4. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்

 

ன்பார்ந்தவர்களே பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும் என்று இன்றைய நற்செய்தியில் இயேசு கூறிய வார்த்தைகளைக் குறித்து இன்று நாம் சிந்திப்போம். ”மோசே பாலைவனத்தில் பாம்பினை உயர்த்தியதுபோல, மானிடமகனும்  உயர்த்தப்பட வேண்டும்; அப்பொழுது, அவரை விசுவாசிக்கிற எவனும் நிலையான ஜீவனைப் பெறுவான். என்ற எண்ணிக்கை நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்த முக்கியமான உருவகத்தின் சாரத்தினையே யோவான் நற்செய்தியாளர் தனது வார்த்தைகளில் கூறுகின்றார். மீட்பின் முழு செய்தியையும் சுருக்கமாக அவர் தன் வரிகளில் கூறுகிறார். வெண்கல பாம்பின் நிகழ்வு நாம் அனைவரும் அறிந்ததே. கானான் நாட்டு மக்களுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தபோதிலும், இஸ்ரவேலர் யாவே இறைவனுக்கு எதிராக முணுமுணுத்து, இன்னும் பாலைவனத்தில் இருப்பதற்காகப் புலம்புகிறார்கள். அவர்களைத் திருத்துவதற்காக கடவுள் பல விஷமுள்ள பாம்புகளைப் பாளையத்திற்குள் அனுப்புகிறார், அவைகள், பல இஸ்ரவேலர்களைக் கடிக்கிறது. பலர் இறந்து போகின்றனர். தாங்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டதை மக்கள் உணர்ந்து, தங்களுக்காகப் பரிந்து பேசும்படி மோசேயிடம் கேட்கிறார்கள். மோசே, தேவனுடைய வழிகாட்டுதலின்படி, ஒரு வெண்கல பாம்பினை உருவாக்கி, அது எல்லா மக்களும் பார்க்கும்படி ஒரு கம்பத்தில் வைக்கின்றார். அந்த வெண்கல பாம்பினைப் பார்ப்பவர் எவரும் விஷத்திலிருந்து தப்பிப் பிழைப்பார் என்று கடவுள் கூறியிருந்ததை விளக்குகிறார் மோசே. இந்த நிகழ்வானது இயேசு நிக்கோதேமுவுடனான உரையாடலில் ஒரு உருவகமாக ஒரு ஒப்பீடாகப் பயன்படுத்தப்படுகின்றது.

இயேசுவுக்கும் வெண்கலப் பாம்பிற்கும் இடையிலான ஒப்புமை தெளிவாக உள்ளது, ஆனால் யோவான் செய்த உண்மையான ஒப்பீடு, இயேசுவுக்கும் பாம்பிற்கும் இடையிலானதல்ல, மாறாக ஒன்றின் இயக்கத்திற்கும் மற்றொன்றின் இயக்கத்திற்கும் இடையிலானதாகும். ஒரு கம்பத்தில் உயர்த்தப்பட்ட பாம்பின் சின்னம் குணமளித்தல் மற்றும் மீட்பின் அடையாளமாக இருந்தது போலவே, கிறிஸ்து சிலுவையில் உயர்த்தப்படுகிறார். கம்பத்தில் உள்ள பாம்பின் உருவம், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் ஒரு முன்னடையாளமாக மாறுகிறது. மானிடமகன் சிலுவையில் உயர்த்தப்படுகிறார், மேலும் பாவத்தால் விஷம் ஏற்றப்பட்ட மனிதகுலம் அனைத்தும் இப்போது அவரை நோக்கிப் பார்த்து வாழ முடியும். மோசே பாலைநிலத்தில் பாம்பை உயர்த்தியபோது, ​​அந்த வெண்கலப் பாம்பைப் பார்த்த அனைவரும் பாம்புக்கடியிலிருந்து குணமடைந்தது போலவே, இயேசுவும் சிலுவையில் உயர்த்தப்படும்போது மீட்பைக் கொண்டு வருவார்.

இருந்தாலும், இந்த மீட்பு நிறைவேறுவதற்கு நற்செய்தி இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறது. 1.மனிதகுமாரன் உயர்த்தப்படுவதும், 2. மனிதகுலம் அதனைவ் விசுவசிப்பதும் அவசியம். "அது மிக அவசியம்" என்று நற்செய்தி வலியுறுத்துகின்றது. இவை மட்டுமே தேவைப்படும் நிபந்தனைகள்; இவை இல்லாமல் கடவுளுடைய திட்டத்தை நிறைவேற்ற முடியாது. இயேசு உயர்த்தப்பட வேண்டும், மேலும் இந்த உன்னதமான அன்பின் செயல் நம்மைக் காப்பாற்ற முடியும் என்று மனிதகுலம் அதனை நம்ப வேண்டும் இவையே அந்த நிபந்தனைகள்.

சிலுவையை உயர்த்துவது என்பது ஒரு பரஸ்பரப் பரிமாற்றத்தைக் கோரும் செயலாகும்; மீட்பின் திட்டத்தில் தீவிரமாக ஒத்துழைக்க மனிதகுல மக்களாகிய நாம் அழைக்கப்படுகின்றோம். தந்தை உலகத்தின் மீட்பிற்காக தனது மகனை உயர்த்தியது போல, நாமும் அவரை நோக்கிப் பார்த்து, நம் வாழ்வில் அவரை உயர்த்த வேண்டும். உயர்த்துதல் என்பது, இறைமகன் சிலுவையில் இறந்ததனால் மீட்பு வருகிறது என்பதை முதலில் நமக்கும் பின்னர் உலகத்திற்கும் தெளிவாக எடுத்துரைப்பதாகும். நம் வாழ்விலும் அவரை உயர்த்துவோம் நமது வாழ்வால் வார்த்தையால் ஆமென்.



Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.