3. மறுபடியும் பிறந்தாலன்றி, எவரும் இறையாட்சியைக் காண இயலாது.
மறுபடியும் பிறந்தாலன்றி, எவரும் இறையாட்சியைக் காண இயலாது என்று நிக்கொதேமுவிடம் இயேசு கூறிய இந்த
வார்த்தைகள், உயிர்த்தெழுதல் ஏற்படுத்திய மாற்றத்தை நமக்கு
நினைவூட்டுகின்றன. திருமுழுக்கு எனும் அருளடையாளத்தைப் போலவே, உயிர்த்தெழுதலும் ஒரு மறுபிறப்பாகும். உண்மையில், இந்த மறுபிறப்பின் மூலமாகத்தான் நாம் கடவுளுடைய இறையரசைக் "காண்கிறோம்"; அதாவது, நமது இவ்வுலக வாழ்வின் காரியங்களுக்கு அடியில்
உள்ள ஒரு அர்த்தத்தை அதாவது நித்திய கடவுளாம் இறைவனே முழுமுதற் கடவுளாக எல்லாவற்றிற்கும்
அடித்தளமாக இருக்கிறார் என்பதை உள்ளுணர்வால் அறிகிறோம். இதனால்தான் முழு
கிறிஸ்தவப் பயணமும் ஒரு புதுப்பித்தல் பயணமாக இருக்கிறது.
இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசுவை சந்திக்க இரவில் தனியாக வரும் நிக்கோதேமு நமக்கு மூன்று பண்புகளைக் கற்பிக்கின்றார்.
1. வித்தியாசமான மனிதர்.
மறைநூல் அறிஞரான அவர் தனது நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள்
அனைவரும் இயேசுவைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதைக் கேட்டிருப்பார். ஆனால் அது எதையும்
நம்பாமல் அவரைப் பற்றிய நல்லெண்ணத்தினை தனது தனிப்பட்ட உணர்வினைக் கொண்டவராக இருக்கின்றார்.
தனது நண்பர்களுடன் அவரைப் பார்க்க வராமல் இரவில் தனியாக இயேசுவை சந்திக்கும் வித்தியாசமான
மனிதராக இருக்கின்றார். பல நேரங்களில் நாம் ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட புரிதல் கொண்டிருந்தாலும்
பிறரது பேச்சு மற்றும் செயலுக்கு ஏற்றவாறு அந்த நபரைப் பற்றிய கண்ணோட்டத்தை நேர்மறையாகவோ
எதிர்மறையாகவோ மாற்றிக் கொள்கின்றோம். ஆனால் நிக்கோதேமு அப்படி மாறாவில்லை மாறாக தனது
கருத்தில் எண்ணத்தில் உறுதியாக இருக்கும் வித்தியாசமான மனிதராக விளங்குகின்றார்.
2. தெளிவு பெற விரும்புபவர்
தனது மனதில் இயேசுவைப் பற்றியும்
அவரது அருஜ்செயல்கள் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருந்தாலும் அதனை இயேசுவினிடத்தில்
கேள்வியாகக் கேட்டு விளக்கம் பெறுகின்றார். தனக்கு என்ன தேவையோ எதில் தெளிவு தேவையோ
அதனை எடுத்துரைத்து விளக்கம் பெறுகின்றார். பல நேரங்களில் நமக்கு என்ன தேவை என்ற புரிதல்
கூட நம்மில் சிலருக்கு இருப்பதில்லை. உனக்கு
என்ன பிடிக்கும் என்ன வேண்டும் என்று கேட்டால் எனக்கு எல்லாமே பிடிக்கும் என்ன வேண்டும்
என்று தெரியல என்று கூறுபவர்கள் அதிகம்ள். எனது தேவை இதுதான் என்ற தெளிவு நமக்கு குறைவு
அதனால் தான் ஆலயம் சென்று செபிக்கும்போது என்ன தேவை என்று தெளிவாகக் கேட்காமல் நாமும்
குளம்பி மற்றவர்களையும் குழப்பிவிடுகின்றோம்.
3. உள்ளதை எடுத்துரைப்பவர்
இயேசுவைப் பற்றி தன்னை சுற்றி இருந்தவர்கள் என்ன
கூறினாலும் அவர் மனதில் என்ன நினைத்தாரோ அதனை எடுத்துரைக்கின்றார். “ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை
நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும்
இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது” என்ற அவரின் வார்த்தைகள் இதனை வெளிப்படுத்துகின்றன.
மனதில் நாம் நினைப்பவற்றை பேசி பிறரை மனதார பாராட்டி வாழும்போது மகிழ்வான வாழ்க்கையை
நம்மால் வாழ முடியும்.
இன்றைய நற்செய்திப் பகுதியில்
இயேசு வாழ்க்கைக்கான இரண்டு வழிகளைக் கூறுகின்றார் ஒன்று மறுபடியும் பிறக்கவேண்டும்.
உடலால் அல்ல தூய ஆவியின் இயல்பு கொண்டவர்களாக பிறக்க வலியுறுத்துகின்றார். மனித உடலின்படியான
வாழ்க்கையை விட்டுவிட்டு, ஆவியின்படியான வாழ்க்கையை நோக்கி நகர நம்மை
வழிநடத்துவது கடவுளின் செயலே. இரண்டாவது பாவத்தையும், நமது சொந்தக்
காரியங்களையும், நமது "அகங்காரத்தையும்" மையமாகக் கொண்ட
வாழ்க்கையையும் கைவிட்டு, கடவுளுடனும் மற்றவர்களுடனும் ஐக்கியம் கொண்ட
வாழ்க்கையை நோக்கி நகருமாறு தூய ஆவியானவர் நம்மைத் தூண்டுகிறார். இந்த இரண்டு
மனநிலைகளுக்கு இடையிலான வேறுபாடு, நமது அன்றாட வாழ்க்கை அணுகுமுறையைப் பற்றி
சிந்திக்க நமக்கு உதவும்.
எனவே நாமும் நிக்கோதேமு போல
வித்தியாசமானவர்களாக, தெளிவு பெற விரும்புபவர்களாக, உள்ளதை உள்ளவாறு எடுத்துரைப்பவர்களாக வாழ முயல்வோம். தூய ஆவியின் இயல்பு கொண்டவர்களாக
மீண்டும் புதுப்பிறப்பெடுப்போம். ஆமென்.
