18. “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்?”
இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில் நாம் காணும் எருசலேம் கோவில் அர்ப்பண விழாவானது, கிஸ்லேவ் மாதத்தின் (நவம்பர்-டிசம்பர்) 25 ஆம் நாளில் கொண்டாடப்பட்ட விழாவாகும். இப்பெருவிழா, செலூசித் ஆட்சியின் 148 ஆம் ஆண்டில், அதாவது கி.மு. 165 இல், நான்காம் அந்தியோகஸ் எப்பிபானஸ் ஆலயத்தைத் தீட்டுப்படுத்திய பிறகு, யூதாஸ் மக்கபேயுவால் ஆலயம் தூய்மைப்படுத்தப்பட்டதை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரும் விதமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இதனை மக்கபேயர் நூலில் நாம் காணலாம். (1 மக்க 4:36-59; 2 மக்க 1:2-19; 2 மக்க 10:1-8).
இந்தப் பெருவிழா எட்டு
நாட்கள் நீடித்தது. இயேசு சாலமோனின் மண்டபத்தில் நடக்கிறார். "அது
குளிர்காலம்" என்று கூறப்படும் இந்தக் குறிப்பானது, புறஇனத்தாருக்கு
இந்தக் காட்சி நடைபெறும் ஆண்டின் காலத்தையும், மேலும், அந்த இடம் ஒரு
பாதுகாப்பான இடம் என்பதையும் சுட்டிக்காட்டும் நோக்கத்தில் இடம்பெறுகின்றது. திடீரென்று
சில யூதர்கள் தன்னைச் சூழ்ந்துகொண்டபோது இயேசு அமைதியாக இருக்கின்றார். “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்கின்றனர்.
காத்திருப்பினை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 1. ஆர்வமுள்ள காத்திருப்பு 2. மற்றொன்று
ஆர்வமற்ற காத்திருப்பு.
1.ஆர்வமுள்ள காத்திருப்பு
ஆர்வமுள்ள காத்திருப்பு
என்பது நாம் ஒன்றிற்காக மிகவும் ஆவலுடன் காத்திருப்பது.
குறிப்பாக தேர்வு வெளியீடுகள் அறிமுகமானவர்களின் சந்திப்பு, அழைப்பு, விருப்பமான உணவு, உடை, தேவை போன்றவற்றை எதிர்பார்த்து காத்திருப்பது.
இந்த ஆர்வமுள்ள காத்திருப்பின் பலன் நன்மையால் நிறைவடையும் என்பது நாம் முன்பே அறிந்தது.
எனவே அதற்காக நாம் ஆவலுடன் காத்திருக்கின்றோம். இயேசு இறைத்தந்தையிடம் எழுந்தருள காத்திருந்தது, திருத்தூதர்கள் தூய ஆவியின் வருகைக்காகக் காத்திருந்தது என வரலாற்றில் மிக முக்கியமான
நிகழ்வுகள் இந்த ஆர்வமுள்ள காத்திருத்தலில் அடங்கும்.
2. ஆர்வமற்ற காத்திருத்தல்.
நமக்கு பிடிக்காத விருப்பமில்லாத
நிகழ்வுகளுக்காக காத்திருப்பது ஆர்வமற்ற காத்திருத்தல் ஆகும். பேருந்திற்காக அதிக
நேரம் காத்திருப்பது, பிடிக்காத நபரின்
சந்திப்பிற்காகக் காத்திருப்பது என பலவற்றை நாம் கூறலாம். இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம்
கேள்வி கேட்கும் யூதர்கள் ஆர்வமற்ற காத்திருப்பைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு
இயேசு மெசியாவாக தன்னை அறிவிப்பார் என்ற ஆர்வமுள்ள காத்திருப்பு இல்லை. அவர்களுக்கு
இருந்தது எல்லாம் இவரது முடிவு என்ன ஆகும்? அவர் தன் மனதில்
என்ன தான் நினைத்துக்கொண்டிருக்கின்றார் என்று அறிந்துகொள்ளவே அவர்கள் விரும்பினர்.
பல சமயங்களில் நடப்பது போலவே, அவர்கள் சரியான நோக்கத்துடன் அவரை அணுகவில்லை. மாறாக
பெருமையால் அவர்களை அணுகின்றனர். ஆனால் இயேசு அவர்களுக்கு அமைதியாக பதிலளிக்கின்றார்.
பெருமையால் அவர்களின் இதயங்கள் மூடப்பட்டிருந்தனால், இயேசுவின் வார்த்தைகளுக்கு அவர்களால் செவிகொடுக்க முடியவில்லை.
ஆக ஆர்வமுள்ள காத்திருத்தல் கொண்டவர்களாலேயே நல்லவற்றிற்கு செவிசாய்க்க முடியும். அநாளுக்கு நாள், நாம் விரும்பும் விஷயங்களுக்காகக் காத்திருக்கும்போது, நாம் வெவ்வேறு மனிதர்களாக மாறுகிறோம். காத்திருக்கும் செயலில், நாம் யார் என்று அறிகிறோம். காத்திருப்பு நமது ஆசைகளையும் எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளையும் அடையாளப்படுத்துவதாக இருக்க வேண்டும். எதிர்காலம் ஒருபோதும் வராமல் போகலாம், நம் நம்பிக்கைகள் நிறைவேறாமல் போகலாம் என்றாலும், காத்திருப்பதைப் பற்றி சிந்திக்கும் செயல் நம்மைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறது. எனவே நாமும் காத்திருப்போம். ஆர்வமுள்ளவர்களாக, ஆண்டவரை காணும் ஆயத்த மனநிலை கொண்டவர்களாக இருப்போம் ஆமென்.
