7. “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே”

 

   இன்றைய நற்செய்தியில் நாம், இயேசு ஐந்து அப்பங்களும் மூன்று மீன்களும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பகுதியினைக் காண்கின்றோம். இயேசுவின் அரும் செயல்களில் ஒன்றான இது குறித்து நாம் பல கருத்துக்களைக் கேட்டிருப்போம் சற்று வித்தியாசமாக அந்த நிகழ்வில் பங்குபெறும் இயேசு, இயேசுவின் சீடர்களான பிலிப்பு அந்திரேயா பற்றியும் அவர்களின் மனநிலை குறித்தும் காண்போம்.

பிலிப்பு

இயேசுவைப் பின்தொடர்ந்து ஏராளமான மக்கள் கூட்டம் வந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு உணவளிக்க எண்ணுகின்றார் இயேசு எப்படி உணவளிக்கலாம் எங்கிருந்து உணவு வாங்கலாம் என்று இயேசு கேட்க இரு நூறு தெனாரியத்திற்கு உணவு வாங்கினாலும் போதுமானதாக இருக்காது என்று பொருள் சார்ந்த விதத்தில் உலகு சார்ந்த பொருளாதார ரீதியில் பதிலளிக்கின்றார். இது எப்படி நடக்கும் என்று செயல்முறையாக சிந்திப்பவராக இருக்கின்றார் பிலிப்பு. கணக்கு பார்க்க தெரிந்தவர். ஆனால் தன்னோடு இருப்பவர் தங்களிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்ற எண்ணத்தினை மறந்தவராக இருக்கின்றார். நம்முடைய வாழ்வும் பல நேரங்களில் இப்படி தான் இருக்கின்றது. நம்மோடு இயேசு இருக்கின்றார் என்ற எண்ணம் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவரால் எல்லாம் முடியும் நம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைக்க முடியும் என்ற எண்ணமின்றி இருக்கின்றோம். நம் இறைவன் நினைத்தால் நமது வாழ்வில் அளப்பரிய நன்மைகளை ஆற்றமுடியும் ஆனால் அதற்கு நாம் இறைவனில் மிக ஆழமான நம்பிக்கை வைக்க வேண்டும்.

அந்திரேயா

அந்திரேயா பிலிப்பிற்கு மாறாக இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டவராக இருக்கின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக பிரச்சனைக்கான தீர்வினைக் கண்டுபிடிப்பவராக இருக்கின்றார். அங்குள்ள ஐயாயிரம் பேருக்கும் உணவளிக்க அவரிடம் எந்த வழியும் இல்லை ஆனால் ஒரு சிலருடைய பசியைத் தீர்ப்பதற்கான உணவினை வைத்திருந்த அந்த சிறுவனைக் கண்டுபிடிக்கின்றார். இயேசுவிடம் அழைத்தும் வருகின்றார். சிலரிடம் மற்றவருக்குக் கொடுத்து உதவ ஏராளமான பொருள் இருக்கும் ஆனால் அதனை எப்படி தேவைப்படுபவர்களுக்குக் கொண்டு சேர்ப்பது என்ற வழி தெரியாது. அத்தகையோருக்கு வழியாய் அமைகின்றார் அந்திரேயா. அச்சிறுவன் தனது பயணத்திற்காகக் கொண்டு வந்த உணவை பிறரோடு பகிர்ந்து வாழ வழிவகை செய்பவராக இருக்கின்றார். சிறுவனும் விவேகமுள்ள கன்னிகையர்களுள் ஒருவர் போல முன்மதியுடன் தனது பயணத்திற்குத் தேவையான உணவினை எடுத்து செல்லும் பண்பு கொண்டவராக இருக்கின்றார். எல்லா நேரங்களிலும் நாம் அந்த சிறுவனைப் போல நன்மை செய்ய வாய்ப்பு நமக்கு கிடைக்காது சில நேரங்களில் அந்திரேயா போல அந்த நன்மை செய்ய தூண்டுபவர்களாக கூட நாம் இருக்க நேரிடும்.

இறுதியாக இயேசு

மக்கள் மேல் பரிவு கொண்டவராக அவர்களது அப்போதைய தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படுபவராக இருக்கின்றார். உடல் தேவையோடு இருப்பவர்களுக்கு உணவுதான் தேவை என்பதை உணர்ந்து அவர்களுக்கு உணவளிக்கின்றார். மக்களை அமரச் செய்து உண்ணச்செய்கின்றார். ஆயனாக இளைப்பாற்றுகின்றார். செபிக்கின்றார் இறைத்தந்தையை மகிமைப்படுத்துகின்றார். தன்னை பிடித்து அரசராக்க எண்ணுகின்றார்கள் என்று அறிந்து அங்கிருந்து விலகுகின்றார். மக்கள் கூட்டத்தின் கைதட்டலிலோ, அல்லது அவருக்குச் சற்றும் பொருந்தாத ஒரு பட்டத்தை அவர்கள் அவருக்குச் சூட்டுவதிலோ இயேசுவுக்குச் சிறிதும் அக்கறை இல்லை. அப்பத்தைப் பலுகிப் பெருகச் செய்தது போலவே, அதைவிட மிக முக்கியமானதும் அவசியமானதுமான தனது திருவுடல் மற்றும் திருஇரத்தம் என்னும் அப்பத்தையும் அவர் பெருகச் செய்வார் என்ற நம்பிக்கை நாம் கொள்ள இந்நிகழ்வின் வழியாக நமக்கு வலியுறுத்துகின்றார்.

எனவே அன்பு உள்ளங்களே இறைவன் நமக்கு அருளை வழங்கும் போது, ​​அவற்றின் பொருள் சார்ந்த முக்கியத்துவத்தோடு நின்றுவிடாமல், அவற்றையும் கடந்து செல்ல முயல்வோம். ஏனெனில் “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே”



Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.