16. ஆடுகளுக்கு வாயில் நானே.
இன்றைய நற்செய்திப் பகுதியில், இயேசு பழைய ஏற்பாட்டு நூல்களில் காணப்படும் ஒரு பொதுவான உவமையாகிய தன் மந்தையை வழிநடத்தும் ஆடுகளின் ஆயன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். தன்னை ஒரு நல்ல ஆயன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பு, இயேசு தன்னைப் பற்றி, "ஆடுகளுக்கு வாயில் நானே" (வசனம் 7) என்று கூறுகிறார். யாவே இறைவன் இஸ்ரவேல் மக்களுக்குச் செய்தது போலவே, திருஅவைஅயிலும் அவர் தம்முடைய "ஆடுகளை" வழிநடத்த ஆயன்களைப் பயன்படுத்துகின்றார் என்பதை இந்த இறைவார்த்தைகள் எடுத்துரைக்கின்றன.
நல்ல மேய்ப்பர் என்பவர், கிறிஸ்துவின்
முன்மாதிரியைப் பின்பற்றுபவர், தாழ்மையுடன் தன்னை மற்றவர்களின் பணிக்கு அர்ப்பணிப்பவர், தனக்கென எதையும்
வைத்துக் கொள்ளாதவர் என்ற மூன்று சிந்தனைகளின் அடிப்படையில் இன்று நாம் சிந்திப்போம்.
முதலாவதாக கிறிஸ்துவின் முன்மாதிரிகையைப்
பின்பற்றுபவர்
இவ்வுலகில் தலைவர்களுக்குப்
பஞ்சமில்லை. ஆனால் நல்ல தலைவர்களுக்குத் தான் பஞ்சமிருக்கின்றது. எல்லாரும் தலைவராக
எண்ணலாம். ஆனால் மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காகப் பணியாற்ற தன்னையே
அர்ப்பணிப்பவர்களே நல்ல தலைவர். அவ்வகையில் இயேசு தன்னை மட்டுமல்ல தனது உயிரையும் தனது
மக்களுக்காக அர்ப்பணித்தவர். அவரது மாதிரிகையைப் பின்பற்றுபவர்களே உண்மையான தலைவர்கள்
நல்ல ஆயன்கள். ஒரு "நல்ல மேய்ப்பன்" என்பவன், கிறிஸ்துவாகிய
ஒரே "வாசலை நோக்கி" ஆடுகளை வழிநடத்துபவன். தனது சொந்த நலனுக்காக அவர்களை வேறு
இடத்திற்கு வழிநடத்த விரும்பும் எவரும் ஒரு மோசடிக்காரர் திருடர் என்று கூறுகின்றார்
இயேசு. இதனையே வாயில் வழியாக வராமல் வேறு வழியாக வருபவர்கள் திருடரும் கொள்ளையர்களும்
என்று எச்சரிக்கின்றார். இயேசு உண்மை நேர்மை என்னும் வாயிலாகத் திகழ்கின்றார் இவ்வழியாக
வந்து மக்களாம் மந்தையைக் காப்பவர்களே உண்மையான ஆயன்கள் என்பதை உணர்ந்து இயேசுவின்
முன்மாதிரிகையைப் பின்பற்ற முயல்வோம்.
இரண்டாவது தாழ்ச்சியுடன்
பிறர் பணிக்கு தன்னை அர்ப்பணிப்பவர்
தாழ்ச்சி என்னும் பண்பு
இயேசுவின் வாழ்வினது தாரக மந்திரம். தாழ்ச்சியையும் இயேசுவின் வாழ்வையும் பிரிக்க
முடியாது. பதவி வரும் வரை தாழ்ச்சியுடன் இருந்துவிட்டு பதவி வந்த உடன் தங்களது சுய
உருவத்தைக் காட்டும் தலைவர்களும் நம் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
பதவி ஆசையின் ஆபத்துகள், திருஅவையையும்
அதில் ஒருவருக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகளையும் தனிப்பட்ட ஆதாயத்திற்காகப் பயன்படுத்துதல்
ஆகியவை குறித்தும் இயேசு எச்சரிக்கிறார். தலைவர் என்பவர் பணியாளராக இருக்கக் கடமைப்
பட்டவர் என்ற உணர்வுடன் தாழ்ச்சியை நமது ஆயுதமாக்கிக் கொள்ள முயல்வோம்.
மூன்றாவதாக தனக்கென எதையும்
வைத்துக்கொள்ளாதவர்
பதவியும் புகழும் வந்தால்
நிறைய பணம் பொருள் சொத்து சேர்க்கலாம் என்ற எண்ணத்துடனேயே பலர் தலைவராக ஆசைப்படுகின்றனர்.
தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாதவர் தான் உண்மையான தலைவர் என்று இயேசு வலியுறுத்துகின்றார்.
ஆடுகளுக்கு வாயில் நானே என்று கூறும் இயேசு தான் வாயில் வழியாக நுழைவதாக ஆடுகளைப்
பெயர் சொல்லி அழைப்பதாக, அவைகளுக்கு முன்னே
செல்வதாகக் கூறுகின்றார். தன்னை முற்றிலும் துறந்து தனது ஆடுகளின் வாழ்வு ஒன்றை மட்டுமே
கருத்தில் கொண்டவரால் தான் இவ்வாறு இருக்க முடியும் என்று சுட்டிக்காட்டுகின்றார்.
ஆயர்களுக்கும் தலைவர்களுக்கான
அறிவுரையாக மட்டும் இதனை நாம் காணக்கூடாது. மாறாக நாம் ஒவ்வொருவரும் தலைவர்களே. நமக்கென்று
கொடுக்கப்பட்ட பணிகளுக்கு நாம் தாம் பொறுப்பு அதற்கு நாம் தாம் தலைவர்கள் ஆயர்கள்
என்பதை உணர்ந்து மேற்கூறிய மூன்று பண்புகளிலும் சிறந்து விளங்க முயற்சிப்போம். நல்ல
ஆயனாம் இயேசு நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார் ஆமென்.
