்களையும் ரோஜாப் பூக்களையும் கொடுக்கிற பழக்கம் இருந்தது. புத்தகங்களை அதிகமா வாங்கவும் வாசிக்கவும் பரிசளிக்கவும் பழக்கப்பட்ட ஸ்பெயின் மக்கள் இந்த தினத்தை புத்தக தினமா அனுசரிக்கணும் நு யுனெஸ்கோ அமைப்பு கிட்ட வலியுறுத்துனாங்க. ரஷ்ய படைப்பாளிகளும் அவங்க புத்தங்கங்களுக்கு காப்புரிமை அளிக்கப்படணும்னு அதே நேரத்தில நினைச்சதால ஏப்ரல் 23 உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினமா கொண்டாடப்பட ஆரம்பிச்சது.  ஐக்கிய நாடுகள்ல இந்த நாளை மார்ச் மாதம் முதல் வியாழக்கிழமை கொண்டாடுறாங்க. 1995 ல இருந்து தான் இந்த தினம் உலகம் முழுசும் முறையா கொண்டாடப்படுது. அந்த வருசம் ஆகஸ்ட் 25 ல இருந்து நவம்பர் 16 வரை  நடந்த யுனெஸ்கோவின் 28 வது மாநாட்டில ஒரு தீர்மானம் நிறைவேற்றுனாங்க. அறிவை பெற, உலகத்தில உள்ள பல்வேறு கலாச்சாரங்களை பற்றிய விழிப்புணர்வை பெற, புரிதல் சகிப்புதன்மை மூலமா மனித ஒழுக்கத்தை மேம்படுத்த, புத்தகம் சிறந்த கருவியா இருக்கிறதால ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23 ம் தேதி உலக புத்தக தினமா கடைபிடிக்கப்பட்டு கொண்டாடப்படணும்னு வலியுறுத்துனாங்க.
புத்தக வாசிப்பு இப்ப உள்ள கால கட்டத்துல கொஞ்சம் குறைஞ்சிகிட்டு தான் வருது. தொலை தொடர்பு இணையம் நு மாற்றுக் கலாச்சாரக் காலத்து ல இருக்கிற நாம அச்சிட்ட புத்தகத்தை வாசிக்கிற நிலைமை மாறி டச்சிட்ட மின்னூல் புத்தகம் வாசிக்கிறவங்களா மாறி இருக்கிறோம். புத்தக வாசிப்பு சுவாசம் மாதிரி இருக்கணும் வாசிக்கிறத நிறுத்துறது சுவாசிக்கிறத நிறுத்துறதுக்கு சமம்.
புனித முற்று மக்கள் புது வாழ்வு வாழ வேண்டும். புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் நு பாரதிதாசன் பாடுகிறார். நாட்டில் மட்டும் இல்லைங்க ஒவ்வொருத்தர் வீட்டிலயும் புத்தக சாலை அமைக்கப்படணும். தேடல் இல்லாத வாழ்க்கை இல்லை . தேடல் இல்லைனா வாழ்க்கையே இல்லை அப்படிப்பட்ட தேடல் ஆரம்பிக்கிற இடமே இந்த புத்தகங்கள்ல இருந்து தான். வளர்ற குழந்தைகளுக்கு இப்ப இருந்தே புத்தக வாசிப்பை நாம பழக்கப்படுத்தணும். அவங்களுக்கு பிடிச்ச கார்டூன் கதை மாந்தர்களோட கதையை படிக்க சொல்லி ஊக்கப்படுத்த ஆரம்பிச்சாலே போதும் நாளடைவில அவங்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கமாகிடும். இதனால தன்னம்பிக்கையும் முயற்சியும் அவங்க கூட தானா வளர ஆரம்பிக்கும்.
புத்தகம் வாசிச்சு எழுதி அதனால வாழ்க்கையில் உயர்ந்தவங்க பல பேரு. புரட்சியாளர் பகத்சிங் சாகுறதுக்கு முன்னாடி வரை புத்தகம் படிச்சதா சொல்வாங்க. எதுவும் தெரியாத முட்டாளா சாகுறதை விட புத்தகம் படிச்சு எதையாவது கற்றுக்கொண்டேங்கிற திருப்தியில் சாக விரும்புறேன்னு சொன்னாராம்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தான் தேடிய புத்தகம் வெகு தொலைவில் இருக்குன்னு தெரிஞ்சி அதை தேடி போய் வாங்கி படித்தார்.
கார்ல் மார்க்ஸ் புத்தக அறைக்குள்ளயே இருந்து அதிக நேரம படிச்சதால தான் இந்த உலகத்துக்கு மூலதனமான பல நிறைய கருத்துக்கள் கிடைச்சது.
நம் நாட்டின் எளிமையான ஜனாதிபதி ஏபி ஜே அப்துல் கலாம் ஒரு மிகச்சிறந்த புத்தக வாசிப்பாளர்.
ஒரு நூலகம் திறக்கப்பட்ட ஒரு சிறைச்சாலை மூடப்படும் நு சொன்னவர் அறிஞர் அண்ணா. இப்படி புத்தகங்களை வாசிச்சு நேசிச்ச இவங்க எல்லாரும் புத்தகங்களுக்குள்ள தங்களை மறைச்சுக்கிட்டாலும் அந்த புத்தகங்கள் இவங்களை எல்லாம் உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
உலக புத்தக தினம் கொண்டாடி மகிழ்ற இந்த நாள்ல, வாரத்துக்கு ஒரு புத்தகம் முடியலையா மாசத்துக்கு ஒரு புத்தகம்னு வாசிக்க பழகுவோம். குழந்தைகளுக்கும் நண்பர்களுக்கும் பரிசளிக்கிறப்ப புத்தகத்தை பரிசளிக்கிறத பயிற்சிப்போம். புத்தகங்கள் சமூக மாற்றத்திற்கு மட்டுமில்ல தனிமனித மாற்றத்திற்கு மான   திறவுகோல்னு புரிஞ்சிகிட்டு புத்தக வாசிப்பை நமதாக்குவோம். சரிந்து கிடக்கும் புத்தகங்கள் எல்லாம் நம் வாழ்வை நிமிர்த்தி விடும் நெம்புகோல்கள்.  வாசிப்பாளர்கள் வாசிக்க முயற்சிப்பவர்கள்  வாசிப்பை நேசிக்கும் அனைவருக்கும் இனிய உலக புத்தக தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு நல்ல நாள்ல இன்னைக்கு என்ன ஸ்பெசல் வழியா உங்களை மீண்டும் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.   

Friday, 15 April 2022

கைவிடப்பட்ட மாமரி


புனித வெள்ளியன்று தன் மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்று ஆழ்ந்த துயரத்தோடும் மன வருத்தத்தோடும் இல்லம் திரும்புகின்றார் அன்னை மரியாள். துயரங்களில் பெரும் துயரம் என்று கருதப்படும் புத்திர துயரம் வாட்ட சொல்ல முடியா வேதனையில் தன் வீட்டை அடைகின்றார். இளம் வயதில் கணவனை இழந்து அன்னை  பட்ட துன்பம் மறையும் முன்  அன்பு மகனின் இழப்பு. சாதாரண பெண் என்றால் அழுது ஓலமிட்டு ஒப்பாரி வைத்து தன் துயரத்தை அன்றே ஆற்றி இருப்பாள். நம் அன்னையோ வீரத்தாய், விழுமியங்களை விதைத்து சென்ற விந்தை மகனை பெற்ற தாய். வியாகுலங்களினால் தன்னை வீரீயப்படுத்தி கொண்ட வித்தியாசமான தாய். எனவே தன் வாழ்வில் நடந்த அத்தனை இறைத் திருவுளங்களையும் மனதிற்குள் அசைபோடுகின்றாள். யூதபெண்ணான மரியா இயேசு அடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாள் ஓய்வு நாள் என்பதனை அறிந்து அதற்காக தன்னை தயார்படுத்துகிறார். யூத முறைப்படி வீட்டில் விளக்குகளை ஏற்றி கடவுளின் பிரசன்னத்தை உணர பாடப்படும் திருப்பாடல்களையும் செபங்களையும் பாட ஆரம்பிக்கின்றார். பாலைவனத்தில் யாவே இறைவன் கூடாரத்தில் தங்கி இஸ்ரயேல் மக்களை பாதுகாத்து பராமரித்ததை நினைவு கூர்ந்து பாடப்படும் பாடல்கள் அவை.  மேலும் யூத முறைப்படி  போர்வையினால் தன்னை மூடி இறைப்புகழ் பாடி இறைபராமரிப்பில் உணர்கின்றார். இவை அனைத்தையும் செய்யும் போது இறைவன் அவர் வாழ்வில் நிகழ்த்திய அத்தனை நிகழ்வுகளையும் கபிரியேல் தூதர் காட்சி முதல் கல்வாரி சிலுவை காட்சி வரை அனைத்தையும் நினைவு கூர்கின்றார். எசாயா இறைவாக்கினர் அறிவித்த துன்புறும் ஊழியராய் மாறி தன்னையே அர்ப்பணித்த தன் மகனின் வழியில் தானும் பயணிக்க முயற்சிக்கின்றார். பெரிய வெள்ளியன்று இயேசுவின் துன்பங்கள் அனைத்தையும் மனதில் சுமந்து, ஆண்கள் கூட்டத்தின் மத்தியில் தன் மகனை நெருங்கி சென்று உடனிருந்தவர், அவர் கீழே விழும் போதெல்லாம் தன் பார்வையால் அவருக்கு பலமூட்டி எழுந்து நடக்க ஊக்கமூட்டியவர், அவர் மேல் விழுந்த அடிகள் ஒவ்வொன்றையும் தன் உள்ளத்தில் விழுந்த அடியாக ஏற்றுக் கொண்டவர்,  தன் அன்பு  மகனின் இறுதி நேரங்களில் உடனிருந்து உணர்வால் நிறைந்திருப்பவர். பெரிய சனியன்று தன்னை அந்த நிகழ்வுகளில் மீண்டுமாய் நிறுத்தி வாழ்விற்கான பலம் தேடுகின்றார். இயேசு வின் வேதனை உடல் வேதனைகளில் வெளிப்பட்டு விட்டது. ஆனால் அன்னையின் வியாகுலங்கள், துயரங்கள் வார்த்தையில் வெளிப்படுத்த முடியாதவைகள். 

இன்று தன்னந்தளியளாய் கைவிடப்பட்டு தனித்து நிற்கும் தாய் மரி நமக்கு மிகச்சிறந்த வாழ்க்கை பாடத்தைத் தருகின்றார். அவர் போல் துணிச்சலுடன் நாம் செயல்பட நமக்கு கற்றுக் கொடுக்கின்றார். ஏழை எளியவர்கள் சின்னஜ்சிறியவர்களுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவின் வார்த்தைகேற்ப, பிறருக்கு ஏற்படுத்தும் துன்பம் அநீதி, அவமானங்கள் அனைத்தும் இயேசுவுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அநியாயங்கள் என்று உணர அழைக்கின்றார். 

 இயேசுவின் சிலுவை அடியில் நின்று துன்பங்களினால் துணிவைப் பெற்றுக்  கொண்ட அன்னை மரி போல துன்புறும் அனைத்து உள்ளங்களோடும் துணை இருப்போம். வெறும் உடல் வேதனை துன்பம் அடைபவர்கள் மட்டும் இல்லாமல் உள்ளத்துயர் அனுபவிப்பவர்களோடும் அருகிருக்க முயற்சிப்போம். துன்பங்களும் துயரங்களும் தனிமையும் வாழ்வின் இரகசியத்தை நமக்கு கற்றுத்தரும் வகுப்பறைகள் என்பதை உணர்ந்து அவற்றை துணிவோடு எதிர்கொள்வோம். நம்பிக்கை அர்ப்பணத்தின் அச்சு அசல், எதையும் ஏற்கும் மனநிலை, சகிப்புத்தன்மை, சாட்சிய வாழ்வு தியாகம், முழுமையான கையளிப்பு என அனைத்து விழுமியங்களையும் முழுமையாக பெற்ற அன்னை மரியாள் போல நாமும் வாழ முயற்சிப்போம். அத்தனை துயர சூழலிலும் தன் மகன் இயேசு உயிர்ப்பார் மீண்டும் வருவார் என்று அவர் கொண்டிருந்த அதே விசுவாச மனநிலையோடு நாமும் காத்திருப்போம் அவரின் வருகைக்காக. புனித சனி நம் துன்பங்களையும் துயரங்களையும் ஆழமான நம்பிக்கை கீதங்களாக மாற்றட்டும். 

Tuesday, 12 April 2022

புனித வெள்ளி:

பெரிய வெள்ளி கிறிஸ்தவர்களாகிய நமக்கு மிகவும் முக்கியமான நாள். நம் வாழ்க்கைக்கான அர்த்தம் தரும் நாள். தவக்காலம் முழுதும் கடைபிடித்த தவ முயற்சிகளையும் ஒறுத்தல்களையும் நாம் ஏன் இவற்றை எல்லாம் இத்தனை நாள் செய்தோம் என்பதற்கான அடையாளம் தரும் அற்புத நாள். அன்பு என்னும் மூன்றெழுத்து முத்தான கவிதைக்கு முத்தாரமாய் அமைந்தது இயேசுவின் வாழ்க்கை சுருக்கம் இந்நாள். மூன்று வருட பணி வாழ்வின் மொத்த  சாராம்சத்தையும், மூன்றே மணி நேரத்தில் வெளிப்படுத்திய மகத்தான நாள். பெரிய வியாழன் அன்று இரவு வழிபாடு முடிந்து நற்கருணை இடமாற்ற பவனி ஆராதனையோடு நள்ளிரவு முடிவடைகிறது. பெரிய வெள்ளி அதிகாலை முதலே ஆராதனை எல்லா ஆலயங்களிலும் ஆரம்பமாக, இறை இரக்க செபமாலை, 24 தொழுகை மலர்கள் ஆராதனைப் பாடல்களாகப் பாடப்படுகின்றன. காயப்பட்டு குற்றுயிரும் கொலை உயிருமாக துன்புற்று கொண்டிருக்கும் இயேசுவுக்கு நமது ஆராதனைகளால் அன்பு மருந்து இடுகின்றோம். நமது செயல்களால் ஆராதனைகளால், அழுத்திடும் அவர் தம் சுமைகளுக்கு ஆறுதல் அளிக்கின்றனர். பிற்பகல் மூன்று மணி அளவில் சொல்லப்படும் செபங்களும் பக்தி முயற்சிகளும் பரிபூரணபலன் கொடுக்கின்றன. இயேசு இறந்து விட்டார் என்பதன் அடையாளமாக மூன்று மணி செப ஆராதனைக்கு பின் கோயில்கள் பூட்டப்படுகின்றன. இயேசுவின் இறப்பு உண்மையிலேயே நமக்கு மிகுந்த இழப்பையும் துயரத்தையும் கொடுக்கிறது என்பதனை வெளிப்படுத்தும் விதமாக மயான ஆழ்ந்த அமைதியும், துக்கமும் அனுசரிக்கிறோம். ஒரு சில ஊர்களில் வீடுகளில் சமைப்பதை விடுத்து பங்கில் மொத்தமாக சம்பந்தி முறையும் கடைபிடிக்கப்படுகிறது. 

மாலையில் பெரிய சிலுவைப் பாதை மிகவும் பக்தியான முறையில் செய்யப்படுகிறது. தவக்காலத்தின் மற்ற வெள்ளிக்கிழமைகளில் செய்யப்படும் சிலுவைப்பாதையைக் காட்டிலும் பெரிய வெள்ளியன்று செய்யப்படும் சிலுவைப்பாதைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. நாடக வடிவிலும், ஆழமான சிந்தனைக் கருத்துகள் வழியாகவும் வழிநடத்தப்படும் இந்த பெரிய சிலுவைப்பாதையில் 12ம் நிலை ஊர்களுக்கு ஏற்ப சிறப்பாக வித்தியாசமான வகையில் செபிக்கப்படுகிறது. 12 ம் நிலை இயேசு சிலுவையில் இறந்ததைக் குறித்து தியானிக்க அழைக்கிறது. எனவே இந்நிலையில் இறந்தவர்களுக்கு கோடி துணி போட்டு மரியாதை செலுத்தும் விதமாக சிலுவைக்கு புது வெள்ளைத்துணி போட்டு மரியாதை செலுத்துகின்றனர். சில இடங்களில் புலம்பல் பாடல்களும் ஒப்பாரி சோக கீதங்களும் இசைத்து உணர்வுபூர்வமாக இயேசுவின் இறப்பை நமக்கு எடுத்துரைக்கின்றனர். பாடுகளின் பாதையில் முழுமையாக பங்கேற்று நம் வாழ்க்கைப்பாதையை செம்மைப்படுத்தவே இம்முயற்சிகள் என்பதை உணர்ந்து பக்தியோடு பங்கேற்போம். 

சிலுவையில் இயேசு சொன்ன 7 வார்த்தைகள் அவரது மொத்த வாழ்விற்கான ஆதாரத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன. 

தந்தையே இவர்களை மன்னியும் இவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கின்றார்கள் என்பதன் மூலம் இவர் தம் வாழ்வு மன்னிப்பில் தோய்ந்தது என்பதை எடுத்துரைக்கின்றார். இதன் மூலம் நாமும் பிறரை மன்னிக்க மன்னிப்பு பெற உதவுகிறார்.

இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்ற வரிகள் இவரது தொலை நோக்கு பார்வையையும் பிறரை மீட்பதற்காகவே தான் வந்தேன் என்பதை எடுத்துரைப்பதாகவும் இருக்கின்றது. நமது வாழ்வும் எதிர்பார்ப்பும் விண்ணக வாழ்வு ஒன்றை மட்டுமே எதிர்நோக்குவதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்..

இதோ உம் தாய் தன் தாயின் மேல் கொண்டிருந்த பாசத்தையும் அகில உலகத்தின் மேல் அவர் கொண்டிருந்த தனியாத தாகத்தையும் எடுத்துரைத்து தன்னுடைய அரவணைப்பை வெளிப்பத்துகிறார். உலகனைத்திற்கும் தாயாக மரியாளையும், அவர் தம் பிள்ளைகளாக நம்மையும் மாற்றியதை எடுத்துரைக்கும் சிறந்த தருணம். அன்னை மரியாளை நம் வழிகாட்டியாக, தாயாக கொண்டு செயல்பட  அழைக்கிறார்.

ஏலி ஏலி லாமா சபக்தானி என்று தன்னுடைய மொத்த உயிர் வேதனையையும் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். என் இறைவா என் இறைவா ஏன் என்னை கை நெகிழ்ந்தீர் என்பதன் மூலம் தன்னுடைய தத்தளிப்பை வெளிப்படுத்தி

நம்முடைய துன்ப துயர நேரங்களில் தத்தளிப்பில் இறைவனை நோக்கி அழைக்க அறிவுறுத்துகிறார். 

தாகமாயிருக்கிறேன் என்று தன்னுடைய மனித நிலை உணர்வுகளை தவிப்பின் மூலம் வெளிப்படுத்தி நமக்கு ஆன்மீக தாகம் இறையரசு தாகம். விண்ணக தாகம் கொண்டவர்களாய் வாழ அழைக்கின்றார். 

எல்லாம் முடிந்தது என்று தன்னுடைய அழைப்பிற்கான நோக்கம் அர்ப்பணிப்பின் நோக்கம் நிறைவுற்றதை எடுத்துரைக்கின்றார். 

தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்ற வார்த்தைகளில் தன்னுடைய இன்னுயிரையும் கடவுளின் கரத்தில் ஒப்படைத்து உயிர் துறக்கின்றார். 

இப்படியாக மன்னிப்பு, இரட்சிப்பு அரவணைப்பு தத்தளிப்பு தவிப்பு அர்ப்பணிப்பு ஒப்புவிப்பு என்னும் பூக்களின் மூலம் நம் வாழ்வை செழிப்பாக்கி உயிரோட்டமுள்ளதாக மாற்ற விழைகின்றார்.


ஆலயத்தில் எந்த விதமான வழிபாடுகளும் நடைபெறாது என்பதால் ஆலய வளாகத்தில் செப வழிபாடுகள் நடைபெறும். எந்த விதமான அலங்காரங்களும் இன்றி வெறுமையான பீடம் ஒன்றில் மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். வழக்கமாக ஒலிக்கப்படும் ஆலய மணிகள் உயிர்ப்பு ஞாயிறு நள்ளிரவு திருப்பலிக்கு முன் வரை ஒலிக்கப்படாது, அதற்கு பதிலாக மரத்தால் ஆன கிரீஸ் எனப்படும் ஒரு வகை ஒலி எழுப்பப்படும். 

 மாலையில் நடக்கும் செப வழிபாடு நான்கு சிறப்பு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. இறைவாக்கு வழிபாடு, பொது மன்றாட்டு திருச்சிலுவை ஆராதனை, நற்கருணை திருவிருந்து .  செபவேளை துவங்கும் முன் குருவானவர் ஆலய வளாகத்தில் உள்ள எளிய பீடத்தின் முன் முகம் குப்புற விழுந்து செபிப்பார். இயேசுவின் தாழ்ச்சியையும் தன்னையே கையளித்த தியாகத்தையும் அடையாளப்படுத்தும் விதமாக இவ்வாறு செய்கின்றார். அதன் பின் இறைவாக்கு வழிபாடு பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு மற்றும் நற்செய்தி வாசகங்கள் வாசிக்கப்படும். குருவானவரின் மறையுரைக்கு பின்  பொது மன்றாட்டுகள் பகுதியில் திருச்சபைக்காக, திருத்தந்தைக்காக, பல்வேறு நிலையில் உள்ளாவர்களுக்காக, திருமுழுக்கு பெற தயாரிப்பவர்களுக்காக, கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக, யூத மக்களுக்காக, அவிசுவாசிகளுக்காக, நாத்திகர்களுக்காக, நாட்டுத் தலைவர்களுக்காக, துன்புறுவோர்க்காக,  செபிக்கின்றனர்.  அதன் பின் திருச்சிலுவை ஆராதனை நடைபெறும். குருவானவர் ஆலய வளாகத்தின் நுழைவு பகுதியில் இருந்து மரத்தால் ஆன திருச்சிலுவையை வெள்ளைத்துணியால் மூடி எடுத்து வருவார். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் ஆணிகொண்ட கைகள் கால்கள் காயம்பட்ட திருவிலா என ஒன்றன் பின் ஒன்றாக துணி விலக்கப்பட குருவானவர் திருச்சிலுவை மரமிதோ இதிலே தான் தொங்கியது உலகத்தின் இரட்சண்யம் என்று பாடுவார். மக்கள் மறுமொழியாக வருவீர் ஆராதிப்போம் என்று பாடுவர். அதன் பின் திருச்சிலுவை மக்கள் ஆராதனைக்கும் முத்தம் செய்வதற்கும் பொதுவில் வைக்கப்படும். இயேசுவின் திருப்பாடுகள் , காயங்கள் குறித்த தியானப் பாடல்கள் பாடப்பெறும். 

இறுதியாக நற்கருணை விருந்து, இன்று முறையாக எந்த விதமான திருப்பலிகளும் நடைபெறாது என்பதால் நேரடியாக திவ்விய நற்கருணை எடுத்து வரப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படும். இவ்வாறாக புனித வெள்ளி இயேசுவின் திருப்பாடுகளின் வெள்ளியாக உலகமெங்கும் உள்ளா கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது. 

திருச்சசபையின் தலைமைப் பீடமான உரோமையில் திருத்தந்தை அவர்களால் கொலோசயம் எனப்படும் இடத்தில் திருப்பாடுகளின் வெள்ளி சிலுவைப்பாதை மற்றும் இதர பிற வழிபாடுகளால் சிறப்பிக்கப்படும். புனித வெள்ளியின் மகிமையை உணர்ந்து நம்முடைய செபத்தாலும் உணர்வோடு ஒன்றிக்கும் பண்பாலும் துயருரும் இயேசுவுக்கு ஆறுதல் அளிப்போம்.  

Saturday, 9 April 2022

உயிர்ப்பு ஞாயிறு காலை வழிபாடு

உயிர்ப்பு ஞாயிறு காலை வழிபாடு அருட்சகோதரி மெரினா. o. s. m அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். அவரோடு இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம். தந்தை மகன்....... அடி முடி தேடினாலும் அகராதியைப் புரட்டினாலும் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்ச்சித்திரம் அன்னை மரியாள். தன் மகனோடு துன்பங்கள் பட்டு அவரோடு உயிர்த்து உயிர்ப்பின் மகிழ்வையும் சுவைத்தவர். இறுதிவரை அவரோடு இருந்து மனுக்குல மீட்புக்காக தன்னையும் தன் வாழ்வையும் அர்ப்பணித்தவர். எனவே தான் இன்று வானுலக அரசியாக தன் மகன் இயேசுவோடு உயிர்ப்பின் மகிழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். துன்பத்தை துணிவோடு சந்தித்து வீர மங்கையாக வியாகுல அன்னையாக இன்று உயிர்ப்பின் ஆற்றல் பெற்ற வானக அரசியாக திகழும் நம் அன்னையை மகிழ்வோடு வாழ்த்தி பாடி நமது செப வேளையைத் துவங்குவோம். வானக அரசியே மனமகிழ்வாய்........ இயேசுவின் மரணம் கல்லறையோடு நின்றிருந்தால் இன்று திருச்சபைக்கு வழியில்லை: கிறிஸ்தவத்திற்கு வேலையில்லை. அவருடைய உயிர்ப்பில்தான் நம் விசுவாசம் நங்கூரமிடப்பட்டிருக்கிறது: திருச்சபைப் பிறந்திருக்கிறது: கிறிஸ்தவம் தழைத்திருக்கிறது. இதுவரை வரலாற்றில் நாசரேத்தூர் இயேசுவாக அறியப்பட்டவர், இன்று கிறிஸ்துவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார். கல்லறை கருவறையாகியது: அவரது சாவு நம் மறுவாழ்வின் தொடக்கமானது. அவருடைய மீட்பு நம்மை இறைவனுக்கு நெருக்கமாக்கியது. ஆகையால் தான் ஆலயமணியின் ஓசை ஆர்ப்பரிக்கிறது: விசுவாசிகளின் நாவில் ‘ அல்லேலூயா’ என்ற ஆரவாரகீதம் எழுகிறது. அவருடைய உயிர்ப்பிலேதான் உயிருக்கு பயந்து உயிரோடு மூடப்பட்ட திருத்தூதர்களின் அறைக்கதவுகள் (உயிர்க்கல்லறை) திறக்கப்படுகின்றன. அவருடைய உயிர்ப்பிலேதான் எதிரிகள் வீழ்கின்றனர். உயிர்ப்பில் உயிர்த்த சமூகம் மலர்கிறது. அவரது பாடுகளில் அவரோடு பங்கேற்று உடனிருந்த நாம் அவரது உயிர்ப்பின் மகிழ்வையும் கொண்டாட அழைக்கப்படுகின்றோம். அவரது உயிர்ப்பு உயிர்ப்பின் மகிழ்வு நமது இதயக்கதவுகளையும் திறக்கட்டும் நமது பலவீனம் என்கின்ற எதிரிகள் வீழ்த்தப்படட்டும். பாடல் ..உயிர்ப்பு பாடல் பொருத்தமான ஏதாவது .... இறைஇயேசுவில் பிரியமான சகோதரிகளே! கடவுள் மனிதர்களாகிய நமக்கு கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷம் எது தெரியுமா? நமக்கு தந்துள்ள “வாழ்க்கை” தான் மிகப்பெரிய பொக்கிஷம். அந்த வாழ்க்கையை ஒவ்வொருவரும் நிறைவாக வாழவேண்டும். நிறைவான வாழ்க்கையை தருபவர்தான் நம்முடைய கடவுள். காரணம்; நம்முடைய கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல. மாறாக வாழ்வோரின் கடவுள் . அதனால் தான் இன்று நாம் நமதான்டவரின் உயிர்ப்பு பெருவிழாவைச் மகிழ்ச்சியோடு சிறப்பிக்கிறோம். உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், இறந்தார்கள் ஆனால் நம்முடைய கடவுள் மட்டும் தான் இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். “மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கு வந்தார்”. ஓர் இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது நாம் வாழ்வுபெரும் பொருட்டு அதும் நிலைவாழ்வு பெரும் பொருட்டு கடவுள் நமக்காக இறந்தாரென்று நற்செய்தியில் பல இடங்களில் வாசிக்கக் கேட்கிறோம் . அந்த இயேசு இன்று உயிர்த்து நம்மோடு பயணிக்க வருகிறார். எனவே ஆண்டவரின் உயிர்ப்பின் மகிழ்ச்சியை ஒருவர் மற்றவரோடு வாழ்க உயிர்ப்பின் மகிழ்வில் வளர்க எனச் சொல்லி கரங்களை குலுக்கி வாழ்த்துவோம் வாழ்க உயிர்ப்பின் மகிழ்வில் வளர்க....... பூ அல்லது இறைவார்த்தை பகிர்ந்து கொள்ளலாம். அது ஒரு அழகான கிராமம். எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண மலர்கள், வாணோக்கி வளர்ந்த தென்னை மரங்கள், பச்சை பசேல் என காட்சியளிக்கும் பூந்தோட்டங்கள் குழந்தைகளின் விளையாட்டுகள், ஆரவாரச் சிரிப்புகள் என அந்த ஊர் முழுவதும் சந்தோசமும், மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தது. இதற்கெல்லாம் அந்த ஊரில் வசித்து வந்த செல்வம் தான் காரணம். தான் படித்த படிப்பை வைத்து அந்த கிராம மக்களுக்கும், குழந்தைகளுக்கும் வேண்டிய அனைத்து வசதிகளையும் அன்றாடம் செய்து வந்தான். உண்மையிலேயே அந்த ஊர் மக்கள்; அனைவரும் திரு. செல்வத்தை அந்த ஊரின் செல்வமாக கருதி வந்தனர். ஒருநாள் இந்த செல்வம் கடைக்குச் சென்று திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக ஓர் விபத்து. தலையில் பலத்த காயத்தோடு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். அங்கு இருந்த மக்கள் இவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். இரத்தம் அதிகமாக வெளியேறிய காரணத்தால் இவரை ஐ சி யூ வுக்குள் எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். இந்த செய்தி ஊர்மக்களுக்கு தெரிந்து அனைவரும் மருத்துவமனையையில் ஐ சி யூ வுக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தனர். அங்கேயே மண்டியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தனர். அப்போது ஒரு 5 வயது உள்ள குழந்தை அங்கு இருந்தவர்களைப் பார்த்து ‘எங்க செல்வம் அங்கிளுக்கு என்ன ஆச்சு? அவர் இப்ப எங்க இருக்காரு?’ என்று கேட்டது. அங்கிருந்த ஒருவர் செல்வம் அங்கில் இந்த ஐ சி யூ வில் இருக்கார் என்றார். அந்த குழந்தை ஐ சி யூ என்றால் என்ன? அங்கு யார் இருக்குரா? என்று கேட்டது. அதற்கு அவர் ஐ சி யூ என்றால் ‘நான் உன்னை பார்க்கிறேன் என்று அர்த்தம்’. ஐ சி யூ வில் கடவுள் இருக்கிறார். அவரைப் பார்க்க செல்வம் அங்கிள் சென்றிருக்கிறார் என்றார். அங்கிருந்தவர்களின் எண்ணங்கள் அனைத்தும் ஆண்டவரை செல்வத்தை எப்படியாவது காப்பாற்றி விடு என்று கடவுளை நோக்கியதாக இருந்தது. ஐ சி யூ வுக்கு உள்ளே மருந்து கொடுப்பது மட்டும் தான் மருத்துவர்கள் வேலை ஆனால் உடல் நலம் கொடுப்பவர் கடவுள் என்று அறிந்தவர்களாக அந்த மருத்துவர்கள்களும் கடவுளை நோக்கி ஜெபித்தவர்களாக இருக்கின்றனர். மேலும் அங்கு அடிபட்டு ஐ சி யூ வில் இருக்கும் செல்வமும் இறைவா எப்படியாவது என்னை காப்பாற்று என்று கடவுளை நோக்கி ஜெபித்துக் கொண்டிருக்கிறான். இரண்டு மணிநேரம் களித்து மருத்துவர்கள் வெளியே வந்து செல்வம் பிழைத்துக் கொண்டார், புது வாழ்வுக்கு வந்து விட்டார் என்றனர். அப்போது அந்த குழந்தை சொன்னது நாமும் புது வாழ்வு பெறவேண்டுமென்றால் ஐ சி யூ வுக்கு செல்ல வேண்டும் என்றதாம். ஆம் அன்புக்குரியவர்களே மரங்களும், செடி கொடிகளும் புது வாழ்வை பெறவேண்டுமென்றால் வானத்தையும், மழையையும் உற்று நோக்கி இருக்கின்றன். தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு புதிய உலகத்தை காண்பிப்பதற்காக ஒவ்வொரு தாயும் அவர்களின் பிரசவ நேரத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். அதைப் போலத்தான் இஸ்ராயேல் மக்களும் பாம்பு கடித்து இறந்து கொண்டிருந்த போது மோயீசன் செய்த அந்த வெண்கலப் பாம்பை யாரெல்லாம் உற்று நோக்கினார்களோ அனைவருமே புது வாழ்வை பெற்றுக் கொண்டனர். புதிய ஏற்பாட்டிலே யாரெல்லாம் சிலுவையை உற்று நோக்கினார்களோ அவர்கள் அனைவருக்கும் கடவுள் புது வாழ்வை கொடுக்கிறார். இப்படியாக புது வாழ்வை பெறவேண்டுமென்றால் நாமும் புது மனிதர்களாக மாறவேண்டும். இறப்பில் இருந்து உயிர்ப்புக்கு பயணிக்க வேண்டும், பாவத்தில் இருந்து புண்ணியத்திற்றகு செல்ல வேண்டும், இருளில் இருந்து வெளிச்சத்திற்கு செல்ல வேண்டும். இவ்வாறக நமதாண்டவர் இறப்பில் இருந்து புது வாழ்வுக்கு சென்று விட்டார். எனவே அவரை நம்பியிருக்கும் நம் அனைவருக்கும் தனது உயிர்ப்பின் மூலம் புதிய வாழ்வை கொடுக்கிறார். புதிய வாழ்வை இறைத்துணையுடன் வாழ அருள் வேண்டியவர்களாய் வாசகத்திற்கு செவிமடுப்போம். (பொருத்தமான வாசகம்) காணிக்கை (ஒளி ஒளியாம் இறைவா இன்றைய வழிபாட்டிலே நாங்கள் ஒளி வழிபாட்டை கொண்டாடினோம். இதிலே புது தீயை மந்தரித்து அதில் இருந்து பாஸ்கா திரியை ஒளி ஏற்றினோம். பாஸ்கா திரி தரும் புதிய ஒளியில் இருந்து புதுத்திரிகளை பற்றவைத்தோம். ஓளியை கரங்களில் ஏந்திக்கொண்டு பாஸ்கா புகளுரை வழியாக பழைய வாழ்க்கையில் இருந்து புதிய வாழ்வுக்கு அடியெடுத்து வைத்தோம். ஒளி இருளை அகற்றுகிறது. பாஸ்கா ஒளி எம்மிடத்தில் உள்ள இருளை அழித்து புது வாழ்வைத் தர, நான் எனது என்ற தன்னல நிலையிலிருந்து யாம் விடபட அருள் வேண்டி ஒளியை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இறைவார்த்தைவிண்ணும் மண்ணும் ஒழிந்து போகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே ஒழியாது என கூறிய இறைவா. இன்றைய வார்த்தை வழிபாடு வழியாக எமக்கு புதிய நம்பிக்கையையும், புதிய உத்வேகத்தையும் கொடுத்தீரே. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களுக்கு புதிய வாழ்வைக் கொடுத்தீர். படைப்பை புதியதாக படைத்தீர். செங்கடலில் நடந்து வந்த மக்களுக்கு புதிய வாழ்வைக் கொடுத்தீர். இறைவாக்கினர்கள் வழியாக இஸ்ராயேல் மக்கள் தங்களது பாவ வாழ்வில் இருந்து மாற்றி புதிய வாழ்வை அளித்தீர்.அது போல எங்களுக்கும் நம்பிக்கை என்னும் புது வாழ்வை அளித்தருள வேண்டி இத்திருவிவிலியத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்) இந்த உயிர்ப்பு பெருவிழா வழியாக கடவுள் நமக்கு நம் ஒவ்வொருவரையும் பார்த்து கூறுகிறார். உங்களுக்கு கிடைத்த பொக்கிஷத்தை நிறைவாக வாழுங்கள் என்று. வாழ்க்கை என்ற வார்த்தையை நாம் பிரித்து பார்த்தோமானால் அதிலே பல உண்மைகள் நமக்கு வெளிப்படும். “வாழ்க்கை” இதன் முதல் எழுத்து வா : கடவுள் இவ்வுலகில் உள்ள அனைவரையும் ‘வா’ என அழைக்கிறார். காரணம் இன்று நம்மில் பலபேர் வாழ்க்கையை உற்சாகமாகத்தான் தொடங்குகிறோம். நன்கு படித்து முன்னேற வேண்டும், நல்ல பதவியில் அமர்ந்து பணி செய்ய வேண்டும், சமுதாயத்தில் பிறர் போற்ற வாழ வேண்டும் என நன்றாக தொடங்குகிறோம். ஆனால் வாழ்க்கை தரும் பிரட்சனைகளை, சோதனைகளை சமாளிக்க முடியாமல் துன்பத்தையும், துயரத்தையும் அனுபவித்து வருகிறோம். இப்படிப்பட்ட நேரங்களில் வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக அது வெறுத்து விடுகிறது. இப்படிப்பட்ட சோதனை நேரங்களில் வாழும் கடவுள் நம் அனைவரையும் ‘வா’ எனச் சொல்லி அன்போடு அழைக்கிறார். உதாரணமாக இயேசு தனது சீடர்களை “வா” என்று அழைக்கிறார். காட்டு அத்திமரத்தில் இருந்த சக்கேயுவை “வா” என்று அழைக்கிறார். இறந்த லாசரை “வா” என்று அழைக்கிறார். எனவே, “வா” என்று அழைக்கப்பட்ட சீடர்கள், சக்கேயு, லாசர் இவர்கள் அனைவருக்கும் கடவுள் புதிய வாழ்வை கொடுக்கிறார். எனவே நம்மையும் ஆண்டவர் “வா” என்று அழைத்திருக்கிறார். நாம்தான் இன்னும் வாழத் தொடங்கவில்லை வாழத்தயாரா? முதல் இரண்டு எழுத்து வாழ் : கடவுள் நம்மை எதற்காக வா என்று அழைக்கிறார், காரணம் நாம் அனைவரும் வாழ்வதற்காக கடவுள் அழைக்கிறார். ஏனென்றால் நாம் பின்பற்றும் கடவுள் வாழ்கின்ற கடவுள். உதாரணமாக மத்தேயு 11:28-ல் “இயேசு பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்” என்கிறார். எனவே துன்பங்களை கண்டு துவண்டு விடாமல் ஆண்டவரிடத்தில் வருவோம் புதிய வாழ்வை பெற்றுக்கொள்வோம். முதல் மூன்று எழுத்து : வாழ்க்(க) கடவுள் நம்மை வா என அழைத்து, அவரிடம் வந்தவர்களையெல்லாம் வாழ் என கூறி வாழ்வதற்கான வழிகளை கொடுத்து, அவர்கள் அனைவரையும் வாழ்க எனச் சொல்லி வாழ்த்துகிறார். லூக் 1:28-ல் “வானதூதர் மரியாவுக்கு தோன்றி அருள்மிகப் பெற்றவரே வாழ்க ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்” என்றார். யாரெல்லாம் கடவுளின் குரலுக்கு செவிமடுத்து அவர் கொடுத்த வாழ்க்கையை நன்கு வாழ்கின்றனரோ அவர்கள் அனைவரையும் கடவுள் வாழ்க என வாழ்த்துகிறார். நான்கு எழுத்துகளும் சேர்ந்து வாழ்க்கை, மனிதர்களின் இந்த வாழ்க்கை பாதையை தீர்மானிப்பது யார்? நீதிமொழி 20:24-ல் மனிதர்களின் வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கிறார். எனவே தான் கடவுள் நம் அனைவரையும் வா என அழைத்து வாழ்வதற்கான பாதையை காட்டி நம் அனைவரையும் வாழ்க என நமது வாழ்க்கையை நலமுடன் வாழ வாழ்த்துகிறார். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க தயாரா? எப்போது நம்மைப்போல பிறரையும் பார்க்கிறோமோ அப்போதே நமக்கும் நமது குழுவிற்கும் சமுதாயத்திற்கும் புதிய வாழ்வு பிறக்கிறது. கல்லறைக்குச் சென்ற சீடர்கள் புது வாழ்வையும், புதிய நம்பிக்கையையும் பெற்றுக்கொண்டது போல ஆலயம் வந்துள்ள நாம் அனைவரும் புதிய மனிதர்களாக புது வாழ்வை தொடங்குவோம். உயிர்த்த இயேசு நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆண்டவர் உயிர்த்து விட்டார். புது வாழ்வு பிறந்து விட்டது அல்லேலூயா… அல்லேலூயா…

Friday, 8 April 2022

புனித வாரம்

விமானங்கள் ஓடுதளம் முடிந்து விட்டது என்று ஒருபோதும் வருந்துவது இல்லை. மாறாக அதன் பின்னே தான் தங்களது பயணம் துவங்குகிறது என்பதை உணர்ந்து பறக்கின்றன. தவக்காலம் முடிவடைய இருக்கிறது. ஆனால் நம் தவ வாழ்வு தரமான வாழ்வு தொடங்க இருக்கிறது. புனித வாரம் என்னும் புண்ணிய வாரத்தில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கின்றோம். தாவீதின் மகனுக்கு ஓசான்னா என்று புகழ் கீதம் பாடி தொடங்கிய இந்த வாரம் மிக முக்கியமான வாழ்க்கை தத்துவங்களையும் மதிப்பீடுகளையும் நமக்கு தர இருக்கின்றது. குருத்து ஞாயிற்றில் இயேசு பட்ட பாடுகள் அனைத்தையும் வாசிக்க கேட்டு நம்மை நாமே முன் தயாரித்துக் கொண்டோம். புத்தம் புதிய குருத்தோலைகள் ஏந்தி புதிய மனநிலையுடன் புனித வாரத்தில் நுழைந்திருக்கிறோம். இந்த புனித வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நற்செய்தி மாந்தர்கள் வழி நம்மை நல்வாழ்வு வாழ வழிகாட்டுகிறது. புனித திங்கள்; மார்த்தாவின் நறுமணத்தைலம் பூசும் செயல் மூலம், கடவுளின் பணியாளராக நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும். யூதாஸ் போல தன்னையும் பணத்தையும் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்காமல், பொதுநலனில் அக்கறை கொண்டவர்களாக வாழவும் வலியுறுத்துகிறது. புனித செவ்வாய்; யுதாசின் காட்டிக் கொடுக்கும் குணத்தை எடுத்துரைத்து இது போல நம்முடைய வாழ்வு சீரழிந்து விடக் கூடாது. மாறாக இயேஸுவின் அன்புச் சீடர் யோவான் போல எப்போதும் அவரை விட்டு பிரியாத நல் மனம் கொண்டவர்களாய் வாழ அழைக்கிறது. மேலும் பேதுரு போல நமது பலவீனத்தால் இயேசுவை நம் வாழ்வாலும் சொல்லாலும் மறுதலிக்கும் காலம் வரும் என்பதையும் உணர்த்தி விழிப்பாக இருக்க வழி சொல்கிறது. இன்று தான் தமிழ்நாட்டில் பல மறைமாவட்டங்களில் திருவருட்சாதனங்களுக்கு பயன்படுத்தும் திரு எண்ணெய்கள் ஆயர் அவர்களால் மந்திரிக்கப்படுகின்றன. புனித புதன்: பாஸ்கா விழாக் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளையும் ஆர்வத்தையும் நமக்கு தூண்டும் நாள். யுதாசின் சூழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் என்னோடு பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று அறிவிக்கின்றார். நாம் யார் நம்முடைய செயல்பாடுகள் இயேஸுவுக்கு உகந்தனவா இல்லை அவரை காட்டிக்கொடுப்பனவா என்று நம்மை சிந்திக்க வைக்கும் நாள். புனித வியாழன்; இறுதி இராவுணவு. பாதம் கழுவும் சடங்கு. நற்கருணையை ஏற்படுத்துதல் குருத்துவம், நற்கருணை இடமாற்றம் என்று பல முக்கியமான வரலாற்று நிகழ்வுகளையும் அனுபவங்களையும் நமக்கு தந்து, நம் வாழ்வை மெருகேற்றும் நாள். இன்றைய நாளில் வழக்கமான திருப்பலிகள் எதுவும் நடைபெறாது. ஒரே ஒரு வழிபாடு மட்டும் தான் அதுவும் இவை அனைத்தும் உள்ளடக்கிய ஒரு பெரிய திருவழிபாடாக சிறப்பிக்கப்படும். இன்று இரவே இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றார் என்பதன் அடையாளமாக முழு இரவு ஆராதனை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெறும். புனித வெள்ளி: கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான நாள் இயேசு கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்ட நாள். இன்றைய நாளில் கோவில்கள் வெறுமையாக்கப்பட்டும் இறந்தவர்களின் வீட்டை போல சோகம் நிறைந்ததாக காணப்படும். மாலையில் பெரிய சிலுவை பாதையும் சிலுவை ஆராதனை, தோம்பா எனப்படும் இறந்த இயேசுவின் திரு உடல் ஊர்வலம் போன்றவையும் நடை பெறும். புனித சனி: தன் ஒரே மகனை இழந்து தன்னந்தனியளாக கைவிடப்பட்ட மரியாளுக்கான நாள். அன்னையின் துயரையும் அவரது உள்ளக்குமுறலையும் , துணிச்சலையும் எடுத்துரைக்கும் நாள். பல வியாகுல மாதா ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னையின் வியாகுலத்தை குறித்தும் துயரத்தைக் குறித்தும் இடம்பெறுகின்றன. வருடங்கள் மாறினாலும் வசதிகள் மாறினாலும் மாதங்கள் மாறினாலும் மனங்கள் மாறினாலும் நம் மனம் மாறாவிட்டால் ஒன்றும் மாறப்போவதில்லை. புனித வாரம் ஒரு போதும் முடிவடைவதில்லை அது அனுதினமும் நம் வாழ்வில் நினைவு கூறப்பட வேண்டியது. புனித வாரத்தின் முக்கியத்துவம் உணர்வோம். புண்ணிய நலன்களால் நம்மை நிரப்பி புனித வாழ்வு வாழ நம்மை தயாரிப்போம்.

புளிப்பற்ற அப்ப விழா.

எபிரேயர்களின் பாஸ்கா சேனா என்று அழைக்கப்படும் இந்த புளிப்பற்ற அப்ப விழாவே இன்று நாம் பெரிய வியாழன் அன்று கொண்டாடும் நற்கருணை விழாவாகிறது. எபிரேயர்கள் இந்த விழாவை பேசாக் என்று என்று அழைத்தனர். நிசான் மாதத்தின் 14, 15 தேதிகளில் கொண்டாடப்படும் இவ்விழா எட்டு நாட்கள் தொடர் திருவிழாவாகக் கடைபிடிக்கப்படுகிறது. இஸ்ரயேலில் 7 நாட்கள் கொண்டாடுகின்றனர். யூதர்களுக்கு இது இன்று வரை விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது. நிசான் மாதம் பார்லி என்னும் அப்பம் செய்ய பயன்படும் ஒரு வகை தானியத்தின் அறுவடைக்காலம். எனவே வசந்த கால திருவிழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. எகிப்தில் இருந்து விடுதலை பெற்று கானான் தேசத்திற்கு மக்கள் சென்றதை நினைவு கூறும் விழாவாகவும் , மேலை நாடுகளில் அப்பம் புளிக்க பயன்படும் ஈஸ்ட் தயாரிக்க உகந்த நாளாகவும் இது கருதப்படுகிறது. எபிரேயர்களின் பாஸ்கா, கடத்தல் என்ற பொருளில் கொண்டாடப்படுகிறது. விடுதலைப் பயணத்தில் கூறப்பட்டுள்ளது போல குடும்பத்திற்கு ஏற்றவாறு ஒரு செம்மறி ஆடு முழுவதும் சமைத்து உண்ணப்படுகிறது. ஆட்டின் இரத்தம் வீட்டின் மேல் தெளிக்கப்படுகிறது. இரவுக்குள் அந்த உணவு முடிக்கப்பட வேண்டும். மீதமுள்ள உணவுகள் நெருப்பில் இடப்பட்டு எரிக்கப்படும். இடையில் கச்சை கட்டி கையில் கோலுடன் காலில் செருப்புடன் விரைவாக உண்ணப்படவேண்டும். இது ஆண்டவரின் உணவு. சேடர் டி பேசக் என்னும் இந்த விழா கொண்டாடப்பட சில ஒழுங்கு முறைகள் உள்ளன. சேடர் என்றால் ஒழுங்கு முரை என்று அர்த்தம். இந்த உணவு உண்ண தொடங்கும் முன் அனைவரும் கூடி இருக்க, குடும்பத்தில் உள்ள கடைசி குழந்தை தந்தையிடம் இந்த நாள் ஏன் கொண்டாடப்படுகிறது என்று கேட்க வேண்டும். குடும்ப தலைவர் அதன் வரலாற்று முறையை விவிலிய குறிப்போடு அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலமாக சந்ததியினர் அனைவரும் இந்த நாளை கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது. உண்ணப்படும் உணவின் வகைகளும் அதன் அர்த்தங்களும்: செம்மறி ஆட்டின் கறி; வீட்டின் முன் தெளிக்கப்பட்ட ஆட்டின் இரத்தம் எகிப்தில் கடவுள் காப்பாற்றிய தலைப் பேறுகளை உணர்த்துகிறது. பாலைவனத்தில் ஆண்டவர் மன்னா காடை மூலம் அவர்களுக்கு உண்வூட்டியதையும் நினைவுபடுத்துகிறது. புளிப்பற்ற அப்பம் ; புளிக்காத அப்பம் இஸ்ரயேல் மக்கள் அப்பத்தை புளிக்க வைக்கக் கூட நேரமில்லாமல் இரவோடு இரவாக எகிப்தை விட்டு வேகமாக கிளம்பியதை நினைவு படுத்தும் விதமாக உண்ணப்படுகிறது. சால்சா காரோசெட் என்னும் இனிப்பு வகை. பாதாம் முந்திரி போன்ற பருப்புகள், காய்ந்த திராட்சை, தேன், திராட்சை இரசம் . ஆரஞ்சு பழ சாறு, கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பு . இதன் நிறமும் பதமும் எகிப்தில் அடிமைகளாக இருந்து இஸ்ரயேல் மக்கள் செங்கல் செய்யும் போது பயன்படுத்திய குழைந்த மண்ணை நினைவு படுத்துகிறது. எகிப்தில் செங்கல் சூழையில் அவர்கள் அனுபவித்த துன்பம் இன்று இன்பமாக மாறிவிட்டது என்பதை உணர்த்துகிறது. திராட்சை இரசம்: நான்கு காரணங்களுக்காக இந்த திராட்சை இரசம் பருகப்படுகிறது. பாஸ்கா விழாவின் மகிழ்வை, எகிப்தில் இஸ்ரயேல் மக்களை காப்பாற்றிய கடவுளின் இரக்கத்தை, ஆட்டின் இரத்தம் மூலம் தலைப் பேறுகளை காப்பாற்றியதை , உலகில் பல வகையான மக்கள் இருந்தும் இஸ்ரயேல் மக்களைக் கடவுள் தேர்ந்தெடுத்து மீட்டு காப்பாற்றியதற்கு நன்றியாகவும் 4 முறை குடிக்கப்படுகின்றது. அவித்த முட்டை: புதிய வாழ்விற்கு அடையாளமாக . துய்மையின் அடையாளமாகவும் உண்ணப்படுகிறது இயேசுவும் ஒரு எபிரேயர் என்ற முறையில் இந்த பாஸ்காவைக் கொண்டாடினார். அவரிடம் இருந்து இன்று நாமும் இந்த முறையை கடைபிடித்து நினைவு கூர்கின்றோம். நம்முடைய பாஸ்காவில் உண்ணப்பட வேண்டிய உணவு வகைகள். கசப்பான கீரை இயேசுவின் துன்பத்தை நினைவுபடுத்த உண்ணப்பட வேண்டும். ஆட்டின் இறைச்சி நமக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட இயேசுவின் தியாகத்தை நினைவு கூற உண்ணப்பட வேண்டும். அவித்த முட்டை ; இயேசுவின் உயிர்ப்பு மற்றும் நமது புதிய வாழ்வையும் உணர்த்த உண்ணப்பட வேண்டும். கடத்தல் என்ற பெயரில் இஸ்ரயேல் மக்களால் கொண்டாடப்பட்டு எபிரேயர்களால் கடைபிடிக்கப்பட்டு இயேசுவால் மறு உருவம் பெற்று இன்று நம்மால் கொண்டாடப்படும் இந்த பேசாக் எனப்படும் எபிரேயர்களின் பாஸ்காவை நமதாக்குவோம். நம்முடைய கடந்த கால வாழ்வில் இறைவன் நம் உடன் நடந்ததை கவலைகளை துன்பத்தை நம்மிடமிருந்து அகற்றியதை நினைவு கூர்ந்து நமது நன்றியினைக் காணிக்கையாக்குவோம்.

Tuesday, 5 April 2022

மறுதலிப்பு;

மறுதலிப்பும் நிராகரிப்பும் தான் நம்மை வாழ்வின் அடுத்த நிலைக்கு இட்டுச்செல்லும். மறுதலிப்பின் வலியும் வேதனையும் என்னவென்று நாம் பிறரால் மறுதலிக்கப்படும்போது மட்டுமே நன்கு உணர்ந்து கொள்ள முடியும். உண்மையில் நம்மை மறுதலிப்பவர் நிராகரிப்பவர் நம்முடைய எதிரியாக இருப்பதில்லை நம்முடன் நன்றாக பழகி உண்டு உறவாடி உடன் இருந்த நண்பராக தான் இருப்பார். இப்படி நம்முடன் இருந்த உறவுகள் நம்மை மறுதலித்தால் அதனால் வரும் துன்பம் நம்மை மிகவும் பாதிக்கும். தவக்காலத்தின் இறுதி வாரத்தில் இயேசுவின் பாடுகளை சிறப்பாக எடுத்துரைக்கும் புனித வாரத்தில் அடியெடுத்து வைக்க காத்திருக்கிறோம். இந்நாளில் தன்னுடைய நெருங்கிய நண்பர்களால் மறுதலிக்கப்பட்ட இயேசுவின் உள்ள உணர்வை புரிந்து கொள்வோம். இயேசுவோடு உண்டு உறவாடி நெருங்கி உடனிருந்தவர் பேதுரு. முதன்மை சீடராகவும் மூத்தவருமான இவரில் இயேசு அளப்பரிய நம்பிக்கையை வத்திருந்தார். தன்னை மெசியா என்று எல்லோர் முன் எடுத்துரைத்தவர். தான் யாரென்று இவ்வுலகிற்கு மெசியா என்ற வார்த்தை மூலம் எடுத்துரைத்தவர். தன்னுடன் இறுதி வரை உடனிருப்பார் என்ற நம்பிக்கையில் இருந்த இயேசுவுக்கு பெருத்த இடியாய் இருந்திருக்கும் பேதுருவின் இச்செயல். இயேசுவைக் காவலர்கள் முன் கைவிட்டார், வேலைக்காரப் பெண் முன்னிலையில் இவர் யாரென்று தெரியாது என்று நிராகரித்தார், நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு புரியவில்லை எனக்கு அவரோடு எந்த தொடர்பும் இல்லை என்று கண்டனம் செய்கின்றார். பேதுரு தன்னுடைய பலவீனத்தையும் பயத்தையும் அதிகமாக வெளிப்படுத்தி அதுவரை தான் கொண்டிருந்த விசுவாசத்தை அழிக்கின்றார். இயேசு போல தானும் மாற வேண்டும் புதுமைகளும் அருள் அடையாளங்களும் செய்ய வேண்டும் என்று எண்ணியவர் இன்று எங்கே நாமும் சிறைபிடிக்கப்படுவோமோ என்று அஞ்சுகிறார். பல நேரங்களில் நாமும் பேதுரு போல இயேசுவின் மதிப்பீடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்போம் ஆனால் நம்முடைய சுயநலத்தினாலும், துன்பம் வருமோ என்று எண்ணுவதாலும் நிலையற்ற இன்பத்தில் மூழ்கி விடுகின்றோம். நீயும் அவரகளில் ஒருவன் தானே? அவரது சிடன் தானே என்ற கேள்விக்கு பதிலாக நான் இயேசுவின் சீடன் இல்லை என்று பேதுரு சொன்னது சரியே . ஆம் இயேசுவின் மேல் கொண்டிருந்த உண்மையான பாசம் அப்போது இல்லை. அவர் மெசியா நம்மை கட்டாயம் மீட்பார் என்ற நம்பிக்கை இல்லை . அவர் சொன்ன அறிவுரைகள் எதையும் அவர் அப்போது நினைவுபடுத்தவுமில்லை. ஆக பாசம் நம்பிக்கை அறிவுரைகள் இவை மூன்றும் இல்லாத ஒருவன் கட்டாயம் இயேசுவின் சீடராக இருக்க முடியாது . அதனால் தான் அவர் நான் இயேசுவின் சீடர் இல்லை என்று அறிவிக்கின்றார். நாமும் இந்த மூன்று பண்புகள் இல்லாவிட்டால் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியாது. எனவே அவர் மிது உண்மையான பாசம் வைப்போம். நம்பிக்கை கொள்வோம். அறிவுரைகளை நினைவு கூர்வோம். பேதுரு மறுதலித்தாலும் இயேசுவின் பார்வையையும் மன்னிப்பையும் பெறுகின்றார். அதனால் அவருடைய வாழ்வு புதிய மாற்றம் காண்கின்றது. தான் கோழை பலவீனன் என்று எண்ணியவர் பாவ மன்னிப்புக்கு பின் முழு மனிதனாக திருச்சபையை வழிநடத்தும் தலைவராக மாறுகின்றார். பிறரால் மறுதலிக்கப்பட்டாலும் நிராகரிக்கப்படாலும் கவலைப்படாதிருப்போம். அதனால் இழப்பு நமக்கு இல்லை அவர்களுக்கு தான் என்பதை கூடிய விரைவில் அவர்கள் புரிந்து கொள்ளும் சூழல் உருவாக உழைப்போம். யாரோ ஒருவரின் நிராகரிப்பு தான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும். நம்மை நிராகரித்த அதே இடத்தில் நம்மை நிராகரிக்க முடியாதவாறு நாம் நிற்பதே நம்முடைய வெற்றி. மாபெரும் சாதனைகளை செய்தவர்கள் அனைவரும் என்றோ ஒரு நாள் யாரோலோ நிராகரிக்கப்பட்டவர்கள் தான் என்பதை உணர்ந்து வாழ்வோம். நாமும் நம்முடைய செயல்களும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று நினைப்பதை விடுத்து துணிந்து நம்முடைய காரியங்களை செய்வோம். மறுதலிக்கப்பட்டாலும் பிறரை மறுதலிக்காதிருப்போம்.

Monday, 4 April 2022

காட்டிக் கொடுத்தல்

காட்டிகொடுக்கப்படுதல் நம் எதிரிகளிடமிருந்து வருவதில்லை. நம்மோடு உண்டு உறவாடிய உள்ளங்களாலே நாம் பலமுறை காட்டிக்கொடுக்கப்பட்டிருப்போம். காசிற்காக , கூட்டு உறவில் குழி பறிக்க, நமது மகிழ்வையும் நல் உறவையும் கெடுக்க. கொல்லும் நஞ்சை விட கொடியதாக காட்டிக்கொடுத்தல் இருக்கின்றது. தன்னைக் காட்டிக் கொடுப்பான் இந்த கேட்டின் மகன் யூதாஸ் என்று அறிந்திருந்தும் இயேசு அவனை அச்செயலை செய்ய விடுகிறார். இயேசுவோடு உடனிருந்து அவரது போதனைகளைக் கவனமுடன் கேட்டு அவர் செய்த புதுமைகளைப் பார்த்தும் அவன் திருந்தவில்லை. அவன் இறுதிவரை மனம்மாறுவான் என்று கூட இயேசு நினைத்திருக்கலாம். ஒரு சிலர் யூதாஸ் இயேசு எப்படியாவது அரசராகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கூட அப்படி செய்திருக்காலாம் என்பர். எது எப்படியோ யூதாஸ் காட்டிக் கொடுத்தது இயேசுவின் பாடுகளுக்கும் இறப்பிற்கும் உயிர்ப்பிற்கும் காரணமாக அமைந்தது. பணத்திற்காக , பதவிக்காக புகழுக்காக தற்பெருமைக்காக ஆசைப்பட்டு யூதாசைப் போல பல நேரங்களில் நாம் செய்ய கூடாத செயலை பல நேரங்களில் செய்கின்றோம். அலுவலகத்தில் அண்டை அயலாரிடத்தில் அருகாமை வீடுகளிடத்தில் நாம் பிறரை காட்டிக் கொடுக்கின்றோம். நம்மிடத்தில் அவர்கள் வைக்கும் நம்பிக்கையை இதன் மூலம் நாம் இழக்கின்றோம். வஞ்சகம் துரோகம் நன்றி கெட்டவன் என்ற அவப்பெயர்களை பெறும் சூழலும் இதனால் ஏற்படுகின்றது. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் அந்த செயலுக்கு பின் நிம்மதியாக வாழ முடியவில்லை. தனது செயல் இயேசுவை இத்தனை கொடூரமான நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்று எண்ணி வருந்தியவன் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கின்றது. எந்த ஒரு செயல் நம்மையும் பிறரையும் வாழ வாய்க்கின்றதோ அதுவே நற்செயல். அதுவே நம்மை இன்னும் பல நற்செயல்கள் செய்யத்தூண்டும். காட்டிக் கொடுப்பவர்கள் நாம் யாரென்று பிறருக்கு காட்டுவதாக நினைத்துக் கொண்டு தாங்கள் யாரென்பதை பிறருக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். காட்டிக்கொடுப்பவர்களைக் குறித்து கவலை பட வேண்டாம் அவர்கள் செயல்கள் வழி தாங்கள் எப்படி யார் என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துரைத்து கொண்டிருக்கிறார்கள். தவக்காலத்தின் இறுதி வாரத்தில் இருக்கும் நாம் யூதாஸ் செய்த தவறை செய்யாமல் விழிப்புணர்வுடன் வாழ்வோம். தவற்றை செய்த பின் இந்த காரணத்திற்காக தான் நான் செய்தேன் என்று நாம் கூறும் விளக்கத்தை யாரும் ஏற்கப் போவதுமில்லை காது கொடுத்து கேட்பதுமில்லை. நமக்கு அவசியமில்லாத அர்த்தமில்லாத செயலையும் சொல்லையும் செய்யாதிருப்போம். நம் ஆண்டவர் இயேசு கூறுவது போல நம்முடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் இருக்க முயற்சிப்போம். பிறருடை சொல்லையும் செயலையும் விமர்சித்து நம்முடைய ஆதாயம் கருதி காட்டிக் கொடுக்கும் செயலைத் தவிர்ப்போம். இயேசுவை கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் போல நாட்டின் பலர் நம்முடன் இருந்தாலும் நம்மைக் காப்பது இறையருளாகும் என்ற நம்பிக்கையில் துணிவுடன் வாழ்வோம்.

Sunday, 3 April 2022

துன்பம் .

துக்கம் என்பது பால் எக்மென் என்னும் அறிவியல் அறிஞர் கூறும் 6 அடிப்படை உணர்வுகளில் ஒன்று. துன்பம் இன்பம் கோபம் ஆச்சரியம் பயம் வெறுப்பு என்பன அவ்வுணர்வுகள். இதில் துன்பம் மனிதனை மிகவும் வாட்டக் கூடியது. இந்த துன்பத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் பல வழிகளில் தங்களுடைய உணர்வுகளை பிறருக்கு எடுத்துரைக்கின்றார்கள். அமைதியாக யாரிடமும் பேசாமல் இருப்பது. தனிமையாக இருப்பது, சோம்பலுடன் எப்போதும் ஓய்வு எடுத்த நிலையில் இருப்பது அழுவது போன்றவற்றின் மூலம் நம்முடைய துன்பத்தை பிறருக்கு எடுத்துரைக்கின்றோம். துக்கம் வருத்தம் சோகம் என பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் துன்பம் தரும் உணர்வு என்னவோ ஒன்றுதான். அல்லல் வேதனை இடர் இடும்பை இன்னல் துயர் பீடை என தமிழ் மொழியில் இன்னும் பல பெயர்கள் உண்டு. துன்பம் கவலை இல்லாத மனிதன் இல்லை எல்லோருக்கும் அவரவர்கள் நிலைமை தரம் தகுதி பொறுத்து கவலைகளும் துன்பங்களும் ஏற்படுகின்றன. சிறு குழந்தைகளுக்கு அம்மா அப்பா தான் கேட்டதை வாங்கிதரவில்லை என்ற கவலை. மாணவர்களுக்கு மதிப்பெண் பரிட்சை பற்றி கவலை. இளம் வயதினர்க்கு மேற்படிப்பு, வேலை வாய்ப்பு திருமணம் பற்றிய கவலை. கணவன் மனைவி பெற்றோர் பெரியோர் என இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. கவலை துன்பம் இல்லாத மனிதன் இல்லை . இவை இல்லாத மனிதன் மனிதனே இல்லை என்னும் அளவிற்கு நமக்கு துன்பங்கள் வாழ்வில் ஏற்படுகின்றன. இந்த துன்பத்தை நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பதை பொறுத்து அல்ல அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்தே அதன் பாதிப்பு இருக்கிறது. இது நிரந்தரம் இல்லை இதை விட்டு நான் கடந்து விடுவேன் என்று துன்பத்தை எதிர்கொள்பவர்கள் நினைப்பவர்கள் மட்டுமே அதிலிருந்து மீண்டு வருவர். மூன்று வகையான துன்பங்களால் நாம் பாதிக்கப்படுகிறோம். 1. நம் சக்திக்கு மீறீய துன்பம் அதாவது இயற்கை பேரிடர்களினால் வரும் துன்பங்கள். 2. விபத்து மற்றும் நோயினால் ஏற்படும் துன்பங்கள். 3. நம் உடலாலும் மனத்தாலும் ஏற்படும் துன்பங்கள். இதில் முதல் இரண்டு துன்பங்களும் எப்போது எப்படி நேரும் என்று நாம் அறியமுடியாது. ஆனால் மூன்றாவது துன்பம் நாமே ஏற்படுத்தி கொள்வது. அதனை தவிர்க்க நம்மால் முடியும். அடுத்தவரை பற்றி தீயது எண்ணாமலும் செய்யாமலும் இருக்கும் போது தேவையற்ற வீண் கவலைகள் நம்மிடமிருந்து அகன்று போகின்றன. நல்லவற்றை மட்டும் நினைக்கும் போது தீயவைகள் தானாக வெளியேறுகின்றன. தவக்காலத்தின் இந்நாட்களில் இயேசுவின் துன்பத்தையும் பாடுகளையும் சிந்திக்கும் நாம் அத்துன்பம் நமக்கு கொடுக்கும் வலிமையை பெற்றுக் கொண்டு வளமாக வாழத்தானே தவிர, வருந்தி அழ அல்ல. இயேசுவிற்கும் அன்னை மரியாளுக்கும் வராத துன்பங்களா நம்மை வந்தடைய போகின்றன என்று நினைத்து துணிந்து வாழ ஆரம்பித்தால் போதும் நம் வாழ்வு சிறப்பாக இருக்கும். துன்பங்கள் நம் வாழ்வை செதுக்குவதற்காகத் தானே தவிர சிதைப்பதற்கு அல்ல. துன்பத்திலும் துணிவாக போராடுபவர்களே சாதனையாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர். எதிர் நீச்சல் போடுபவனே உயிர் வாழ்கிறான். எதிர் காற்றிலும் புயலிலும் தாக்கு பிடிக்கும் மரமே நீடிய காலத்திற்கும் நிலைத்து நிற்கிறது. உலகத்தில் உள்ள அனைத்தும் இரண்டு இரண்டாகத் தான் இருக்கின்றன. முன் பக்கம் பின்பக்கம், நல்லது கெட்டது, இன்பம் துன்பம், பாவம் புண்ணியம் , நேர்மறை எதிர்மறை, பூ தலை என அனைத்திற்கும் இரண்டு பாகங்கள் உள்ளன. எனவே எதிர்வரும் துன்பத்தை கண்டு கலங்காது, இதற்கு அடுத்து ஒரு நன்மை நம்மை நாடி வர காத்திருக்கிறது என்ற நம்பிக்கையில் செயல்படுவோம். ஒரு பக்கம் இன்பம் மறு பக்கம் துன்பம் நிறைந்தது தான் வாழ்க்கை. இதில் ஒரு பக்கம் இல்லை என்றால் கூட வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. நாம் நாமாக இருக்காத வரை துன்பங்கள் நம்மை துரத்திக் கொண்டு தான் இருக்கும். இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்து விடுமோ என்ற கவலை சிலருக்கு. துன்பத்தையும் கவலைகளையும் தோள் மேல் தொடர்ந்து சுமப்பதை விடுத்து அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை கண்டறிந்து வாழ முயற்சிப்போம். சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள் என்ற இயேசுவிடம் நம் சுமைகளை இறக்கி வைத்து விட்டு சுகமாக வாழ முயற்சிப்போம்.

பண ஆசை

பொருள் ஆசையே எல்லா தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் தான் சிலர் விசுவாசத்திலிருந்து பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளை தங்கள் மேல் வருவித்துக் கொள்கின்றார்கள் என்று 2 திமோத்தெயு 6 . 10 சொல்லப்பட்டுள்ளது. இன்று பண ஆசை பலரை மாய வலைக்குள் இழுத்து சென்று விடுகிறது. அது மாய வலை மந்திர வலை என்று தெரியாமலே பலர் இதில் விழுகின்றனர். பணமிருந்தால் மட்டும் போதும் இந்த உலகில் எல்லாவற்றையும் வாங்கி விடலாம் என்று பலர் எண்ணுகின்றனர். பண ஆசை கடவுள் மேல் கொண்ட பக்தியை மட்டுமல்ல குடும்ப உறவையும் கெடுத்துவிடும். அன்பு நம்பிக்கை, மகிழ்ச்சி போன்ற நற்குணங்களை நம்மிடம் இருந்து அகற்றி விடும். பேராசை என்னும் கொடிய நோய் நம்மை ஆட்கொள்ளும். மன நிறைவு அற்றவர்களாகவும் கஞ்சத்தனம் மிக்கவர்களாகவும் நாம் மாறும் சூழல் உருவாகும். இயேசுவை காட்டிக் கொடுத்த யுதாசு பண ஆசையினாலேயே அவரை காட்டிக் கொடுக்கிறான். முப்பது வெள்ளிக்காசுகள் அவனுக்கு இயேசுவை விட உயர்ந்ததாக தோன்றிவிட்டன. பண ஆசை பலருக்கும் இருக்கக் கூடிய கொடிய வியாதியாக மாறிவிட்டது. இந்த பண ஆசை இல்லாமல் வாழ, வழிகாட்டுவது விவிலியம் . விவிலியம் நாம் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது என்பதற்கு பல விளக்கங்களையும் வழிமுறைகளையும் எடுத்துரைக்கும் அருமையான வாழ்க்கை வழிகாட்டி நூல். இறைவாக்கினர் எலிசாவிடம் இருந்த வைராக்கியம் கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் இருக்க வேண்டும். உடல் நலம் பெற வேண்டி பொன்னோடும் பொருளோடும் வந்த நாமானை அவன் பொருளுக்கு ஆசைப்பட்டு நேராக சென்று பார்க்காமல் யோர்தான் ஆற்றில் முங்கி ஏழுமுறை குளித்து விட்டு வாரும் என்று பணியாளர் மூலம் சொல்லி அனுப்புகின்றார். பணத்திற்கும் நீ கொண்டு வரும் பொருளுக்கும் நான் அடிமை அல்ல. என்னுடைய மிகப்பெரிய சொத்து இறைவன் தான் என்பதை எடுத்துரைக்கின்றார். எப்படியாவது தன்னிடம் உள்ள பொருளை எலிசாவிற்கு கொடுத்து விட வேண்டும் என்று எண்ணிய நாமானின் எண்ணத்தை ஆசையை எலியா கடைசி வரை நிறைவேற்றவே இல்லை. பணத்தையும் பொருளையும் பற்றிய நம்முடைய எண்ணம் எலிசாவிற்கு இருந்தது போல இருக்க வேண்டும். அழிந்து போகும் பணமும் பொருளுமல்ல நம்முடைய எதிர்நோக்கு அழியாத இறைவன் தான் நம்முடைய இலக்கு என்று நிருபிக்க வேண்டும். சிலர் தங்களுடைய வருமானத்திற்கு அதிகமான செலவு செய்ய விரும்புவர். பிறர் தன்னை பெருமையாக நினைக்க வேண்டும். அவர்கள் முன் தன்னுடைய தரம் குறைந்து விடக் கூடாது என்ற எண்ணத்திலேயே இப்படி செய்கின்றார்கள். நமக்கு வரக் கூடிய சோதனைகளில் பல பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதனாலேயே ஏற்படுகின்றது. இருப்பது போதுமென்று வாழ்வோம். பிறருக்கு கொடுத்து வாழும் போது நாம் நிறைவுள்ளவர்களாக காணப்படுவோம். கடன் வாங்கி செலவு செய்வதையும் ஆடம்பரமாக வாழ்வதையும் தவிர்க்கும் போது நம்முடைய வாழ்வு ஆனந்தமாக மாறும். பணத்தை அதிகமாக பெற எண்ணும் போதே பல விதமான சிக்கல்கள் நமக்கு ஏற்படுகின்றன. எனவே பணத்தின் மீதான அதிகப்படியான ஆசையை விடுத்து இயல்பாக வாழ முயற்சிப்போம். பணம் பணம் என்று பணத்தின் பின் சென்றால் நம் வாழ்க்கையே போய்விடும். வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்வோம். இயலாதவர்களுக்கு உதவி செய்வோம். நேர்மையானவர்களாக உண்மையுள்ளவர்களாக வாழும் போது நேர்மையின் உண்மையின் தேவன் நம்மையும் ஆசீர்வதிப்பார். பண ஆசையை விடுத்து பரலோக ஆசையை வளர்த்துக் கொள்வோம். போதுமென்ற மனதோடு வாழ்வோம் . நிறைவுள்ளவர்களாக நாம் வாழும் போது நிறைவின் தேவன் நம்மை நிறைவுள்ளவர்களாக மாற்றுவார்.

குருத்து ஞாயிறு.

திருப்பாடுகளின் தொடக்கம் குருத்து ஞாயிறு என்னும் கொண்டாட்டத்தின் மூலம் தொடங்குகிறது. இயேசுவின் பாடுகளும் மரணமும் உயிர்ப்பும் அன்றோடு முடிந்து விட்ட ஒன்று அல்ல அது மரத்தின் துளிர் குருத்தைப் போல தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு வளர்ச்சியின் செயல்பாடு என்பதை எடுத்துரைக்கிறது குருத்து ஞாயிறு. இயேசு பாடுகள் படுவதற்கு முன் எருசலேம் நகரம் சென்று அங்குள்ள மக்களால் பவனியாக அழைத்து வரப்படுகின்றார். அரசர்கள் தான் கழுதை மேல் பவனியாக வருவர். அப்போது மக்கள் தங்களது மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக மேலாடைகளை தரையில் விரித்து வழி அமைப்பர். மரக்கிளைகளை கையில் ஏந்தி, ஓசான்னா கீதம் பாடுவர் . ஓசான்னா என்பதற்கு எபிரேய மொழியில் இறைவா எங்களை மீட்டருளும் என்று பொருள். இயேசுவை தங்களின் அரசராக கருதி கழுதை மேல் ஏற்றி மேலாடைகளை விரித்து ஓசான்னா புகழ் கீதம் பாடினர். அன்றே அவருக்கு சிலுவை மரணத்தையும் உறுதி செய்தது மறைநூல் அறிஞர்கள் குழு. இன்றைய நாளில் குருத்தோலைப் பவனியானது ஆலயத்திற்கு வெளியே அல்லது ஆலயமுற்றத்திற்கு வெளியே தொடங்குகிறது. குருவானவர் இயேசுவின் பாடுகளை குறிக்கும் சிகப்பு நிற திரு உடை அணிந்து பவனி வருகின்றார். சிகப்பு நிறம் வெறும் பாடுகளையும் துன்பத்தையும் மட்டும் குறிக்கும் நிறமன்று . மாறாக அது வளர்ச்சியின் நிறம் இரத்தம் சிகப்பு நிறம் இரத்த ஓட்டம் நம் உடலில் இருந்தால் தான் நம் உடலுக்கு வளர்ச்சி. இல்லையேல் தளர்ச்சி. எனவே வளர்ச்சியின் அடையாளமாம் சிகப்பு நிற திரு உடை அணிகின்றார் மேலும் சிகப்பு நிறம் பழைய ஏற்பாடு காலத்தில் இளமை மற்றும் இன்பத்தின் அடையாளமாகவும் கருத்தப்படுகிறது. திருமணமாக இளம்பெண்கள் ஆண்கள் இளம் சிகப்பு நிற ஆடை அணிந்து தங்களின் மகிழ்வையும் இளமையையும் பிறருக்கு எடுத்துரைப்பர். யாக்கோபு தன் இளைய மகன் யோசேப்புக்கு தன் கையால் செய்து கொடுத்த ஆடையின் நிறம் இளம் சிகப்பு. அன்னை மரியாள் கபிரியேல் தூதரின் காட்சி பெற்ற போது அணிந்திருந்த ஆடையின் நிறம் இளஞ்சிகப்பு. என்று பல்வேறு சான்றுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இயேசுவின் பாடுகள் நமக்கு துன்பத்தை அல்ல. நம் வாழ்விற்கு தேவையான வளர்ச்சியைக் கொடுக்கின்றன என்பதையும் உணர்த்தத் தான் இன்றைய வழிபாடுகளில் சிகப்பு நிற திரு உடை அணிகின்றனர். ஆலய முற்றம் அல்லது வெளிப்புறத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த பவனியில் அனைவரின் கைகளிலும் குருத்தோலைகள் காணப்படும். அவரவர் இடங்கள் ஊர்களுக்கு ஏற்ப குருத்தோலைகளின் வகைகள் மாறுகின்றன. ஐரோப்பா யோர்தான் போன்ற இடங்களில் ஒலிவக் கிளைகள் பயன்படுத்தப்படுகின்றன. லாத்வியா வில் வில்லோ எனும் ஒருவகை மரக்கிளைகளும், இந்தியாவில் தென்னங்குருத்தும், மால்டா வில் பனை மரக் குருத்தும், ஹாலாந்து நாட்டில் அப்ப வடிவில் சேவல் வடிவில் ஓலைகள் செய்யப்பட்டும் பவனியாக வருகின்றனர். போலந்து நாட்டில் செயற்கை முறையில் மிக நீளமான குருத்தோலைகள் செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ருமேனியா பல்கேரியா நாடுகளில் இந்த நாளானது மலர் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நாடகமாக இந்த குருத்து ஞாயிறு பவனியும் அதன் பின் புனித வார நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. தொடக்க காலத்தில் குருத்தோலைகள் ஒரு நாட்டின் வெற்றியை வெளிப்படுத்துவதற்கும் பயன்பட்டன. பண்டைய கிரேக்க வீரர்கள் தங்களது வெற்றியையும் வீரத்தையும் வெளிப்படுத்துவதற்கு தலையில் ஒலிவக் கிளைகளால் ஆன கிரீடத்தை அணிந்தனர். இன்று வரை ஐரோப்பிய நாடுகளில் மேற்படிப்பு படித்து முடித்தவர்கள் தங்களின் மகிழ்வையும் உயர்வையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக தலையில் ஒலிவ கிளைகளால் ஆன கிரீடத்தி சூடி மகிழ்கின்றனர். நாணயங்களில் கூட ஒலிவக்ளைகள் இடம் பெற்று இருப்பது அதன் பெருமையை நமக்கு இன்னும் அதிகமாக வெளிப்படுத்துகின்றது. திருத்தூதர் யோவான் தன்னுடைய திருவெளிப்பாடு நூல் 7; 9 ல் மீட்பின் அடையாளமாக ஒலிவக் கிளைகள் விளங்குவதாக கூறுகின்றார். எருசலேம் வீதியில் இயேசு பயணித்த பாதையில் பயணிக்க எல்லோராலும் இயலாது. எனவே நம்முடைய ஆலயம் நோக்கி செல்லும் இந்த பயணத்தில் அவருடைய பாதையையும் வாழ்வையும் தியானிக்கின்றோம். அன்று எருசலேம் மக்கள் பாடிய ஓசான்னா கீதத்தை நாமும் பாடி நாம் யாரைப் பின்பற்றுபவர்கள் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கின்றோம். அவருடைய பாடுகள் வெறும் நிகழ்வுகள் அல்ல எம் வாழ்க்கைக்கான விதைகள் என்பதை அப்பட்டமாக எடுத்துரைக்கின்றோம். இந்த வாரம் கிறிஸ்தவர்களாகிய எமக்கு மிகவும் முக்கியமான வாரம் என்பதை நம்முடன் வாழும் பிற மதத்தினற்கு நம்முடைய வார்த்தையால் சொல்வதை விடுத்து வாழ்வால் சொல்ல முயற்சிப்போம். இன்று நம் கைகளில் ஏந்திய குருத்தோலை நம் மீட்பின் அடையாளம். என்பதை உணர்ந்து பவனி வருவோம். எவ்வாறு அன்று இஸ்ரயேல் மக்கள் வீடுகளில் தெளிக்கப்பட்ட இரத்தத்தை அடையாளம் கண்டு வானதூதர்கள் தலைச்சன் பிள்ளைகளை தாக்காதவாறு சென்றார்களோ அது போல் இன்றைய நாளில் நம் வீடுகளில் சிலுவை அடையாளாத்தோடு அழகு சேர்க்க இருக்கும் இவ்வோலைகள் சாத்தானின் தீய பிடியிலிருந்து நம்மையும் உம்நம் குடும்பத்தையும் காக்கும் என்ற உணர்வோடு பயணிப்போம். பாடுகளின் ஞாயிறை நல்ல முறையில் தொடங்கி இருக்கும் நம்முடைய வாழ்வு அவரின் பாதையில் தொடர்ந்து பயணிக்க அருள் வேண்டுவோம்.

Friday, 1 April 2022

உறவுகள் உன்னதமானவை.

உறவு- உறவாடுவது,உடனிருப்பது. உள்ளம் ஒன்றி உறவாடுவதே உறவு. உறவு மிகவும் வலிமையானது. இதை உணர்த்தத்தானோ என்னவோ உறவில் ற என்ற வல்லின ற கரம் இடம்பெற்றிருக்கிறது. நம்முடைய உறவுகளான அம்மா, அப்பா, சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருமே இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த பரிசுகள். பிறந்தது முதல் இன்று வரை உறவென்னும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். சிலவற்றை விரும்பிப் பெறுகிறோம். சிலவற்றைப் பெற்ற பின் விரும்புகிறோம். சிலர் உறவுகளை ஆணின் நட்பு ஆயுள் உள்ளவரை பெண்ணின் நட்பு பந்தக்கால் நாட்டும் வரை'' ஆணோ பெண்ணோ உறவுகள் எல்லோருக்கும் ஒன்று போல் தான். உண்மையானவை. உறுதியானவை. உணர்வுப்பூர்வமானவை. உன்னதமானவை. அவை உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். அவை ஆண் பெண் என்று பார்த்து வருவதில்லை. அது உள்ளம் சார்ந்தது. சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கிறது. பேசத் தோன்றுகிறது . இவை உண்மையான் உணர்வான உறவால்.... உறவுகளைத் தேடித் தேடி நாம் பெற வேண்டியதில்லை. அவை நம்மைத் தேடி வரும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அதனைத் தக்க வைத்துக் கொள்வது மட்டுமே. பயணத்தில் பக்கத்து இருக்கையில் பயணம் செய்பவர். வழி கேட்டு வருந்தி நிற்கையில் வழி காட்டுபவர். பார்த்தவுடன் புன்னகைத்து மகிழ்வூட்டுபவர். என்று அனுதினமும் நாம் உறவுகளால் உரமூட்டப்படுகிறோம். ஆம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒர் விதத்தில் நமக்கு உறவினர்களே. உறவுகளில் நாம் சிறக்க அதனை மேம்படுத்த சில வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். மனிதர்களாகிய நாம் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டோம். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டோம். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்! மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள். கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள். தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள். எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள். பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும். இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள். சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம். மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள். அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள். சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள். தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள். பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள். சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள். இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள். மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள். அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள். எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும். நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம். முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவ'ர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. இவை அனைத்தையும் கடைப்பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பமாய் இணைந்து ஜெபம் பண்ணுங்கள். குடும்பமாய் ஆலயத்திற்கு செல்லுங்கள். குடும்ப காரியங்களில் எதை செய்தாலும் தேவனிடத்தில் விசாரித்து செய்யுங்கள். நிச்சயம் உங்கள் குடும்ப வாழ்வு ஆசீர்வாதமாக, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.எனவே எல்லா மனிதர்களையும் நம் உறவுகளாய் நினைத்துக் கொண்டாடுவோம். ஏனெனில் உறவுகள் உன்னதமானவை, உண்மையானவை. பெற்ற உறவுகளைப் பேணிக்காப்போம்.

அமைதி.

நம் வாழ்க்கை தேடலில் நாம் தேடி கண்டடைய வேண்டிய மிகப் பெரிய பொக்கிசம் புதையல் அமைதி. அக அமைதி எனப்படும் உள் மன அமைதி, புற அமைதி எனப்படும் ஸ்யல் அமைதி . இந்த மன அமைதி இல்லாததால் வாழ்வில் எண்ணற்ற சிக்கல்களை சந்திப்பவர்கள் ஏராளம். செய்யும் வேலைகளில் கவனம் சிதறும். தாறுமாறாக தாராளமாக தவறுகள பிறக்கும் பிரச்சனைகள் ஏற்படும். ,மன அமைதி ஏற்பட நம் மனம் தெளிவாக இருக்க வேண்டும். சிகப்பு நிறத் தண்ணீர் நிறைந்த வாளிகள் இருவரிடம் கொடுக்கப் பட்டன. ஒருவர் கைகளால் தண்ணீரை வெளியேற்றி நல்ல தண்ணீரால் வாளியை நிரப்பினார். கை முழுவதும் சிகப்பு நிறம். மற்றொருவர் தண்ணீர்க் குழாய் அருகில் வாளியை வைத்து நீரால் நிரப்பினார். சில மணி நேரத்தில் சிகப்பு நிறம் தானாக மறைந்து வாளி முழுவதும் நல்ல நீரால் நிரம்பியது. மனத்தின் கவலையை வெளியேற்ற வழி தேட வேண்டாம். நன்மைகளால் , மனதிற்கு மகிழ்வூட்டக் கூடிய நற்காரியங்களால் மனதை நிரப்புவோம். அப்புறம் பாருங்கள் என்றும் இனிமை, எதிலும் புதுமை,யாக நம் வாழ்வு இருக்கும் அமைதி என்னும் கடலில் நம் உள்ளம் எனும் வாளியை போட்டு விட்டால் அதை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. வாழ்வது ஒருமுறை அதை சந்தோசமாக வாழ்ந்துவிட்டுப் போவோம்!!!!!!!! மௌனத்தின் ஆற்றல் அளவிடற்கரியது. மௌனம் சில நேரம் வெல்லும், சில நேரம் கொல்லும். மௌனம் காக்க வேண்டிய நேரத்தில் மௌனம் காப்பதும், பேச வேண்டிய நேரத்தில் பேசுவதும் நலம். இதனைச் செய்யாமல் இருப்பதால் தான் சில பிரச்சனைகளே ஏற்படுகின்றன.!!!! இவ்வுலகிலுள்ள அனைத்துமே மௌனத்தின் மூலமாகத்தான் உருவாகின்றன. பூக்கள் மலர்வது முதல் , மனிதன் உருவாவது வரை அனைத்துமே மௌனத்தில் தான். மௌனத்தின் மூலமாக பல ஆற்றல்களை நாம் பெறுகின்றோம். சொல்லப் போனால் ஆற்றல்களின் பெட்டகமே நாம் தாம் சிலரது அமைதியாக கோபத்துடன் இருப்பது போல் தோன்றும். அவ்வளவு எளிதாக நம்மால் நம் மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியாது அதற்கு சில பல பயிற்க்சிகள் தேவை. அமைதியிலும் ஆண்டவனின் அருளிலும் நாம் நிரப்பப்பட கொடுக்கப்பட்ட இந்த தவ நாட்களில் அமைதியில் அவரின் பிரசன்னம் உணரப்பழகுவோம். அமைதியாக இருப்பது கடினம் தான். ஆனால் அதிலும் ஒருசுவை உள்ளது. இந்த அமைதி கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவருமே வெற்றியாளர் தான். பேசிக் கொண்டே இருப்பதாலும் , பேசாமலே இருப்பதாலும் தானே பிரச்சனை. இயேசு அமைதியை நம் வாழ்வில் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை அப்பட்டமாக எடுத்துஸ் சொன்னவர். எந்த இடத்தில் பேச வேண்டுமோ அங்கு பேசி , எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதி காத்து வாழ்வின் மதிப்பீடுகளை நமக்கு விட்டுஸ் சென்றிருக்கிறார். விபச்சார பெண் கல்லால் எறியப்பட்ட போது அமைதியாய். அவரை சிறைபிடித்து சென்று விசாரித்து அடிக்கும் போது நான் சொன்னது தவறானால் என்ன தவறு என்று சொல் சரியானால் ஏன் என்னை அடித்தாய் என்று கேட்டு தன்னுடைய ஆளுமைத் தன்மையை அகிலத்திற்கு எடுத்துரைத்தவர். அதிகமாகக் கேள்; குறைவாகப் பேசு; என்பார்கள். நம்மில் சிலர் இதனை மாற்றிச் செய்வதனால் தான் வாழ்வில் ஏராளமான குளருபடிகள். இயேசு போல வாழ முயற்சிப்போம். கவலைகள் நம்மை சூழ்ந்தாலும் பிறருக்கு உதவுவோம். பிறரின் கவலைகளில் பங்கெடுப்போம். நமது கவலைகள் தானாக மாறும் மன அமைதி பிறக்கும். அமைதி பிறக்கும் மனதில் சந்தோசம் நிலைக்கும். மௌன மொழியை அமைதி மொழியை அன்பு மொழியைக் கற்று மகிழ்ச்சியாய் வாழ்வோம்; அப்போது, நம் உதடுகள் மட்டுமன்றி உள்ளமும் புன்னகை செய்யும்;

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...