20. பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல

இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் அவர்களுக்கு எடுத்துரைக்கும் வார்த்தைகளில் பணியாளர் தலைவர் தூது அனுப்பப்பட்டவர் அனுப்பியவர் ஆகியவர்கள் பற்றி எடுத்துரைக்கின்றார். மேலும் இருக்கின்றவர் நானே என்று யாவே இறைத்தந்தையின் வார்த்தைகளையும் நினைவுகூர்கின்றார்.   இயேசு தம் சீடர்களின் பாதங்களைக் கழுவும் செயலானது அக்காலத்தில் வேலைக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு மிக விசேஷமான பணியாகும். அவர் செய்வதை அவர்கள் கண்டதைப் போலவே, திருத்தூதர்களும் ஒருவருக்கொருவர் பணியாளர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். இயேசு முழங்காலிட்டு, யூதாஸின் காலைக் கவனமாக எடுத்துக் கழுவும்போது “என் உற்ற நண்பன், நான் பெரிதும் நம்பினவன், என் உணவை உண்டவன், எனக்கு இரண்டகமாகத் தம் குதிகாலைத் தூக்குகின்றான்”. என்ற திருப்பாடலின் வரிகளை நினைவு கூர்கின்றார். ஒரு சாதாரண உருவகத்தை விட மிகப் பெரிய அர்த்தத்தை இவ்வரிகள் பெறுகின்றன. கடவுளுடைய திட்டத்திற்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாகவும் நினைவூட்டலாகவும் இருக்கிறது. இனி என்ன நடக்கும் என்பதையும், அது நமது மீட்பின் நிறைவுக்காகவே என்பதையும் இயேசு ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். நமது வாழ்வில் என்ன நடந்தாலும், தம்மில் அன்பு செலுத்துவோருக்காக இறைவன் எல்லாவற்றையும் நன்மையாக மாற்றுவார் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

நம் வாழ்நாள் முழுவதும், நாம் பலவிதமான ஆச்சர்யங்களை எதிர்கொள்கிறோம், அவற்றில் சில முற்றிலும் எதிர்பாராதவை. பேரழிவாகத் தோன்றும் பின்னடைவுகளையும் நாம் தாங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆனால், இதுபோன்ற வீழ்ச்சிகள்கூட நம்மைத் தளரச் செய்யக்கூடாது; பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல," என்கிறார் ஆண்டவர். நாமும் நிச்சயமாக அதுபோன்ற துக்கங்களை அனுபவிப்போம். நம் வாழ்வில் சிலுவைகளாக துன்பங்கள் தோன்றும் ஒவ்வொரு முறையும், நாம் நம் ஆண்டவராம் இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, அவருடைய சீடர்களாக நம் விசுவாசத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம். மற்றவர்களால் நாம் வஞ்சிக்கப்படும்போதும், நாம் இயேசுவுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வோம். தூது அனுப்பப்பட்டவர்களாகிய நாம்  அனுப்பியவரை விட பெரியவர்கள் அல்ல என்ற உணர்வோடு வாழ முயற்சிப்போம். நம்மை அனுப்பியவரும் தலைவருமான இறைவனை மிஞ்சி நமக்கு எந்தவிதமான இடையூறுகளும் நிகழாது என்ற உறுதியுடன் வாழ முயல்வோம். ஆமென்.



Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.