17. நல்ல ஆயன் நானே.

 

இயேசுவே நல்ல ஆயன், ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுப்பவர். இந்த வார்த்தைகளின் வழியாக நல்ல ஆயனை நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்று இயேசு நமக்குச் சொல்கிறார்: தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மனிதர்களைக் கவனித்துக்கொள்ளத் தன்னையே அர்ப்பணிப்பவரே நல்ல ஆயர். நல்ல ஆயனுக்கும் அவனிடம் ஒப்படைக்கப்பட்ட ஆடுகளுக்கும் இடையே ஒரு நெருங்கிய உறவு இருக்கிறது. ஆயன் ஆடுகளை ஒவ்வொன்றாக அறிந்துகொள்கிறான், அவற்றுக்கு மத்தியில் நேரத்தைச் செலவிடுகிறான், அவற்றின் குரலையும், அவை நடக்கும் விதத்தையும் அடையாளம் கண்டுகொள்கிறான். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை ஒருபோதும் கைவிடுவதில்லை, ஏனென்றால் அவை அவனது வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றன. ஆனால், "கூலிக்கு அமர்த்தப்பட்டவன்", அதாவது ஆடுகளைத் தன் சொந்த ஆடுகளைப் போல அன்பு செய்யாதவன், அவற்றின் பராமரிப்பிற்குத் தேவையான அளவு மட்டுமே தன்னை அர்ப்பணிக்கிறான்.

ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுப்பது ஒரு சுதந்திரத்தின் செயல்,  அன்பின் செயல் என்று இயேசு வலியுறுத்துகிறார். ஆடுகள் வாழ்வு பெறும்பொருட்டு தனது உயிரைக் கையளித்த ஒரு ஆயரால் நாம் அன்பு செய்யப்படுகின்றோம். ஆண்டவரின் பாடுகள், நம்மீதுள்ள அவருடைய அன்பின் அளவைக் காட்டினால், அவருடைய உயிர்த்தெழுதல் இந்த அன்பினால் நாம் வெல்லப்படுவதற்கு நம்மை அனுமதிக்கின்றது என்று எடுத்துரைக்கின்றது. நல்ல ஆயன் ஆடுகளை ஓநாய் போன்ற ஆபத்து ஏற்படுத்தும் விலங்குகளிடமிருந்து பாதுகாக்கின்றார். விட்டு ஓடிச்செல்வதில்லை மாறாக எல்லா சூழலிலும் உடன் நிற்கின்றார். தனது கொட்டிலைச் சேராத வேறு ஆடுகளிடமும் அதே அளவு அன்பினைக் காட்டுகின்றார். பாகுபாடு பார்ப்பதில்லை. அனைவரையும் சமமாகப் பார்க்கின்றார். தந்தையைத் தான் அறிந்திருக்கின்றார். அதேபோல ஆடுகளையும் அறிந்திருக்கின்றார் என்று கூறி தனது அன்பின் அளவைச் சுட்டிக் காட்டுகின்றார். உயிரைக் கொடுக்கவும் பெறவும் ஆற்றல் பெற்ற அவர் அவரது மந்தையாம் ஆடுகளாகிய நமக்காக உயிரைக் கையளிக்கின்றார். ஆக நல்ல ஆயன்களாக நம் இயேசுவைப் போல நாமும் வாழ இந்நாளில் அழைக்கப்படுகின்றோம்.

அனைவரிடமும் சமமான அன்பு கொள்பவர்களாக மந்தையைச் சார்ந்தவர்களை நன்கு அறிந்து கொள்பவர்களாக அவர்களுக்காக உயிரக் கொடுக்குமளவுக்குப் பணியாற்றுபவர்களாக இருக்க நாம் அழைக்கப்படுகின்றோம். ஆயனின் உவமை நாம் எளிமையான விதத்தில் அவரது அன்பினை புரிந்து கொள்ள கொடுக்கப்பட்ட உவமை. ஆயன்களின் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துரைக்கும் சிறந்த அடையாள உவமை. எனவே இதன் பொருள் உணர்ந்து நல்ல ஆயன்களாக வாழ முற்படுவோம். ஆமென்.



Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.