8. “நான்தான், அஞ்சாதீர்கள்”
"பயப்படாதீர்கள்" அல்லது "அஞ்சாதீர்கள்" என்ற அறிவுரையானது திருவிவிலியத்தில் 365 முறை இடம்பெற்றுள்ளது என்று கூறுகின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். அதாவது ஆண்டின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு முறை என, 365 முறை நமது வாழ்நாள் முழுவதும் இறைவன் நம்மோடு இருந்து நமக்கு வலுவூட்டுகின்றார் என்பது அர்த்தம்.
"பயப்படாதீர்கள்," "அஞ்சாதீர்கள்,"
"மனம் தளராதீர்கள்" என்று இறைவன் விவிலியத்தில் பல முறை கூறுவதற்கான காரணம் நாம்
அவர் மீது நம்பிக்கை வைப்பதற்கான ஒரு நிலையான அழைப்பாகும். நற்செய்தியில் இயேசு கூறிய
நான் தான் அஞ்சாதீர்கள் என்ற வார்த்தையானது பழைய ஏற்பாட்டில் மோசேவிற்கு யாவே கடவுள் "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" என்று கூறிய வல்லமையான வார்த்தைகளை நினைவூட்டுகின்றன.
அஞ்சாதீர்கள் என்ற அழைப்பானது, கடவுள் நம்முடனிருந்து, தம்முடைய விசுவாசிகளைப் பராமரித்து, அவர்களைப்
பயத்திலிருந்தும் கவலையிலிருந்தும் விடுவிக்கிறார் என்ற வாக்குறுதியை
அடிப்படையாகக் கொண்டது.
அச்சம்,பயம் என்பது எப்போதும் ஓர் எதிரியாகக் கருதப்படுவதில்லை ஏனெனில் சில
சமயங்களில் அது நம்மை அடிப்படையானதை நோக்கித்
தள்ளும் ஒரு "ஆசிரியராகவும்" பார்க்கப்படுகிறது. அச்சம் நமது பலவீனத்தையும்
நமது வாழ்க்கையின் மதிப்பையும் நமக்கு நினைவூட்டுகிறது. உதாரணமாக இறைவாக்கினர் எசாயா
நூலில் கடவுள் கூறும் அஞ்சாதே, நான் உன்னுடன்
இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்.” என்ற இறைவார்த்தைகள் நமது வாழ்வின்
எல்லாச் சூழலிலும் நமக்கு ஆற்றல் அளிப்பவை. வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளை நாம்
எதிர்கொள்ளும்போது, நம்மைத்
தெய்வீகப் பராமரிப்பில் ஒப்படைத்து, தைரியமாக வாழ இந்த இறைவார்த்தைகள் நம்மை ஊக்குவிக்கின்றன.
நேற்றைய தினம்
அப்பங்களையும் மீன்களையும் பெருகச் செய்த அற்புதத்தைப் பற்றிய தியானத்திற்குப்
பிறகு, இன்றைய திருவழிபாடானது நமக்கு மற்றொரு அசாதாரணமான
அற்புதத்தை வழங்குகிறது: புயலின் நடுவில் இயேசு தம் சீடர்களைச் சந்திக்க தண்ணீரின்
மீது நடந்து சென்ற நிகழ்வு தான் அது. இயேசுவினுடைய இந்த அற்புதமான செயல், இயற்கையை அடக்கி
ஆளக்கூடிய அவருடைய வல்லமையை நமக்கு மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டுகிறது; அது அவருடைய சீடர்களை
இன்னும் கூட வியப்பில் ஆழ்த்துகிறது. முட்புதரில் மோசேக்கு காட்சியளித்து இருக்கின்றவர்
நானே என்று அவரை பலப்படுத்திய யாவே கடவுள் போல இயேசு கடல் மேல் நடந்து சீடர்களுக்கு
நான் தான் அஞ்சாதீர்கள் என்கின்றார்.
கடல்மேல் இயேசு நடந்த நிகழ்வானது
நமது வாழ்க்கை நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. கிறிஸ்தவர்களாகிய நாம் படகில்
இருக்கும் சீடர்களை அடையாளப்படுத்துகின்றோம். படகு நாம் வாழ்கின்ற திருஅவையையும் வாழ்க்கையையும் அடையாளப்படுத்துகின்றது. கால நிலை
மாற்றத்தினால் கிறிஸ்தவர்களாகிய நமக்கு இழைக்கப்படும் சோதனைகளே கடலில் எழும் காற்றும்
புயலும். இயேசு அந்த காற்றையும் கடலையும் அடக்கி அதனை அமைதிப்படுத்தி நமது படகின் சூழலை
சமன் செய்கின்றார். புனித அகுஸ்தினாரின் ஓர் உரைக்கு விளக்கமளித்த புனித தாமஸ்
அக்குவினாஸ், “இறைவனின் செயலில் நமக்கு மிகுந்த விசுவாசம்
இருந்தால், "காற்று, புயல், அலைகள் மற்றும்
இருள் ஆகியவற்றால் நமது படகைத் தடம் புரளவோ மூழ்கடிக்கவோ முடியாது" என்று கூறுவதை நாம்
இங்கு நினைவுகூறலாம். இத்தகைய புயல்களின் முன் பலவீனமாகத் தோன்றும், (திருஅவையையும் நமது
வாழ்க்கையையும் அடையாளப்படுத்தும்) படகானது, ஒருபோதும் மூழ்காது
எப்போதும் மிதக்கும்; ஏனெனில், அதன் வழிகாட்டியாக எப்போதும் இருப்பவர் இயேசு கிறிஸ்துவே. வாழ்வின்
எல்லா சூழலிலும் நான் தான் அஞ்சாதீர்கள் என்று கூற இயேசு கிறிஸ்துவே நம்முடன் இருக்கின்றார்
ஆமென்.
