11. “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது”

 

தொடர்ந்து பல நாட்களாக இயேசு அழியாத உணவு நிலைவாழ்வு தரும் உணவு பற்றி எடுத்துரைக்கும் நற்செய்தி வரிகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். மனிதர்கள் போதும் என்று சொல்வது உணவு ஒன்றில் மட்டுமே. இந்த உலகில் உள்ள மற்ற எந்த பொருள்களைக் கொடுத்தாலும் இன்னும் வேண்டும் என்ற ஆசை இருக்குமே தவிர அது போதும் என்று மனது ஒரு போதும் எண்ணாது. உணவு ஒன்று மட்டுமே வயிறு நிறைந்துவிட்டது போதும் என்று கூறுகின்றோம். ஆனால் அதே உணவை அடுத்த வேளைக்கு கட்டாயம் எதிர்பார்க்கின்றோம். இக்காலகட்டத்தில் உணவு குறித்த அதிகமான அக்கறை பலருக்கும் வந்துவிட்டது அக்கறை என்று கூறுவதை விட மோகம் என்று கூறலாம். மனிதர்கள் பசியாலும், ஆசையாலும் ஆட்கொள்ளப்படுகிறார்கள்.

'ஆசை' அல்லது விருப்பம் என்ற சொல்லானது அது நட்சத்திரங்களுடன் (de-sidera) தொடர்புடையது.  நட்சத்திரங்களைக் காண நாம் மேல் நோக்கி நம் பார்வையை செலுத்த வேண்டும். நிறைவை நோக்கித் திருப்பினால் மட்டுமே நமது பசியைத் தணிக்க முடியும். மனித மனமானது வெற்றி, பணம், அங்கீகாரம், மனநிறைவு ஆகியவற்றிற்கான பசியில், திருப்தியடைந்தாலும் கூட, நமது வயிற்றில் ஒரு வெறுமையை விட்டுச்செல்வதை உணர்கிறது; அது நம்மைத் திருப்திப்படுத்துவது போல் தோன்றினாலும் நம்மை நிறைவுபடுத்துவதில்லை. இரண்டு வகையான பசியினை மனிதர்களாகிய நாம் உணர்கின்றோம். ஒன்று வெளிப்புற பசி மற்றொன்று,உள்ளார்ந்த பசி.  வெளிப்புற பசி என்பது உடல் தேவைகளுக்கான பசி. வாழ்க்கை அர்த்தத்திற்கான பசி, ஆழமான உண்மைக்கான பசி, உலகம் மற்றும் வரலாறு மீதான தீர்ப்புக்கான பசி போன்றவை உள்ளார்ந்த பசி அதனைக் கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்.

நிறைவளிக்கும் உணவை இயேசுவே தர முடியும் என்கின்றார். நம்மை நிறைவாக்குபவர் அவரே. வாழ்க்கை நமக்கு வழங்கும் நியாயமான மகிழ்ச்சிகளான அன்பு, பாசம், மனநிறைவு, விடுமுறைகள் போன்றவைகள் நமக்கு மகிழ்ச்சியான உணர்வினை அளித்தாலும் நமது நிறைவு வேறு எங்கோ, கடவுளிடத்தில் இருக்கிறது என்பதை உணார்வோம். எங்களுக்கு அடையாளம் தாரும் என்று கேட்ட மக்களுக்கு வார்த்தைகளால் விளக்கமளிக்கின்றார் இயேசு இவ்வுலக உணவை உண்டு வயிற்றை நிரப்புவதல்ல உண்மையான மகிழ்ச்சி நிலையான அழியாத உணவாகிய இயேசுவை ஏற்று இதயத்தை நிரப்புவதே உண்மையான மகிழ்ச்சி என்று சுட்டிக் காட்டுகின்றார்.

அடையாளங்களைக் கண்டு நம்புபவர்களாக இல்லாமல்  அடையாளத்தையும் தாண்டி இறைவன் மேல் அளவு கடந்த நம்பிக்கைக் கொண்டவர்களாக இருக்க அருள்வேண்டுவோம். வாழ்வு தரும் உணவாகிய இயேசுவை நோக்கிச் செல்வோம் அவரில் நம்பிக்கை கொண்டு இவ்வுலக பசியற்றவர்களாக தாகமற்றவர்களாக இருக்க முயல்வோம்.



Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.