21. “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்”
இறைவாக்கினர்களுக்கு சொந்த ஊரில் மதிப்பு இல்லை என்பதை இயேசு தனது வாழ்வில் பலமுறை அனுபவித்திருப்பார். அதனை தனது செயல்களிலும் எடுத்துரைத்திருப்பார். நாசரேத்தில் புதுமைகள் எதுவும் செய்யாமல் அதனை எண்பிக்கிறார். நம்பிக்கையும் எதிர்நோக்கும் ஒன்றொடொன்று நெருங்கிய தொடர்புடையவை. நாம் ஒருவரை நம்பவில்லை என்றால், அவர்களின் உற்சாகத்தை நாம் குறைத்துவிடுகின்றோம். மாறாக அவர்களை நாம் நம்பும்போது, அவர்களின் வெற்றியில் பங்குபெறும் ஒரு அங்கமாகிவிடுகின்றோம்.
வாழ்க்கையில் நாம் பிறந்தது
முதல் இப்போது வரை பலமுறை கீழே விழுந்திருப்போம். அதுவும் நடைபழகும் காலத்தில் கீழே
விழுந்த எண்ணிக்கை கணக்கிலடங்காதவை. நடக்க பழகும்போது மட்டுமல்ல புதிதாக ஒன்றை நாம்
கற்றுக்கொள்ளும்போது எல்லாம் ஏராளமான முறை விழுந்திருப்போம். மிதிவண்டி, இருசக்கர வாகனம் நீச்சல் குதிரை சவாரி சொல்லப்போனால் காதல் என்னும் உணர்வினைக்
கற்றுக்கொள்ளும்போது பலமுறை விழுகின்றோம். ஆக புதியன கற்கும்போது பல அடிகள் படத்தான்
செய்யும் என்பதை மனதில் கொண்டு நாம் முன்னேறிச்செல்ல வேண்டும். சின்ன வயதில் நான் விழ்ந்துவிட்டேன் அதனால் நடக்க
மாட்டேன் என்று அஞ்சி நடுங்கி இருந்தால் இப்போது நாலு கால் பாய்ச்சலில் நம்மால் ஓட
முடிந்திருக்குமா?
சின்ன வயதில் இருந்தது போலவா
இப்போதுவ ரை இருக்கின்றோம். நாம் நம்மீது கொள்ளும் நம்பிக்கை எதிர்வருவதை ஏற்கும்
மனதுணிவு என பல பண்புகளை நாம் நம்மகத்தே கொண்டு முன்னேறிச் செல்கின்றோம். நமது பார்வை
மாறுகின்றது ஆனால் நம்மைப் பார்க்கும் மனிதர்களின் பார்வைகள் தான் சில நேரங்களில் மாறாமல்
இருக்கின்றது. அதேபோல் தான் இயேசுவின் வாழ்விலும் நடைபெறுகின்றது. சிறுவயதில் தனது தந்தைக்கு உதவியாக தச்சுப்பணிகளில்
ஈடுபட்டவர் குறும்புத்தனத்தால் சிறு சிறு வழக்குகளை கொண்டு வந்தவர் தன்னுடம் விளையாடிய
சிறாருக்கு சில வேடிக்கை நிகழ்வுகளைக் காட்டியவர் என பலவற்றை நாம் புனித தோமாவின்
நற்செய்தியில் காணலாம். சிறுவனுக்கே உரிய பண்பு நலன்களைக் கொண்டு இளம்பருவத்தை
இன்பமாய் கழித்தவரை, அற்புதங்கள் புரிபவராக
,அதிசயதக்கவகையில் பேசுபவராக அவர்களால் நினைத்து கூட பார்க்க
முடியவில்லை. இவை அனைத்தும் அவர்களின் வார்த்தையில் வெளிப்படுகின்றது. அவர்களது நம்பிக்கையின்மை
இயேசுவை துணிந்து போதிக்கவும், அற்புதங்கள் செய்யவும்
தடுக்கின்றது. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு வருந்துகின்றார். இன்று நாம் தொழிலாளரான
தூய யோசேப்பின் விழாவினைக் கொண்டாடுகின்றோம். உழைப்பாளர்களின் பாதுகாவலராக இருக்கும்
சூசை தந்தையின் மகனாக இன்று நற்செய்தியில் சுட்டிக் காட்டப்படுகின்றார் இயேசு.
இயேசுவை உடல் உள்ள வலிமை கொண்டவராக மட்டுமன்றி ஆன்ம பலம் கொண்டவராகவும் வளர்த்தெடுத்த பெருமை யோசேப்பைச் சாரும். தோமா நற்செய்தியில் வரும் ஒரு நிகழ்வு ஒன்றினை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இயேசுவின் குழந்தைப் பருவத்தில் தச்சராகிய யோசேப்பிற்கு கட்டில் ஒன்று செய்யும் வேலை கொடுக்கப்படுகின்றது. ஆனால் அதற்கான பலகையின் நீளம் குறைவாக இருக்க அதனால் வருந்திய இயேசு தனது தந்தையின் சூழல் கண்டு அவருக்கு உதவ வருகின்றார். அவருடைய் உதவியினால் அப்பணி எளிதில் நிறைவடைகின்றது. இத்தகைய வல்லமை பெற்றவரை மகனாகப் பெறும் பேற்றை எண்ணி சூசை தந்தை அவரைக் கட்டி அணைத்து மகிழ்கின்றார். இன்று நாம் விழா கொண்டாடும் யோசேப்பு நம்மை பார்த்து இத்தகைய மகிழ்ச்சியை அடைகின்றாரா என்று சிந்தித்துப் பார்ப்போம். உழைக்கும் மக்கள் தந்தையர்கள் என அனைவரையும் நினைவுகூர்ந்து செபிக்கும் இந்நாளில் யாரையும் அவர்களது பிறப்பு குறித்த எண்ணம் கொண்டு மதிப்பிடாமல் இருப்போம். அதற்கு மாறாக அவர்களின் இயல்பரிந்து உலகெங்கும் மதிப்பு பெறும் இறைவாக்கினர்களாக இருக்க முயல்வோம். ஆமென்.
