உன்னதமான உயிர்ப்பின் காலம் -1
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம்
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்ற உயிர்த்த இயேசுவின் வார்த்தைகள் இன்றைய நற்செய்தியில்
நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. மறைப்பணியாற்றுபவர்களுக்கு உந்துதல் தரும் மிக முக்கியமான
இறைவார்த்தைகள் இவைகள் இருக்கின்றன. இயேசு இவ்வுலகிற்கு நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக
வந்தார். உயிர்த்த பின் நம் அனைவரையும் திடப்படுத்த சீடர்களுக்குத் தோன்றினார். அவர்
அவர்களுக்குக் கொடுத்த மிக முக்கியமான கடமை கட்டளை அவரது நற்செய்தியை அறிவிக்கவேண்டும்
என்பதே. அதுவும் அவரைச் சுற்றி இருக்கும் மக்களுக்கு மட்டுமல்ல மாறாக அவரை அறியாத
உலக மக்கள் அனைவருக்கும் அறிவிக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றார். இவ்வுலகில்
படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் மீட்படையவேண்டும் என்பதே அவரது இலக்கு.
உயிர்த்த இயேசுவின் கட்டளை
இக்கால சீடர்களாகிய நமக்குமானது. நாம் நற்செய்தியை அறிவிக்கின்றோமா சிந்திப்போம்.
ஒரு நாளில் இருக்கும் 24 மணி நேரத்தில் ஒரு நிமிடத்தையாவது நற்செய்தியை அறிவிப்பதற்கு
பயன்படுத்துவோம். நம் அருகில் இருப்பவர்களை வாழ்த்துவோம். அவர்களிடத்தில் இருக்கும்
நன்மையை எடுத்துரைப்போம். அது உயிர்த்த இயேசுவால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடை
என்பதை சுட்டிக் காட்டுவோம். பிறர் மனதில் மறைந்து கிடக்கும் நம்பிக்கை என்னும் ஒளியினை
தூண்டி சுடர்விட செய்வோம். மனதார பாராட்டுவோம். மனமகிழ்வுடன் வாழ்வோம். உலகெங்கும்
நற்செய்தியை அறிவிக்க நம்மால் உடனடியாக முடியாவிட்டாலும் உடன் இருப்பவருக்கு எடுத்துரைத்து
வாழ்வோம். உயிர்த்த இயேசு தமது சீடர்களுக்குட் தோன்றி தனது பிரசன்னத்தையும் அற்புத
அடையாளங்களையும் வெளிப்படுத்தினார் இதன் வழியாக சீடர்களுக்கு பலமூட்டினார். திருத்தந்தை
தூய இரண்டாம் யோவான் பால் வலியுறுத்தியது போல, உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்
என்ற உயிர்த்த இயேசுவின் வார்த்தைகள் கிறிஸ்தவர்களை உயிருள்ள சாட்சிகளாக
இருக்கவும் உயிர்ப்பின் மகிழ்ச்சியை உலகிற்குக் கொண்டு செல்லவும் நம் மனதில் இருக்கக்கூடிய
அலட்சியத்தையும் பயத்தையும் வெல்லவும் அறிவுறுத்துகிறது என்பதை உணர்ந்து வாழ்வோம்.
ஏனெனில் உயிர்ப்பு உன்னதமானது.
