அருட்தந்தை ஆல்வின்
அம்மன் பேட்டையில் வந்துதித்த அற்புத சூரியனே
அன்பர் பணிசெய்ய அழைக்கப்பெற்ற ஆர்வளனே
உன்னை அழைத்ததும் நாமே
உரிய பணிசெய்ய நுழைத்ததும் நாமே
என்ற ஆண்டவரின் அற்புத வாக்கை
அனுதின வாழ்வாக்க அர்ப்பணித்தவனே
தந்தை சின்னப்பன் தாய் விக்டோரியாவின் மூன்றாவது முத்தானவனே
அந்தோணி டேவிட், லூயிஸ் விக்டரின் அருமை தம்பியே
அழைத்த இறைவனின் பாதையில் பயணிக்க இருக்கும்
அற்புத வேளையில் ஆயிரம் நன்றிகள் கூறுகின்றோம்.
உன்னை எம் குடும்பத்தில் கொடையாக கொடுத்ததற்கு.
நல்ல தொடக்கம் பாதி வெற்றி
உனது தொடக்க கல்வியோ அம்மன் பேட்டை
புனித வளனார் நடுநிலைப்பள்ளி.
உயரம் கூட கூட உவகை கூடும்
உன் உவகையைக் கூட்டிய உயர்நிலைப் பள்ளி
வரதராஜன் பேட்டை புனித தொன்போஸ்கோ பள்ளி.
மேலானவர்கள் மேன்மையான செயலை செய்வார்கள்
உன்னை மேன்மைப்படுத்தி மெருகேற்றியது
கும்பகோணம் சிறுமலர் மேல்நிலைபள்ளி.
கலைகளையும் கல்வி தரங்களையும்
களப்படமற்ற நட்புகளையும் நீ கற்று - வசந்த
காலங்களை வாழ்வில் பெற்று தந்தது
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி.
நம்மை நாம் யார் என உணர உதவும் ஆன்மிக வாழ்வில்
ஆழம் கண்டு அனுபவப்பட அதிகமாக உதவியது
கோவை நல்லாயன் குருமடம்.
இயற்கை, மனிதம் சமூகம் மூன்றையும்
இணைத்து உலகப்பார்வையில் தெளிவு பெற
இனிமையாய் தத்துவவியல் கற்பித்தது
பூனா பாப்பிரை குருமடம்.
இறைவனின் பண்புகளை இதமாய் புரிந்து
இன்பமாய் வாழ இறையியல் கற்பித்தது.
புனித யோவான் குருமடம் பாஸ்டன் அமெரிக்கா.
இப்படி அனுதினமும் நொடிப்பொழுதும்
இறைவன் உன்னை மெருகேற்றி மேன்மைப்படுத்தினார்.
இனிதான பண்புகளாலும் இலகுவான குணகளாலும்
இன்புற வைத்து இறுதியாக இறைப்பணிக்கென அழைத்தார்.
22.05 2021அன்று எம் குடந்தை மண்ணின் அருட்தந்தையாக
அமெரிக்க மண்ணில் அருட் பொழிவு பெற்றாய்.
சொந்தம் துறந்து பந்தம் மறந்து தாய் மண்ணையும் விட்டு
அயல் நாட்டில் அருட்பொழிவு பெற்றாலும் - எம்
அம்மன் பேட்டை மண் உனது அருளுக்கு அருள் சேர்க்க விரும்புகிறது.
மழலையாக மண்ணில் பிறந்தாய்
மாபரன் பணி செய்ய அழைக்கப்பெற்றாய்
கல்வி பல கற்றுன் கருத்தாய் உன்னை நீ வளர்த்தாய்
காருண்ய கடவுளின் கருணையை கடலளவு பெற்றாய்.
குருத்துவம் என்னும் திரு அருட்சாதனத்தை பெற்ற நீ
குன்றாது இவ்வருளில் நிலைத்து நின்று
குடும்பத்தார்க்கும் கூடி வாழும் உறவுக்கும்
குறையாத இறை அருளை நாளும் பெற்றுத்தருவாய்.
விதையாக விழுந்து இன்று விழுது விட துணிந்திருக்கும் உன்
வித்தியாசமான விந்தையான விழுமிய வாழ்வு
பல இளம் உள்ளங்களுக்கு விதையாக மாறட்டும்.
நன்றி உணர்வோடு திளைத்திருக்கும் இவ்வேளையில்
நன்மைகள் செய்த இறைவனுக்கு நாங்களும் நன்றி நவில்கின்றோம்.
கலப்பையில் கை வைத்த பின் திரும்பி பார்ப்பவனல்ல நீ
கட்டு கட்டாய் அறுவடை செய்து திரும்புவன் நீ
காலங்கள் தரும் அனுபவங்களையும் ஆச்சரியங்களையும்
அன்றாட வாழ்வின் அனுதின உணவாக கொண்டு
ஆச்சரியமூட்டும் செயல்களால் அழைத்தலை ஆழப்படுத்த வாழ்த்துகிறோம்.
முதலாண்டு குருத்துவ அருட்பொழிவு நாள் வாழ்த்துக்கள்.
குருத்துவ நன்றி விழா திருப்பலி வாழ்த்துக்கள்.