19. நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன் என்று கூறுகின்றார் இயேசு. நற்செய்தியின் பல இடங்களில் ஒளி உப்பு என தன்னை உருவகங்களில் நிலை நிறுத்தும் இயேசு அவரில் நம்பிக்கை கொள்ளும் நமது வாழ்வில் எவ்வாறு ஒளியாக இருக்கின்றார் என்று பார்ப்போம். ஒளி என்றாலே நாம் அறிந்தது சூரிய ஒளி, வீட்டில் பயன்படுத்தும் மின்சார விளக்குகளில் இருந்து கிடைக்கும் ஒளி, நம் கைகளில் வைத்திருக்கும் அலைபேசி அல்லது டார்ச் தரும் ஒளி என பல வகையான ஒளிகளை நாம் அறிவோம். இதில் இயேசு எந்த ஒளியைச் சொல்கின்றார் நாம் எந்த ஒளியில் அவரைக் காண்கின்றோம்.
முதலாவது சூரிய ஒளி.
இதன் பயன்பாடு நாம் நன்கு
அறிந்தது. வைட்டமின் டி, செரோடோமின் என்ற
சுரப்பி, எதிர்ப்பு சக்தி, எலும்புகளுக்கு
வலிமை என சூரிய ஒளியால் கிடைக்கும் பயன்கள் ஏராளம். சூரிய ஒளியினை நாம் காசு கொடுத்து
வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது. அதனால் தானோ
என்னவோ அதன் மகிமையும் மகத்துவமும் யாரும் அறிவதில்லை. மேலை நாட்டவர்கள் இதன் முக்கியத்துவத்தை
நம்மை விட சற்று அதிகமாக உணர்ந்தததாலோ என்னவோ, கோடை காலத்தில்
கடற்கரையில் சூரிய குளியல் செய்துகொள்வதை தங்களது வழக்கமாகக் கொண்டுள்ளனர். நமது முன்னோர்களும்
சூரிய ஒளியிலேயே அத்தனை வேலைகளையும் ஆற்றினர். இத்தகைய தலைமுறையினராகிய நாம் தாம்
அதன் மேன்மையை உணராமல் வீட்டிற்கு உள்ளயே அடங்கிக் கிடக்கின்றோம். அளவுக்கு மீறினால்
அமுதமும் நஞ்சு என்பது நாம் நன்கு அறிந்தது. இயேசுவும் சூரிய ஒளி போல எல்லாக் காலத்திலும்
எல்லாருக்கும் நன்மை செய்பவர். புதிய விடியலை நமக்குக் கொடுப்பவர். கடந்த கால இருளை
அகற்றி ஒளியாகிய புத்துணர்ச்சியைக் கொடுப்பவர். அவரை நமது வாழ்வின் எல்லாமுமாக நாம்
கருதவேண்டும். சூரியன் ஒரு நாள் உதயமாகாமல் இருந்தால் என்ன ஆகும் என்று சிந்தித்துப்
பார்ப்போம். அது போல இயேசுவின்றி நாமில்லை என்பதை உணரவேண்டும்.
இரண்டாவது வீடுகளில் பயன்படுத்தும்
மின்சார ஒளி
இந்த ஒளியானது தேவைக்காக
மட்டுமே நாம் பயன்படுத்துவது. நமது விழா நாள்களில் நமது வீடுகளையும் தெருக்களையும்
இத்தகைய மின்விளக்குகளால் அலங்கரிப்பது. அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி மின்சாரத்தை
விரயமாக்குவது. இயேசுவையும் சில நேரங்களில் நாம் இத்தகைய விளக்குகளின் ஒளி போல பயன்படுத்துகின்றோம்.
தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றார். நாம் பிறர் முன் நம்மை மதிப்பாகக் காட்டிக்கொள்ள
வேண்டும் என்பதற்காகவும் பிறர் நம்மை உயர்வாக மதிக்கவேண்டும் என்பதற்காகவும் இயேசுவை
இத்தகைய ஒளியாகக் கருதுகின்றோம். திருவிழா நாள்களில் விளம்பரத்திற்காக காணிக்கை செய்வது
பிறர் புகழ்ந்து பேசும்படிக்கு உதவிகள் செய்வது என்று நமது வாழ்வில் இயேசுவை ஆடம்பர
ஒளிவிளக்காக கருதி வாழ்கின்றோம்.
இறுதியாக டார்ச் ஒளி
அலைபேசியில் உள்ள டார்ச்
ஒளியோ அல்லது கைகளில் வைத்திருக்கும் டார்ச் ஒளியோ நமக்கு எல்லா நேரத்திலும் உதவுவதில்லை.
எதிர்பாராத இருள் நிறைந்த வேளையில் மட்டுமே அதன் தேவையை நாம் உணருகின்றோம். வாழ்வில் எப்போது சோர்வுறுகின்றோமோ
தளர்ச்சி அடைகின்றோமோ தோல்வியை உணருகின்றோமோ அப்போது மட்டுமே இயேசுவை ஆதாயமாக ஒளியாகக்
கருதுவது இத்தகையோரைச் சார்ந்தது. நம்முடனே இருந்தாலும் அதனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துகின்றோம்.
இயேசுவும் நம்மோடு எல்லாச் சூழலிலும் அருகிருந்தாலும் துன்ப வேளையில் மட்டுமே அவரை
நாம் நாடுகின்றோம்.
ஆக மூன்று வகையான ஒளிகளில்
நாம் எந்த ஒளியாக இயேசுவைக் கருதுகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம். சூரிய
ஒளி போல எந்நாளும் இயேசு நம்மோடு கூட இருக்கின்றார் என்பதை உணர்ந்து அவரின் அருகிருப்பை
உணர்வோம். அப்போது தான் அவரிடமிருந்து கிடைக்கும் எல்லாவிதமான ஆற்றல்களையும் நாம்
முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும். ஆமென்.
