எல்லாம் படைத்து அதில் என்னையும் வைத்து காலமெல்லாம் காக்கும் கருணை தெய்வமே உம்மை வணங்கி வாழ்த்தி இச்செப வேளையை துவங்குகிறோம்.
தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென்.
அன்னையாய் அருகிருந்து ஆசானாய் வழிநடத்தி அற்புதங்கள் புரியும் இறைவா உமக்கு நன்றி. இவ்வுலகைப் படைக்க காத்திருந்த அந்த முதல் நாளில் இருளாய் இருந்தது. உலகம் இருளாய் இருப்பது நல்லத்தல்ல என்று எண்ணி ஒளியை உண்டாக்கினீர். ஒளி உண்டானதால் உயிரினங்கள் வளரத் தொடங்கின. புல் பூண்டுகள் முளைக்கத் தொடங்கின. வெறுமையில் இருந்த இவ்வுலகம் நிறைவை அடையத் தொடங்கியது. அது போல இந்நாளின் நிறைவை அடைய நன்றி என்னும் உணர்வில் திளைக்க நாம் கூடியுள்ளோம். நம் கைகளில் தாங்கியுள்ள இந்த ஒளி நம் வாழ்வென்னும் பொன்னாளை ஒளிர்விக்க அருள் வேண்டுவோம். ஒளி கொண்டு நம் வாழ்வை மெருகேற்ற, வளமான வாழ்வாக நம் வாழ்வு அமைய அருள்வேண்டி பவனி செல்வோம்.
மகிழ்வையும் செழிப்பையும் குறிக்கும் சந்தன குங்கும திலகமிட்டு, தனது வாழ்வின் அடுத்த ஆண்டில் புதிய பணியினை மேற்கொள்ளக் காத்திருக்கும் சகோதரி அவர்களின் வாழ்வு ஒளி மயமாக மகிழ்வாக செழிப்பாக அமைய வாழ்த்தி மகிழ்வோம்.
பச்சை கம்பளம் கொண்டு பாரினை போர்த்தி, ஒளி விளக்கு கொண்டு உயர் வானத்தை வெளிச்சமாக்கிய இறைவா உமக்கு நன்றி.
அனுபவங்கள் வழி அன்றாட வாழ்வின் எதார்த்தங்களை அன்பாய் ஊட்டியதற்காய் நன்றி.
உடன் பயணித்த உறவுகள் வழி உண்மைகளை எடுத்துரைத்தற்கு நன்றி.
இப்படி நன்றி நன்றி நன்றி என்று கூற அடுக்கடுக்கான காரணகளும் காரியங்களும் பல உள்ளன. அவை அனைத்தையும் சொல்லி முடிக்க எம் ஆயுட்காலம் போதாது இறைவா. எனவே இந்நேரத்தில் நன்றி என்று கூறி நீர் செய்த அனைத்தையும் நினைத்துப் பார்க்கிறோம். உம் வழியாக பெற்ற அனைத்திற்கும் நன்றி கூறி உம் ஆசீர் வேண்டுகின்றோம். இப்பாடல் வழி
நன்றி பாடல்.....
செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான். முடிவே இல்லாத பாதையில் பயணிக்கின்றோம். முடிவில் இறைவா நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில். ஆம் அன்பு உள்ளங்களே வாழ்க்கை என்னும் நமது பயணத்தில் நாம் சந்திப்பவர்கள், நம் உடன் பயணிப்பவர்கள் அதிகம். பார்க்கும் இடங்கள், நம்மைக் கடந்து போகும் உணர்வுகள், நபர்கள், நினைவுகள் எல்லாமே நிலையற்றவைகள். நம் பயணத்தை இனிமையாக்க நமக்கு உடன் கொடுக்கப்பட்டவர்கள். நம் களைப்பை ஆற்ற நாம் எடுத்துக் கொள்ளும் குளிரூட்டிகள். நம்மை மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்க கொடுக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள். அவ்வகையில் சகோதரி தனது வாழ்க்கையின் பயணத்தில் சந்தித்த ஒரு நிறுத்தம் தான் இந்த இல்லம். தன்னுடைய சுறுசுறுப்பான செயலாலும் சொல்லாலும் வாழ்வாலும் பணியாலும் பணித்தள மக்களைக் கவர்ந்தவர், புன்னகையால் புத்துணர்ச்சி அளித்தவர். நட்புறவில் நன்மைகள் பலவற்றை செய்தவர். உதவிக்கரம் கொடுத்து உண்மையான உறவுகளை உரிமையாக்கிக் கொண்டவர். பொறுமை என்னும் பண்பு கொண்டு பொற்குடமாய் சிறந்தவர். எளிமை தாழ்ச்சி கீழ்ப்படிதல் மகிழ்ச்சி கொண்டு தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பவர்கள். ஓராண்டு காலம் இவ்வில்லத்தில் நிறைவாக பணி செய்து தன் மேற்கல்வியை தொடர இருக்கும் சகோதரியின் மன நிறைவோடு நாமும் இணைந்து திருப்பாடல் வழி இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
திருப்பாடல் 136.......
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஏதோ ஒன்றை கற்பித்து விட்டு தான் செல்கின்றார்கள். கற்றலும் கற்பித்தலும் தானே வாழ்க்கை.
எண்னுடையதெல்லாம் என்னுடையதல்ல. உன்னுடையதெல்லாம் என்னுடையதே , என்னுடையதெல்லாம் உன்னுடையதே இறைவா என்று திறந்த மனப்பான்மையுடன் இறைத்திருமுன் அமர்ந்திருக்கும் சகோதரி அவர்களுக்கு இறையாசீர் சிறப்பாக கிடைக்க செபிப்போம்.
நன்றி வாழ்த்து.....
கொடுத்த கொடைகளை இறைப்பதம் அர்ப்பணித்து அதற்காய் நன்றி கூறியும், மேலும் பல நலன்களால் தன்னை நிரப்ப வேண்டும் என்று காத்திருக்கும் நம் சகோதரியோடு நாமும் இணைந்து எல்லா வரங்களாலும் நலன் களாலும் இறைவன் அவர்களை நிரப்ப இறைமகன் இயேசு கற்பித்த செபத்தை ஒருமித்து செபிப்போம்.
விண்ணுலகில் இருக்கின்ற......
மகிழ்வான தருணங்கள், மறக்க முடியாத நிகழ்வுகள்,
அன்பான உறவுகள், ஆழமான வார்த்தைகள்,
இன்பமான இடங்கள், ஈடில்லா குணங்கள்,
உன்னதமான உள்ளங்கள், ஊக்கம் தரும் ஊரார்கள்.
என பெற்ற அனைத்து நன்மைகளுக்கும் நன்றி கூறி, செய்த நன்மைக்கு நன்றி எதிர்பார்க்காது, பெற்ற நன்மைக்கு நன்றி கூறி மகிழும் நம் சகோதரியோடு நாமும் இணைந்து மகிழ்வோம்.
பாடல் நெஞ்சே நீ ஆண்டவரை......
அன்பு ஒன்று தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான் என்பர் கவிஞர். ஆம் இயேசுவின் அன்பர்களாகிய நாம் அன்பு செலுத்துவதில் வல்லவர்கள், இயேசுவிடமிருந்து அன்பை பெற்று அதை உலகோர்க்கு அள்ளித்தருவதில் நமக்கு முன்மாதிரிகையாக திகழ்பவர் அன்னை மரியாள் எனவே அன்னையை போற்றி அவரின் அருள் வேண்டி பாடுவோம்.
மாதா பாடல்
என்னவனே இறைவா என் வாழ்க்கை பயணத்தில் எனக்கென நீ குறிக்கும் திசையே நான் விரும்பி ஏற்று பயணிக்கும் பாதையாக அமையட்டும் என்று இறைப்பதம் தன்னை அர்ப்பணித்து மக்ழிவுடன் தன் பயணத்தை தொடங்க இருக்கும் சகோதரியை இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து எல்லா நலங்களாலும் வரங்களாலும் நிரப்பி வழிநடத்தி வழ்நாளெல்லாம் காப்பாராக. ஆமென்.