10. அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
"நிலைவாழ்வு தரும் அழிந்துபோகாத உணவு" என்பது இயேசுவே. அதுவே அவருடைய போதனையும்கூட. "அழிந்துபோகாத அப்பம்" இயேசுவின் உடலாகிய நற்கருணையை நமக்கு அடையாளப்படுத்துகின்றது. அவர் தம்முடைய வார்த்தையிலும் நற்கருணையிலும் தம்மையே நமக்குத் தருகிறார். திருவிவிலியத்தில் உணவின் உருவகமும் தண்ணீரின் உருவகமும் அடிக்கடி வருகிறது. உணவும், தண்ணீரும் மனித வாழ்விற்கு இன்றியமையாத முதன்மையானவைகளாகும். உணவும் நீரும் உடலுக்கு ஆற்றல் அளிப்பது போல, மனிதனின் ஆவிக்குரிய வாழ்விற்குத் தம்முடைய வார்த்தையும் போதனையும் இன்றியமையாதவை என்று இயேசு குறிப்பிடுகிறார்.
அழியாத நிலையான உணவு என்று
இயேசு தன்னை முன்னிறுத்துவதன் வழியாக, தன்னை உண்ண வேண்டியதன்
அவசியத்தை மட்டும் உறுதிப்படுத்தவில்லை. மாறாக நிலையான வாழ்வைப் பெற நாம் அவருடைய
வார்த்தைகளை விசுவாசிக்க வேண்டும், ஒவ்வொருவரும் தன்னை
முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார். "அழியாத உணவுக்காக
உழையுங்கள்" என்ற வார்த்தைகளின் வழியாக, அந்த உணவைப்
பெறுவதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், அதனை அடைவதற்கான சாத்தியமான
எல்லா வழிகளையும் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இயேசு தம்மைத்
திணிப்பதில்லை, மாறாக, நம் அனைவராலும்
அவர் கண்டறியப்படவும், அனுபவிக்கப்படவும்
வேண்டும் என விரும்புகிறார்.
மனிதன் தன் சொந்த
பலத்தால் மட்டுமே இயேசுவை அடைய முடியாது. கடவுளிடமிருந்து வரும் ஒரு கொடையின் வழியாக
மட்டுமே அவனால் அவரை அடைய முடியும். இருப்பினும். தம்மையே பரிசாக ஏற்றுக்கொள்ளத்
தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும்படி ஒவ்வொரு மனிதனையும் தொடர்ந்து அழைக்கிறார். அவருடைய வார்த்தையை நடைமுறைப்படுத்த
முயற்சிப்பதன் வழியாக, மனிதன் அவரில்
முழுமையான விசுவாசத்தை அடைகிறான்; நறுமணமும்
சுவையும் நிறைந்த அப்பத்தைச் சுவைப்பது போல அவருடைய வார்த்தையைச் சுவைக்கிறான். அழியாத
உணவினை மானிட மகனே உங்களுக்குத் தருவார் என்ற இறைவார்த்தைகள், கிறிஸ்தவ வாழ்வின் ஆணிவேரான இயேசுவுடனான நமது தனிப்பட்ட உறவிற்கே நம்மை
மீண்டும் அழைத்துச் செல்கின்றன.
அவருடைய இறைவார்த்தையை
அர்ப்பணிப்புடனும், குறிப்பாக அயலார்
மீது அன்பு செலுத்துதல் எனும் கட்டளையையும் நன்றாக வாழத் தொடங்கியவர்கள், இயேசுவே தங்கள் வாழ்வின் "அப்பம்" என்றும், தங்கள் இதயத்தின் விருப்பங்களை நிறைவேற்ற வல்லவர் என்றும், தங்கள் மகிழ்ச்சியின் ஊற்று என்றும், தங்கள் ஒளி
என்றும் உணர்கின்றார்கள். அதை நடைமுறைப்படுத்துவதன் வழியாக, மனிதகுலம்
மற்றும் உலகின் பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வாக இறைவார்த்தையை மதிக்கக்
கற்றுக்கொண்டிருக்கிறார்கள். மேலும், "வாழ்வின்
அப்பமாகிய" இயேசு, நற்கருணையில்
தம்மையே உன்னதமான பரிசாக அளிப்பதால், அவர்கள்
இயல்பாகவே அன்புடன் நற்கருணையைப் பெற்றுக்கொள்ளச் செல்கிறார்கள், அது அவர்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.
நிலையான வாழ்வைப்பெற அழியாத
உணவினைத் தேடுங்கள் என்று நம்மை வலியுறுத்திய இயேசு, அதே அக்கறையுடன்
இந்த அற்புதமான அனுபவத்தைப் பெற்ற நாம், நமது
கண்டுபிடிப்பை நமக்குள் வைத்துக்கொள்ளாமல், மற்றவர்களுடன்
பகிர்ந்துகொள்வது அவசியம் என்று வலியுறுத்துகின்றார். அப்போது தான் தங்கள்
இதயங்கள் எப்போதுமே தேடிக்கொண்டிருந்ததை இயேசுவில் ஒவ்வொருவரும் கண்டுகொள்வார்கள்.
இது நாம் நமது அயலாருக்காகச் செய்யும் ஒரு மாபெரும் அன்பின் செயலாகும். அதன்மூலம்
அவர்களும், இந்தப் பூவுலகில், மெய்யான வாழ்வு என்றால் என்ன என்பதை அறிந்து, என்றும் அழியாத
வாழ்வைப் பெறுவார்கள். ஆமென்.
