14. எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்
இன்றைய நற்செய்தியில் இயேசு
தனது உடலை உண்டு இரத்தத்தைப் பருகும்படி நம்மை அழைக்கிறார், மேலும் இதை நிலைவாழ்வுடன்
இணைக்கிறார்! சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். இயேசுவின் மீதான அன்பு அவர்களில் சிலரை அவருடன்
தங்க வைத்தது. பலர் விலகிச்சென்றனர். இயேசுவின் வார்த்தைகள் உண்மையான உணவு
என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல, ஆனால் ஒரு நபரின்
உடலும் இரத்தமும் உணவாக அளிக்கப்படுவதன் யதார்த்தத்தைப் பற்றிப் பேசுவது எப்படி
சாத்தியமாகும் என்ற சந்தேகத்தால் பலர் அவருக்கு எதிராக மாறுகின்றனர். இங்கு இயேசுவின்
உடலாகிய நற்கருணையைக் குறித்து நாம் சிந்திப்போம்.
நற்கருணை என்பது அன்பின்
ஒரு அற்புதமான மறைபொருள்; அது நமக்கு பல விஷயங்களைக் கூறுகிறது. உயிர்
வாழ்வதற்கு உணவு எவ்வளவு தேவை என்பதையும், உணவு நம் உடலுக்கு
வலுவூட்டி நம்மைத் தாங்குகிறது என்பதையும், யாரும் தனியாக
வாழ இயலாது என்பதையும் நாம் நன்கு அறிவோம். இதனை நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கை அனுபவத்தால் உறுதிப்படுத்த முடியும். எல்லா
மனிதர்களுக்கும் பசி மற்றும் தாகம் ஏற்படுகின்றது அது வாழ்வின் மீதான வேட்கையை
வெளிப்படுத்துகிறது. உணவு எவ்வாறு உடலிற்கு ஊட்டம் அளிக்கின்றதோ அது போல ஆன்மாவிற்கு
ஊட்டம் அளித்து உற்சாகம் தருவது இயேசுவின் திரு உடலும் இரத்தமும்.
நற்கருணைக்கு முன்பு, வாழ்வு என்பது
ஒரு கொடை என்றும், அது காலப்போக்கில் பலவீனமடைந்து முடிந்துவிடும்
உடலின் வாழ்வோடு மட்டும் நின்றுவிடாமல், தொடர்ந்து
நிலைத்திருக்கும் ஓர் வாழ்வை நோக்கிய பேராவல் என்றும் நாம் எப்போதும் கருதவேண்டும்.
அவாழ்வின் உரிமையாளர்களாக ஆவதற்கு, மெய்யான கடவுளும் மெய்யான மனிதருமான
கிறிஸ்துவின் திருவுடலையும் திருஇரத்தத்தையும், அதாவது அவரது வாழ்வையே
புசிப்பதற்காக நற்கருணை நமக்கு வழங்கப்படுகிறது.
நாம் உண்ணும் உணவால் ஏதோ
ஒரு விதத்தில் உருமாற்றப்படுகிறோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் எதையாவது
வாசித்தால், அது நமது இதயத்தையும் மனதையும் உருமாற்றுகிறது; நாம் ஒரு
குறிப்பிட்ட இசையைக் கேட்டாலோ அல்லது இயற்கையின் ஒரு காட்சிகளைத் தியானித்தாலோ, நாம்
அனுபவித்தவற்றால் நமது உணர்வுகள் மாற்றியமைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட உணவு
உடலுக்கு உறுதியான வலிமையைத் தருகிறது. இவ்வாறு, கடவுள்
நமக்குள்ளே வாழ்ந்து, கிறிஸ்துவின் திருவுடல் மற்றும்
திருஇரத்தத்தின் வழியாக நம்மை உருமாற்றி, அதன் வழியாக தம்முடைய
தெய்வீக இயல்பில் நம்மைப் பங்குபெறச் செய்ய விரும்புகின்றார் என்பதை உணர்ந்து வாழ
முயல்வோம்.
எனவே இத்தகைய உணர்வுடன், நாம் நற்கருணை பெறும் ஒவ்வொரு முறையும், கிறிஸ்துவை
மிகவும் அந்தரங்கமான மற்றும் ஆழமான வழியில் நம் வாழ்வில் நுழைய அனுமதிக்கிறோம் என்பதை
உணர்வோம். இத்தகைய உறுதியான நம்பிக்கையுடன், நம்மால் இயன்ற
அனைத்து நன்றியுணர்வுடனும் மரியாதையுடனும் திருநற்கருணையை பெற்றுக்கொள்வோம் ஏனெனில்
இயேசுவின் சதையே உண்மையான உணவு. அவரது இரத்தமே உண்மையான பானம். ஆமென்.
