6. விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர்.

 

இயேசு தம் சீடர்களுக்கு தன்னைப் பற்றியும் தனது பணி மற்றும் இறைத்தந்தையைப் பற்றி எடுத்துரைக்கும் பகுதியினை நாம் நற்செய்தியில் காண்கின்றோம். மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் என்னும் மூன்று வார்த்தைகளில் இயேசுவின் 33 ஆண்டு வாழ்வினை எடுத்துரைக்கின்றார் நற்செய்தியாளர். வானம் பூமி நிலம் என்னும் மூன்று நிலைகளில் அதனை விவரிக்கின்றார்.

1. மேலிருந்து வருபவர்:

மூன்று ஆள்களாக தமத்திரித்துவக் கடவுளாக இருந்தவர் தந்தையின் விருப்பப்படி மனுமகனாக இந்த பூமியில் அவதரிக்க மேலிருந்து கீழே இறங்குகின்றார். அங்கிருந்து நமக்காக வருகின்றார். சாதாரணமாக நம்மோடு வாழும் சிலர் உயர் பதவியோ அல்லது உயர் நிலையையோ அடைந்துவிட்டால் மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு இறங்கி வர விரும்புவதில்லை. எல்லா படைப்புக்களையும் உண்டாக்கி அதனை ஆளும் வல்லமை பெற்ற இறைமகன் சாதாரண எளிய மனிதராக இறங்கி வந்தது தாழ்ச்சி என்னும் பண்பில் நாம் சிறந்து விளங்கவேண்டும் என்பதை எடுத்துரைப்பதற்காகவே. வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் போல ஒருமுறை மேல் ஏறினால் மறு முறை கீழே இறங்கித் தான் ஆகவேண்டும். எல்லாரும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. விண்ணகத்திலிருந்து வந்த இயேசு நமக்கு மீட்பினைக் கொண்டுவர வந்தார் என்பதை உணர்ந்து வாழ முயல்வோம்   

2. அனைவரையும் விட மேலானவர்:

மனிதனாக மனுமகன் பிறந்தார் அவரும் எல்லாரையும் போலவே என்று மிக சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. மாறாக, அவர் நம் அனைவரையும் விட மேலானவர். இறைத்தந்தையின் விருப்பத்திற்கு பணிந்து அவரால் இப்பூமிக்கு அனுப்பப்பட்ட அவர் இறைத்தந்தை கூறிய வார்த்தைகளையே எடுத்துரைக்கின்றார். தந்தையின் மகன் தான் என்பதை தனது செயல்களால் எடுத்துரைத்து சான்று பகர்கின்றார். அதனால் அவரது வாழ்வும் வார்த்தையும் எல்லாருக்கும் மிகச்சிறந்த அடையாளமாக மாறுகின்றது. கடவுள் இப்பூமியில் இருக்கின்றாரா? கடவுளின் இருப்பு பற்றிய கேள்வி மனிதகுலத்தின் மிக ஆழமான கேள்விகளில் ஒன்றாக இருக்கின்றது. இந்தக் கேள்வியானது தத்துவம், இறையியல், அறிவியல் மற்றும் தனிப்பட்ட அனுபவம் ஆகியவற்றையும் தொடுகிறது. நம்பிக்கையாளர்களும் பல தத்துவஞானிகளும் கடவுளின் இருப்பு பகுத்தறிவு சார்ந்தது என்றும், ஒழுங்கு மற்றும் சிக்கலான தன்மை பிரபஞ்சத்தின் நல்லிணக்கம், துல்லியமான இயற்பியல் விதிகள் (ஓசோன் படலம் போன்றவை), மற்றும் வாழ்க்கையின் சிக்கலான தன்மை ஆகியவை தற்செயலானது அல்ல, மாறாக ஒரு அறிவார்ந்த படைப்பாளரையே சுட்டிக்காட்டுகின்றன என்று பல்வேறு சான்றுகளால் ஆதரிக்கப்படுகிறது என்றும் வாதிடுகின்றனர். இது போல அறிவியல் அடிப்படையில் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கடவுளின் இருப்பை சுட்டிக் காட்டுகின்றனர். கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுளை எல்லாம் வல்லவராக, காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவராக, நம்புகின்றோம். கடவுள் நம்மோடு ஒருவராக இருக்கின்றார் நம்மை விட மேலானவராக இருக்கின்றார் என்ற உணர்வுடன் வாழ்வோம்.

3. மண்ணுலகிலிருந்து உண்டானவர்:

கடவுள் உண்டாக்கப்பட்டவர் அல்ல உண்டானவர் அவருக்கும் முடிவு என்பது இல்லை அவரால் படைக்கப்பட்ட படைப்புக்களுக்கு தொடக்கமும் முடிவும் உண்டு ஆனால் அது அத்தனையையும் படைத்தவருக்கு முடிவு என்பது இல்லை. மேலிருந்து வந்தவரை அப்படியே ஒரு தூதராக மக்களுக்கு வழிகாட்டும் ஒரு ஆற்றலாக இவ்வுலகில் கடவுள் வைத்திருக்கலாம் ஆனால் அப்படி வைக்கவில்லை மாறாக நம்முள் ஒருவராக மனிதரைப்போலவே பிறந்து வாழ்ந்து மீட்பைக் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினார். அதன்படியே கடவுள் இயேசுவை மண்ணுலகிலிருந்து வந்தவராக உருவாக்கினார்.

தனது வாழ்வாலும் வார்த்தையாலும் சான்று பகர்ந்த இயேசுவை முன்மாதிரிகையாகக் கொண்டு நாமும் வாழ முயல்வோம்.



Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.